மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி

  • June 16, 2019
  • 122
  • Aroos Samsudeen
மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இன்றைய உலகக் கிண்ணப் போட்டியில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஏமாற்றமளிக்க இலங்கை அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்திருந்த 335 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும், மத்தியவரிசை மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பின்மையால் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ நேரிட்டது.

லண்டன் – கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரின் 20 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வுசெய்த நிலையில், அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆஸி. அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்து அணிக்கு மிகச் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணிக்கு தடுமாற்றம் கொடுத்த இவர்களது ஆரம்பத்தை தனன்ஜய டி சில்வா, டேவிட் வோர்னரின் விக்கெட்டினை கைப்பற்றி தகர்த்தார். 80 ஓட்டங்களுக்கு ஆஸி. அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா வலுவளிக்கக்கூடிய இணைப்பாட்டத்தை பகிர முற்பட்ட போதும், மீண்டும் தனன்ஜய டி சில்வா தனது சுழலின் மூலம் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணிக்கு மேலும் பலத்தை கொடுத்தார்.

ஆனால், ஆரோன் பின்ச் அரைச் சதம் கடக்க, உஸ்மான் கவாஜாவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ஆஸி. அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கினர்.  இதில், தனன்ஜய டி சில்வாவின் ஒரே ஓவரில் ஆரோன் பின்ச் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியை விளாசி தனது ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டார். தொடர்ந்து இவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதுடன், ஆரோன் பின்ச் தனது சதத்தை பதிவுசெய்ய, இலங்கை அணி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியது.

ஒரு பக்கம் ஆரோன் பின்ச் சதம் கடக்க, மறுபக்கம் ஸ்டீவ் ஸ்மித் அரைச்சதம் கடந்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தடுமாற்றத்தை கொடுத்தார். இருவரும், இலங்கை அணியின் பந்துவீச்சை சோதித்து, 150 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை தொட்டதுடன், ஆரோன் பின்ச் இந்த வருடத்தில் தன்னுடைய 2 ஆவது 150 ஓட்டங்களை கடந்தார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், இந்தப் போட்டியில் 153 ஓட்டங்களை பெற்று, இசுரு உதானவின் பந்துவீச்சில் திமுத் கருணாரத்னவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டமிழப்பின் போது, ஆஸி. அணி 273 ஓட்டங்களை தொட்டிருந்தது. எனினும், அதற்கு அடுத்த ஓவரில் லசித் மாலிங்க, ஸ்டீவ் ஸ்மித்தை (73) போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய ஆஸி. அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தங்களுடைய இரண்டு வீரர்களையும் இழந்தது.

ஆனால், அடுத்து வருகைத்தந்த கிளேன் மெக்ஸ்வேல் அதிரடியாக ஓட்டங்களை குவித்து ஆஸி. அணியை 300 ஓட்டங்களை கடக்க செய்தார். இறுதியில், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்தினாலும், மெக்ஸ்வேல் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஆஸி. அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் இசுரு உதான மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை நோக்கி தங்களுடைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, மிக வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஆஸி. அணியின் பந்துவீச்சை சோதித்தனர். இருவரும் இணைந்து முதல் 10 ஓவர்களுக்கு 87 ஓட்டங்களை விளாசினர். இந்த ஓட்ட எண்ணிக்கையானது, இந்த உலகக் கிண்ணத்தில் முதல் 10 ஓவர்களில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது.

தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடி இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் அரைச் சதம் கடந்த போதிலும் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் குசல் பெரேரா போல்ட் முறையில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை ஆரம்பித்த லஹிரு திரிமான்னவும் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும், அணிக்காக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் நிதானமாக ஓட்டங்களை பெற முற்பட்டனர். இதற்கிடையில், ஆஸி. அணியின் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுத்தனர். இதில், 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்த திமுத் கருணாரத்ன கேன் ரிச்சட்சனின் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழக்க இலங்கை அணி மேலும் அழுத்தத்திற்கு முகங்கொடுத்தது.

தொடர்ச்சியாக ஆஸி. அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணிக்கு சவால் கொடுக்க, அஞ்செலோ மெதிவ்ஸ், பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர். மிச்சல் ஸ்டார்க் தனது வேகத்தால் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் கொடுக்க திசர பெரேரா, மிலிந்த சிறிவர்தன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இலங்கை அணிக்கு முற்று முழுதாக ஏமாற்றத்தை வழங்கியதுடன்,  அணியை பின்னடையச் செய்தனர்.

மொத்தமாக இலங்கை அணியின் மத்தியவரிசை மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு ஏமாற்றத்தை வழங்கியதில், ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கியிருந்த இலங்கை அணி 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

குறிப்பாக 30 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், அடுத்த 10 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்கு தங்களுடைய 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தமை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஆஸி. அணி சார்பில் அபாரமாக பந்துவீசியிருந்த மிச்சல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணி 4 புள்ளிகளுடன் அதே 5 ஆவது இடத்தில் தொடர்கிறது. இந்த நிலையில், இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், ஆஸி. அணி, எதிர்வரும் 20 ஆம் திகதி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

Tags :
comments