ஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க

  • April 21, 2019
  • 257
  • Aroos Samsudeen
ஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க

சீனாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சிரேஷ்ட பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் டிலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டித் தொடராக கருதப்படுகின்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 18ஆம் திகதி சீனாவின் நிங்போ நகரில் ஆரம்பமாகியது.

இம்முறை போட்டிகளில் இலங்கை சார்பாக நான்கு வீரர்களும், இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றியுள்ளனர்.

இந்த நிலையில், போட்டிகளின் மூன்றாவது நாளான இன்று (20) நடைபெற்ற ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் கலந்துகொண்ட டிலங்க இசுரு குமார, மொத்தமாக 240 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இவர் ஸ்னெச் முறையில் 105 கிலோ கிராம் எடையையும், ஜேர்க் முறையில் 135 கிலோ கிராம் எடையையும் தூக்கி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக சிரேஷ்ட பிரிவில் பதக்கமொன்றை வெற்றிகொண்ட முதல் வீரராகவும் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திக்க திஸாநாயக்க (73 கிலோ கிராம் எடைப்பிரிவு), சின்தன கீதால் விதானகே (81 கிலோ கிராம் எடைப்பிரிவு), திலங்க பலகசிங்க (61 கிலோ கிராம் எடைப்பிரிவு), ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹன்சனி கோமஸ் (49 கிலோ கிராம் எடைப்பிரிவு) மற்றும் சமரி வர்ணகுலசூரிய ஆகியோர் பெண்கள் பிரிவிலும் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளனர்.

Tags :
comments