சஜித், கோட்டாபய, அநுர உட்பட 35 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் – ஜனாதிபதித் தேர்தல் சமர் ஆரம்பம்

  • October 7, 2019
  • 96
  • Aroos Samsudeen
சஜித், கோட்டாபய, அநுர உட்பட 35 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்  – ஜனாதிபதித் தேர்தல் சமர் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று தாக்கல் செய்யப்பட்ட 35 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9 மணி முற்பகல் 11 மணி வரையான காலப் பகுதியில் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது.

இதன்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் மொத்தமாகக் கட்டுப்பணம் செலுத்தப்பட்ட 41 ஜனாதிபதி வேட்பாளர்களில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 35 பேர் மாத்திரம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 18 வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சார்பில் 2 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 15 வேட்பாளர்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இதன்பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு முற்பகல் 11.10 மணி தொடக்கம் 11.40 மணி வரை 30 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன்போது இரண்டு முறைப்பாடுகள் மட்டும் தெரிவிக்கப்பட்டன. எனினும், குறித்த இரண்டு முறைப்பாடுகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிரகாரிக்கப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட 35 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதியும் வழங்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தேர்தலாக இது அமைந்துள்ளது. இதனால் நீளமான வாக்குச்சீட்டை அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

Tags :
comments