தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியா வசம்

  • October 14, 2019
  • 149
  • Aroos Samsudeen
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியா வசம்

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.

மேலும், இந்திய அணி இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற, இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (10) புனே நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார்.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி இமாலய துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தமது முதல் இன்னிங்ஸிற்காக 156.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 601 ஓட்டங்களை குவித்திருந்தபோது ஆட்டத்தினை இடை நிறுத்தியது.

இந்திய அணியின் சார்பில், அதன் தலைவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தி 33 பெளண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 254 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இதேநேரம், மயான்க் அகர்வால் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தோடு 108 ஓட்டங்களை குவித்தார். இதுதவிர ரவிந்திர ஜடேஜா (91), அஜிங்கியா ரஹானே (59) மற்றும் செட்டெஸ்வர் புஜாரா (58) ஆகியோர் அரைச்சதங்கள் பெற்றிருந்தனர்.

மறுமுனையில் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் ககிஸோ றபாடா 3 விக்கெட்டுக்களை சாய்க்க, ஏனைய பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி இறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, 105.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 275 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் கேசவ் மஹராஜ் 72 ஓட்டங்கள் குவித்து தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் 64 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுக்களை சாய்க்க, உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் மீண்டும் தமது இரண்டாம் இன்னிங்ஸில் பலோவ் ஒன் முறையில் துடுப்பாடியது.

இந்தமுறை, மிகவும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 67.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் டீன் எல்கார் 48 ஓட்டங்களுடன் தனது தரப்பில் அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்திருந்தார்.

இதேநேரம், இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ரவிந்திர ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இருந்ததோடு, ரவிச்சந்திர அஸ்வின் 2 விக்கெட்டுக்களை சுருட்டி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவாகியிருந்தார்.

இப்போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்திருக்கும் தென்னாபிரிக்க அணி, இந்திய அணியுடன் ஆறுதல் வெற்றியொன்றை எதிர்பார்த்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (19) ரான்ச்சி நகரில் வைத்து விளையாடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 601/5d (156.3) விராட் கோலி 254*, மயான்க் அகர்வால் 108, ரவிந்திர ஜடேஜா 91, அஜிங்கியா ரஹானே 59, செட்டெஸ்வார் புஜாரா 58, ககிஸோ றபாடா 93/3

தென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்) – 275 (105.4) கேசவ் மஹராஜ் 72, பாப் டு பிளேசிஸ் 64, வெர்னன் பிலாந்தர் 44*, ரவிச்சந்திர அஸ்வின் 69/4, உமேஷ் யாதவ் 37/3, மொஹமட் சமி 44/2

தென்னாபிரிக்கா (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 189 (67.2) டீன் எல்கார் 48, உமேஷ் யாதவ் 22/3, ரவிந்திர ஜடேஜா 52/3, ரவிந்திரன் அஸ்வின் 45/2

முடிவு – இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றி 

Tags :
comments