10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் வரவுள்ள ஐ.சி.சி நடுவர்கள்

  • September 23, 2019
  • 183
  • Aroos Samsudeen
10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் வரவுள்ள ஐ.சி.சி நடுவர்கள்

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.  

இதன்படி, அவுஸ்திரேலியாவின் டேவிட் பூன் இந்தத் தொடரின் போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளதுடன், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்கல் அன்ட்ரூ கோப் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் வில்சன் ஆகியோர் போட்டி நடுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சியின் அனுமதியுடன் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு போட்டி மத்தியஸ்தர் மற்றும் போட்டி நடுவர்கள் பாகிஸ்தான் வரவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தொடருக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்கள் விபரம் ஐ.சி.சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில், இலங்கை அணி வீரர்கள் சிலர் காயமடைந்ததோடு, பொலிஸார் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செல்வதை கிரிக்கெட் அணிகள் தவிர்த்தன. எனினும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாடின.

2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயை பாகிஸ்தான் வரவழைத்து விளையாடியதுடன், அந்த அணி வீரர்களுக்கு இரு மடங்கு பணப்பரிசினையும் பரிசளித்தது.

எனினும், குறித்த தொடருக்காக பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஐ.சி.சி எந்தவொரு போட்டி மத்தியஸ்தரையோ அல்லது நடுவர்களை அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே நாட்டு நடுவர்களை நியமித்து போட்டியை நடத்துவதற்கான அனுமதியையும் ஐ.சி.சி வழங்கியிருந்தது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கு அங்குள்ள பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் குறித்த தொடர் இரத்து செய்யப்படுமா என்ற சந்தேகமும் எழுந்தது.

எனினும், இலங்கை அரசு பாதுகாப்பு தொடர்பில் இறுதி அறிக்கையொன்றை வழங்கியதையடுத்து அந்தத் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை அணியுடன் விளையாடவுள்ள பாகிஸ்தான் குழாமும் நேற்று (21) அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தொடருக்கான நடுவர்களையும், போட்டி மத்தியஸ்தரையும் நியமிப்பதற்கு முன்னர் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு ஐ.சி.சியும் நடவடிக்கை எடுத்தது.

எனவே, அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பிரத்தியேக மதீப்பீடொன்றை முன்னெடுத்த பிறகு ஐ.சி.சியினால் இந்தத் தொடருக்காக மத்தியஸ்தர் ஒருவரும், போட்டி நடுவர்களும் நேற்று (21) அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரின் மத்தியஸ்தராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் பூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1984 முதல் 1994 வரை அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிய 58 வயதான இவர், 107 டெஸ்ட், 181 ஒருநாள் போட்டிகளில்   அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.

இதனையடுத்து 2011ஆம் ஆண்டு முதல் ஐ.சி.சியின் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்டு வருகின்ற அவர், இதுவரை 135 ஒருநாள் மற்றும் 51 டி-20 போட்டிகளில் மத்தியஸ்தராகவும் செயற்பட்டுள்ளார்.

இதேநேரம், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஜொயல் வி;ல்சன் முதல்தடவையாக பாகிஸ்தானுக்கு வருகை தரவுள்ளதுடன், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்கல் அன்ட்ரூ கோப் 2ஆவது தடவையாக அங்கு செல்லவுள்ளார். முன்னதாக இவ்வருட முற்பகுதியில் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் அவர் நடுவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நான்கு நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐ.சி.சியின் முன்னணி போட்டி நடுவர்களில் ஒருவரான அலிம் டார் இடம்பெற்றுள்ளார்.

இவர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியிலும், அதன்பிறகு நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடர்களிலும் போட்டி நடுவராக கடமையாற்றவுள்ளார்.

இவருடன், அஹ்சன் ராசா, ஷொசாப் ராசா மற்றும் ஆசிப் யாகூப் ஆகியோரும் போட்டி நடுவர்களாக பெயரிடப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் 48 வயதான அஹ்சன் ராசா,2009ஆம் ஆண்டு இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய போட்டி நடுவர்களில் ஒருவர். அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூட்டினால் பலத்த காயத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய அவருக்கு சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags :
comments