இலங்கை A அணிக்காக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மொஹமட் சிராஸ்

  • October 7, 2019
  • 126
  • Aroos Samsudeen
இலங்கை A அணிக்காக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மொஹமட் சிராஸ்

அம்பாந்தோட்டையில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸின் அபாரப் பந்துவீச்சால் பங்களாதேஷ் A அணி முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற 24 வயதுடைய வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ் அபாரமாகப் பந்துவீசி 63 ஓட்டங்ளை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ஓட்டங்களுடன் இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய பங்களாதேஷ் A அணி கூடுதலாக 62 ஓட்டங்களை எடுத்து மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை A, பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி, பெதும் நிஸ்ஸங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் A அணி வீரர்கள் மொமினுல் ஹக்கின் சதம் மற்றும் சத்மான் இஸ்லாம் அரைச் சதத்தின் உதவியுடன் நேற்றைய 3 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ஓட்டங்களை எடுத்திருந்தது.

நூறுல் ஹசன் 35 ஓட்டங்களுடனும், மெஹெடி ஹசன் மீராஸ் 6 ஓட்டங்களுடனும் இன்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

போட்டி ஆரம்பமாகியது முதல் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பங்களாதேஷ் வீரர்கள் தடுமாறியிருந்தனர்.

அசித பெர்னாண்டோ வீசிய ஓவரில் லஹிரு உதாரவிடம் பிடிகொடுத்து நூறுல் ஹசன் 36 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ரிஷாட் ஹொசைன் 7 ஓட்டங்களை எடுத்த நிலையில் லஹிரு உதாரவிடம் பிடிகொடுத்து மொஹமட் சிராஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, சலாவுத்தீன் சாகில் (4) பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் வெளியேற, இறுதி விக்கெட்டாக இபாதத் ஹொசைன் (0) ஓட்டமின்றி மொஹமட் சிராஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பங்களாதேஷ் A அணி 83.1 ஓவர்களில் 330 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை A அணி சார்பில் மொஹமட் சிராஸ் 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் பிரபாத் ஜயசூரிய 114 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 62 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை A அணி தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்க மற்றும் சங்கீத் குரே ஜோடி முதல் விக்கெட்டுக்காக 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதன்படி, போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை A அணி, விக்கெட் இழப்பின்றி 126 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பெதும் நிஸ்ஸங்க 75 ஓட்டங்களுடனும் (125 பந்துகள், 10 பௌண்டரிகள்), சங்கீத் குரே 50 ஓட்டங்களுடனும் (103 பந்துகள், 7 பௌண்டரிகள்) களத்தில் உள்ளனர்.

நாளை போட்டியின் நான்காவதும், இறுதியுமான நாளாகும்.

Tags :
comments