பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை

  • October 8, 2019
  • 136
  • Aroos Samsudeen
பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று (07) லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஒட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் பானுக ராஜபக்ஷ அதிகபட்சமாக 77 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செஹான் ஜயசூரிய 34 ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அவ்வணி சார்பாக இமத் வசீம் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் நுவன் பிரதீப் 4 விக்கட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 3 மூன்று விக்கெட்டுக்களையும், இசுரு உதான 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, இலங்கை அணி 36 ஒட்டங்களால் இரண்டாவது ரி20 போட்டியையும் வெற்றிக் கொண்டு தொடரை கைப்பற்றியுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி ரி20 போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Tags :
comments