முஸ்லிம் ஆசிரியைகளை வற்புறுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றேன் – இளைஞர் அமைப்பாளர் முஸர்ரப்

  • May 8, 2019
  • 558
  • Aroos Samsudeen
முஸ்லிம் ஆசிரியைகளை வற்புறுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றேன் – இளைஞர் அமைப்பாளர் முஸர்ரப்

அவிஸ்ஸாவல புவக்பிட்டியவில் சாரி அணிந்து கொண்டு வரும்படி முஸ்லிம் ஆசிரியைகளை வற்புறுத்திய சக ஆசிரியர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான சட்டத்தரணி முகம்மட் முஸர்ரப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முகத்தை முழுவதுமாக மறைக்கும் புர்கவைதான் தடை செய்துள்ளதேயன்றி ஸ்காப் அணிவதையோ, ஹபாயா அணிவதையோ தடை செய்யவில்லை. சிறுபான்மை சமூகத்தின் வலியை நன்கறிந்த சமூகத்திலிருந்து சக ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது வேதனை அளிக்கின்றது.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதிலிருந்து இலங்கையராகிய நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்து கொள்வதே இந்த தேசத்திற்கு ஆற்ற வேண்டிய மகத்தான பணியாக உள்ளது. மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் பயங்கரவாதத்தை துடைத்தெறியவே முஸ்லிம்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதன் காரணமாகத்தான் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.

தீவிரவாதிகள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே ராணுவத்துக்கு தகவல் வழங்குகின்றனர். ஒரு சில மிலேச்சத்தனமானவர்களால் ஏற்பட்ட கறையையும், பழியையும் போக்க முழு்மூச்சுடன் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இத்தகைய சூழலில் புவக்பிட்டிய பாடசாலையில் குறித்த ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட செயல் ஆழ்ந்த கவலையையும் கூடவே எதிர்காலம் பற்றிய பயத்தையும் உருவாக்குகிறது.

90 களில் ஆங்காங்கே தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட சிறு சிறு அத்து மீறல்கள்தான் எமது நாட்டில் மீளமுடியாத வடுக்களையும் 3 தசாப்த கொடிய யுத்தத்தையும் இந்நாட்டில் தோற்றுவித்து. இதனால் எமது தேசம் அடைந்த பின்னடைவு கொஞ்ச நஞ்சமல்ல.

இனி ஒரு போதும் அத்தகைய பேரழிவு எமது தேசத்திற்கு ஏற்படக்கூடாது. மூவினமும் ஒன்று பட்டு தேசத்துரோகிகளை அழித்தொழித்துவிட்டு இந்நாட்டை மிண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நாம் இரு சமூகங்களுக்கிடையே சிராய்ப்புகள் ஏற்படாமல் பொறுப்புணர்வுடன் வாழப்பழகுவோம்.

அதிலும் ஆசிரியர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டியவர்கள். நமக்காக இல்லாவிடினும் அடுத்த தலைமுறையின் சுபீட்சத்திற்காகவேனும் பொறுப்புடன் நடந்து கொள்வோம்.

Tags :
comments