முஸ்லிங்கள் அதிகம் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது ஐ.தே.க அரசாங்கத்தில் என்பதனை அடித்துச் சொல்லலாம்.

  • June 13, 2019
  • 636
  • Aroos Samsudeen
முஸ்லிங்கள் அதிகம் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது ஐ.தே.க அரசாங்கத்தில் என்பதனை அடித்துச் சொல்லலாம்.

(ஷிபான் BM)

ஆழ யோசித்துப் பார்த்தால் பெருவாரியான முஸ்லிங்களின் ஒரு பக்கம்சார் சிந்தனையே அரசியலில் இந்த அழிவுகளுக்கு பின்னணியில் இருக்குமோ என எண்ணத்தோன்றுகின்றது.

குறிப்பாக அதிகளவான முஸ்லிம்கள் விரும்பியோ விரும்பாமலோ ஐ.தே.கா அரசை தலையில் வைத்து ஆதரிக்கின்ற மனோ நிலையில் உள்ளவர்களே! இதற்கு தலைவர்களும் விதிவிலக்கல்ல.

இத்தனைக்கும் பொதுவாக முஸ்லிங்கள் அதிகம் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது ஐ.தே.க அரசாங்கத்தில் என்பதனை அடித்துச் சொல்லலாம்.

அதிமேதகு ஜனாதிபதி பிரேமதாஸா மட்டக்களப்பில் நின்ற சந்தர்ப்பத்திலேயே சுமார் 700 பொலிஸார் கடத்தப்பட்டு நிராயுதபாணியாக கஞ்சுகுடிச்சாற்றிலே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். 90 களில் வடக்கிலே முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர்.

2003 கெளரவ ரணில் உள்ள போதே மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இன்னும் பல.

2015 இன் பின் திகனை, கண்டிக்கலவரம். குருநாகல் கலவரம், மட்டுமன்றி முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதற்கான தடை. அபாயா சர்ச்சை. அரபு மொழித் தடை. இத்தனைக்கும் மேலாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ரீதியில் முஸ்லிம்களின் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் என்ற மனோநிலையில் வந்து நிற்கிறது.

மறுபக்கம் நோக்கின் மகிந்தவை ஆராய்ந்து அறியாமலையே முஸ்லிம்கள் மகிந்தவினை தோல்வியடையச் செய்ய அரும் பங்காற்றியுள்ளோம்.

2005 ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கா மோகம் ரணிலை ஜனாதிபதியாக்கத்துணிந்து மகிந்தவை எதிர்த்து வாக்களித்தோம்.

2010 கொடூர யுத்தத்தினை முடித்த இந்த நாட்டின் தலைவன் மகிந்தவுக்கு எதிரணியில் நின்று தளபதி பொன்சேக்காவை ஆதரித்தோம்.

2015 தலைவர்கள் முடிவெடுக்க முன்பதாகவே மக்கள் முண்டியடித்து முடிவெடுத்து அதிமேதாவி ஜனாதிபதி மைத்திரியை தெரிந்து கொண்டோம்.

இறுதியில் 52 நாள் அடாத்தான ஆட்சிமாற்றப் புரட்சியில் முஸ்லிம் தலைவர்கள் சேர்ந்து மகிந்தரின் முகத்தின் மீது கரி பூசி வீட்டுக்கு அனுப்பினோம்.

இத்தனைக்கும் பொதுவிலே மகிந்தவின் இறுதி காலத்தில் முஸ்லிங்களுக்கு எதிராக அரங்கேறிய அளுத்கமை பேருவளை கலவரத்தினை தவிர ஒப்பீட்டு ரீதியில் முஸ்லிங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நடந்திருக்கவில்லை.

மகிந்த முஸ்லிங்களிடம் வாக்குகள் எதிர்பார்த்து இழந்ததே அதிகம் என எண்ணத்தோன்றுகின்றது. இதற்கான தீர்வாகவே தனிப்பெரும்பான்மை வாதம் முன்னெடுக்கப்படுவதாகப் படுகிறது.

நடுநிலையான சிங்களவனையும் கடும்போக்குவாதியாக மாற்ற வேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது. இதன் வெளிப்பாடே முஸ்லிம் விரோத கருத்துக்களை அவர் விதைக்க வேண்டிய தேவையுமாகவும் உள்ளது.

அறுத்தாலும் பச்சை என்ற
ஐ.தே.கா கடும்போக்கு வாதம்தான் எங்களை இந்த நிலையில் இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதோ? எனவும் எண்ணத்தோன்றுகின்றது. !!

எதிர்காலம் சிந்திப்பிற்குரியது. தலைவர்களின் சுயநலமற்ற பொதுநலனான சிந்தனை வரவேற்கத்தக்கது. பொறுத்திருப்போம் தேர்தல்வரையும்..!

ஷிபான் BM.

Tags :
comments