சமரி அதபத்துவின் சாதனை சதம் வீண் : முதல் T20i ஆஸி வசம்

  • September 30, 2019
  • 143
  • Aroos Samsudeen
சமரி அதபத்துவின் சாதனை சதம் வீண் : முதல் T20i ஆஸி வசம்

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை மகளிர் அணிக்கெதிரான சர்வதேச T20 தொடரின் முதல் போட்டியை கடும் சவாலுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா மகளிர் அணி 41 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி, முதல் விக்கெட்டுக்காக இணைந்த பெத் மூனி மற்றும் அலீசா ஹீலி ஜோடி 72 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

அடுத்து, மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த பெத் மூனி மற்றும் அஷ்லீக் கார்னர் 115 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 196 ஆக உயர்த்தினர்.

இறுதியில் ஆஸி. மகளிர் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களைப் பெற்றனர். பெத் மூனி 61 பந்துகளில் 20 பௌண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்களையும் அஷ்லீக் கார்னர் 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அலீசா ஹீலியும் தன் பங்கிற்கு 21 பந்துகளில் 43 ஓட்டங்களைக் குவித்து, அணியை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றார். இலங்கை சார்பாக, ஒசதி ரணசிங்க 2 விக்கெட்டுக்களையும் சமரி அதபத்து மற்றும் ஷசிகலா சிறிவர்தன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், 218 ஓட்டங்கள் என்ற பாரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. போட்டியின் இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை மகளிர் அணி, 176 ஓட்டங்களைப் பெற்று 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

எனினும், 18 ஆவது ஓவர் வரை தனித்து நின்று போராடிய அணித் தலைவி சமரி அதபத்து T20i போட்டிகளில் தனது முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். 66 பந்துகளை எதிர்கொண்ட சமரி அதபத்து, 6 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இது இலங்கை மகளிர் அணி சார்பாக பெறப்பட்ட முதலாவது T20i சதமாகவும், மகளிர் T20 போட்டிகளில் வேகமாகப் பெறப்பட்ட 8ஆவது சதமாகவும் பதிவாகியது.

அவரைத் தவிர ஹன்சிமா கருணாரத்ன 16 ஓட்டங்களையும் நிலக்ஷி டி சில்வா 10 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். ஜோர்ஜியா வாரீஹம் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றிய அதேவேளை, மேகன், டேலா மற்றும் டிலீசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். போட்டியின் சிறந்த வீராங்கனையாக பெத் மூனி தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்பிரகாரம் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலிய மகளிர் அணி முன்னிலை பெற்றுள்ளது.

Tags :
comments