நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் அணி என்ற 3-1 என்ற செட்கள் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் செட்டை இலங்கை அணி 23-25 என இழந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் தொடர்ச்சியாக வெற்றிக்கொண்டது. இதன்படி, 23-25, 25-20, 25-16 மற்றும் 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தக்கவைத்தது.
தங்களுடைய முதல் லீக் போட்டியில் மாலைத் தீவுகள் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 3-0 என்ற நேர் செட்கள் கணக்கில் வெற்றியீட்டியது. முதல் செட்டை 25-18 என கைப்பற்றிய இலங்கை அணி, அடுத்த இரண்டு செட்களையும் 25-23 மற்றும் 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக்கொண்டது.
எனினும், இதற்கு அடுத்து நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 1-3 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் செட்டை 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. எனினும், அடுத்த மூன்று செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி 25-18, 25-20 மற்றும் 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது.
எவ்வாறாயினும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை, இந்திய அணியை எதிர்கொண்டது. குறித்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களையும் 27-25, 25-19 என இந்திய அணி கைப்பற்ற, மூன்றாவது செட்டை இலங்கை அணி 25-21 என கைப்பற்றியது. அடுத்த செட்டை இந்திய அணி 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்ற, இலங்கை அணி 1-3 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.