விசாரணைகளை மேலும் இறுக்குகிறது பாராளுமன்றத் தெரிவுக்குழு – ஹிஸ்புல்லாஹ் – இலங்கக்கோனுக்கு அழைப்பு !

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் ஆகியோரை நாளை மறுதினம் சாட்சியமளிக்க அழைப்பதென உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.

இதில் மிக முக்கிய விடயம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் , இதே தாக்குதல்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினராவார்.

அந்தக் குழு அறிக்கையினை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ள நிலையில் – குழுவானது எந்த அடிப்படையில் எப்படியான விசாரணைகளை மேற்கொண்டது என்பதை கேட்பதற்காகவே இலங்ககோன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் அழைக்கப்படவுள்ளார்.

ஏற்கனவே இந்த தெரிவுக்குழுவை ரத்துச் செய்ய ஜனாதிபதி வலியுறுத்தி வரும் நிலையில் அவர் நியமித்த குழுவின் உறுப்பினர் ஒருவரை தெரிவுக்குழு அழைத்திருப்பது ஜனாதிபதிக்கு மேலும் விசனத்தை ஏற்படுத்தக் கூடுமென அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.

இதேவேளை இன்று சாட்சியம் வழங்கிய காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனங்கள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி அப்துல் உவைஸ் ,ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்ததையடுத்தே அது குறித்தான விளக்கங்களை கேட்க ஹிஸ்புல்லாஹ் நாளை மறுதினம் தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளார்.