முஸ்லிம் பிரமுகர்களின் கருத்தாடல்கள் இனவாதிகளுக்கு தீனியாக அமைந்துவிடக் கூடாது – `ஹிஸ்புல்லாவின் பேச்சு தொடர்பில் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி அறிக்கை

முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் இராஜினாமாவின் பின்னர் நாட்டில் ஓரளவு அமைதியான நிலை ஏற்பட்டு வருகின்ற சூழ்நிலையில் முஸ்லிம் பிரமுகர்கள் பேசுகின்ற சில விடயங்களை பேரினவாத சக்திகள் தமது நோக்கத்தை அடைவதற்கான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி மீண்டும் சர்ச்சையை உருவாக்க முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் பிரமுகர்களின் கருத்துக்கள் தொடர்பில் முன்னணி சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.

முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மையினாராக காணப்பட்டாலும் உலகளவில் பெரும்பான்மை, முஸ்லிம்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது, அறபு நாடுகளின் பிச்சையில் நாடு நிர்வகிகக்கப்படுகிறது போன்ற விடயங்களை முன்னணி சிங்கள தொலைக்காட்சிகள் மற்றும் லங்கா தீப போன்ற பத்திரிகைகள் தமது தலைப்புச் செய்திகளாக வெளியிட்டுள்ளன. இவ்விடயங்கள் சாதாரண அப்பாவி சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பேரினவாத சக்திகளினால் பிரச்சாரப்படுத்தப்படுகின்றன. இதனால் மீண்டும் ஒரு அசாதாரண சூழலை தோற்றுவிக்க முற்படுகின்றனர்.

இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் நிர்க்கதிக்குள்ளாகி மிகவும் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றபோது பேரினவாத சக்திகள் இன முறுகலை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்ற சூழலில் முஸ்லிம் பிரமுகர்கள் மிகவும் நிதானமாகவும் அவதானமாகவும் புத்திசாதுரியமாகவும் பேசவேண்டும். குறிப்பாக சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு என்பவற்றிற்காக மிக நிதானமாக கருத்துக்களை முன்வைக்க முஸ்லிம் பிரமுகர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் மக்கள் மத்தியில் கருத்துக்களை கூறி அவர்களை ஆசுவாசப்படுத்துவதை விட பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் சம்பந்தமான நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதுதான் இந்த கால கட்டத்தில் முக்கிய தேவையாக இருக்கின்றது. ஏனெனில் முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் நசுக்குவதற்கு பேரினவாத சக்திகள் காத்திருக்கும் நிலையில் அவர்களின் இனவாத பிரச்சாரத்திற்கு நாமே இடமளிப்பது துரதிஷ்டவசமாகும். வலிந்து அவர்களை பிரச்சினைக்கு அழைப்பது போன்று எமது கருத்துக்கள் மாறிவிடலாம். எனவே சமயோசிதமாக சிந்தித்து செயற்பட வேண்டுடிமன ஹரீஸ் கேட்டுக்கொண்டார்.

– ஊடகப் பிரிவு –