இலங்கை அணி அபார வெற்றி

  • June 22, 2019
  • 82
  • Aroos Samsudeen
இலங்கை அணி அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் லீட்ஸ் – ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் மாலிங்க மற்றும் ஏனைய பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 232 ஓட்டங்களை மாத்திரமே வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த போதிலும், மாலிங்க உட்பட அனைத்து பந்துவீச்சாளர்களும் பலமான இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு சவால் கொடுத்து இலங்கை அணிக்கு இந்த உலகக் கிண்ணத்தில் இரண்டாவது வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளம் என்ற போதும், இலங்கை அணி வீரர்களின் கவனயீனமான துடுப்பாட்டத்தால் இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் நெருக்கடியை கொடுத்தது.

குறிப்பாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆரம்பத்தையும், ஓட்டங்களையும் குவித்திருந்த திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் க்ரிஸ் வோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் வேகத்தில் சிக்கி ஆட்டமிழக்க, இலங்கை அணி 3 ஓட்டங்களுக்கு தங்களுடைய ஆரம்ப வீரர்கள் இருவரையும் இழந்தது.

எனினும், உலகக் கிண்ணத் தொடரின் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர். இதில், அவிஷ்க பெர்னாண்டோ இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை பெற்றார். அவிஷ்க பெர்னாண்டோ  வேகமாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் குசல் மெண்டிஸ் நிதானமாக ஓட்டங்களை சேர்த்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்னாண்டோ அரைச்சதத்தை நெருங்கிய நிலையில், துரதிஷ்டவசமாக 49 ஓட்டங்களில் விக்கெட்டினை பறிகொடுத்து, அவரது முதல் உலகக் கிண்ண அரைச்சதத்தை தவறவிட்டார். இதன் பின்னர், கட்டாயமாக ஓட்டங்களை சேர்க்கவேண்டிய நிலையில் களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸுடன் இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கினார்.

ஆனால், இவர்களது இணைப்பாட்டமானது மிக குறைந்த ஓட்டவேகத்துடன் சென்றது. இந்த நிலையில் குசல் மெண்டிஸ் ஓட்ட வேகத்தினை அதிகரிக்க முற்பட்டார். இதன்போது, 46 ஓட்டங்களை பெற்றிருந்த மெண்டிஸ், ஆதில் ரஷீடின் பந்தில் இயன் மோர்கனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜீவன் மெண்டிஸ் தனது முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து மேலும் நெருக்கடியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள், இலங்கை அணியின் துடுப்பாட்ட வேகத்தைக் கட்டுப்படுத்த, இலங்கை அணியின் ஓட்ட வேகம் மேலும் குறைவடைந்தது. எனினும், நிதானமாக துடுப்பெடுத்தாடிய அஞ்செலோ மெதிவ்ஸ் தனது அரைச்சதத்தை பதிவுசெய்தார்.

அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச்சதம் கடந்த போதும், அவரால் ஓட்டங்களை வேகமாக குவிக்க முடியாமல் தடுமாற்றம் அடைந்தார். மறுமுனையில் தனன்ஜய டி சில்வா ஓரளவு ஓட்டங்களுடனும், திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக அஞ்செலோ மெதிவ்ஸ் 85 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இங்கிலாந்து அணியின் சார்பில் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வூட்  ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷீட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர், இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக முதல் ஓவரில் லசித் மாலிங்க, இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயார்ஸ்டோவின் விக்கெட்டினை கைப்பற்றினார். தொடர்ந்து, சிறிய இணைப்பாட்டம் ஒன்று பகிரப்பட்ட போதும், ஜேம்ஸ் வின்ஸை ஆட்டமிழக்கச் செய்து மாலிங்க தன்னுடைய இரண்டாவது விக்கெட்டினை கைப்பற்றினார்.

ஆனாலும், அடுத்து ஜோடி சேர்ந்த இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய இணைப்பாட்டம் ஒன்றினை பகிர்ந்தனர். இவர்கள் 47 ஓட்டங்களை பகிர்ந்திருந்த நிலையில், இசுரு உதான தனது பந்துவீச்சில் மிகச்சிறந்த பிடியெடுப்பு ஒன்றின் மூலமாக இயன் மோர்கனை ஆட்டமிழக்கச் செய்தார்.

இவ்வாறு இங்கிலாந்து அணித்தலைவர் ஆட்டமிழந்திருந்த போதும், நிதானமான இணைப்பாட்டமொன்றினை பகிர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சவாலை கொடுத்து ஓட்டங்களை குவித்தனர். எனினும், மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்ட லசித் மாலிங்க, ஜோ ரூட்டின் விக்கெட்டினை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

ஆனால், இதனையடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டார். இருப்பினும், மீண்டும் பந்துவீச வருகைதந்த மாலிங்க தனக்கே உரித்தான யோர்க்கர் பந்துவீச்சால் பட்லரின் விக்கெட்டினை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றத்தை கொடுத்தார்.

இங்கிலாந்து அணி பக்கம் முழுமையான அழுத்தம் இருந்த போதும், பென் ஸ்டோக்ஸ் தனது துடுப்பாட்டத்தால் அணியை முன்னோக்கி அழைத்துச் சென்றார். அவருடன் இணைந்த மொயீன் அலி நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதும், தனன்ஜய டி சில்வாவின் சுழல் பந்தில் சிக்ஸர் ஒன்றை பெற்றுக்கொள்ள முற்பட்டு இசுரு உதானவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய க்ரிஸ் வோக்ஸ் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோரை தனன்ஜய டி சில்வா தன்னுடைய ஒரே ஓவரில் வெளியேற்ற இங்கிலாந்து அணி போட்டியில் முழுமையான அழுத்தத்தை உணர்ந்தது.

வோக்ஸின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களம் நுழைந்த ஜொப்ரா ஆர்ச்சர் நிதானமாக களத்தில் நின்று துடுப்பெடுத்தாட முற்பட்ட போதும், இசுரு உதான மிதவேகமான பந்துவீச்சின் மூலம் பிடியெடுப்பு வாய்ப்பொன்றினை ஏற்படுத்த, திரச பெரேரா பிடியெடுத்து ஆர்ச்சரை வெளியேற்றினார்.

ஆனாலும், இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கிய மார்க் வூட் அவரது விக்கெட்டை பாதுகாத்து ஸ்டோக்ஸிற்கு வாய்ப்பினை வழங்கினார். அதனை பயன்படுத்திக்கொண்ட ஸ்டோக்ஸ் தனியாளாக ஓட்டங்களை குவித்த போதும், நுவன் பிரதீப் மார்க் வூட்டின் விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியிடம் தொடர்ச்சியாக 4 உலகக் கிண்ணங்களில் தோல்வியடையாத அணி என்ற சாதனையை பெற்றுக்கொண்ட இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் தங்களுடைய இரண்டாவது மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தியும் உள்ளது. இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 228 ஓட்டங்களை கட்டுப்படுத்தியிருந்த இலங்கை அணி, தற்போது 232 ஓட்டங்களை கட்டுப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 6 புள்ளிகளை பெற்றுக்கொண்ட இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், தங்களுடைய அரையிறுதி கனவையும் தக்கவைத்துள்ளது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற அடுத்துவரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயமும் எழுந்துள்ளது. இதேநேரம், இலங்கை அணி தங்களுடைய அடுத்தப் போட்டியில் 28 ஆம் திகதி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இங்கிலாந்து அணி எதிர்வரும் 25 ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Tags :
comments