இலங்கை 19 வயதின்கீழ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுனராக சச்சித் பத்திரன

  • September 28, 2019
  • 57
  • Aroos Samsudeen
இலங்கை 19 வயதின்கீழ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுனராக சச்சித் பத்திரன

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவராக வலம்வந்த சச்சித் பத்திரன, இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்றுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த பதவிக்கான நேர்முகப் பரீட்சை நடத்தியிருந்ததுடன், சச்சித் பத்திரன மற்றும் முன்னாள் இலங்கை அணி வீரரான சஜீவ வீரக்கோன் ஆகிய இருவரும் குறித்த பதவிக்காக போட்டியிருந்தனர்.

இந்த நிலையில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்றுனராக சச்சித் பத்திரனவை நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 வயதுடைய சகலதுறை வீரரான சச்சித் பத்திரன, இலங்கை அணிக்காக இதுவரை 18 ஒருநாள் போட்டிகளிலும், 5 T20i போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர், அதே வருடம் லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான ஒற்றை டி-20 போட்டியிலும் விளையாடியிருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, 94 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 21 முறை ஐந்து விக்கெட்டுக்கள் பிரதியுடன் 320 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கின்ற அவர் முதல்தரப் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 22 அரைச் சதங்களுடன் 3,714 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இதில் கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டியில் புளும்பீல்ட் அணிக்கெதிராக 168 ஓட்டங்களைக் குவித்த அவர் முதல்தரப் போட்டிகளில் தனது அதிகபட்ச ஓட்டங்களையும் பதிவு செய்தார்.

இதுஇவ்வாறிருக்க, சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து இதுவரை ஓய்வை அறிவிக்காத அவர், கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூர் கழக மட்டத்தில் ஒரு பயிற்சியாளராக மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார்.

இதில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கான 3ஆம் நிலை சான்றிதழையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில்,2018ஆம் ஆண்டு பதுரெலிய கிரிக்கெட் கழகத்தின் பயிற்சியாளராகக் கடமையாற்றிய அவர், அந்த கழகத்துக்காகவும் குறித்த காலப்பகுதியில் விளையாடியிருந்தார். அத்துடன், அதே வருடம் கண்டி கிரிக்கெட் கழகத்தின் ஆலோசகராகவும் அவர் செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, தனது 17ஆவது வயதில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவராகச் செயற்பட்ட சச்சித் பத்திரன, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் முதல்தடவையாகக் களமிறங்கி 231 ஓட்டங்களைக் குவித்து 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இரண்டு தடவைகள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்காக விளையாடிய அவர்,19 வயதுக்குட்பட்ட அணிக்காக அதிக தொடர்களில் பங்கேற்ற வீரராகவும், அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராகவும் சாதனை ஏட்டில் தனது பெயரை பதிவுசெய்துள்ளார்.

 

Tags :
comments