தனது அனுபவமே நிக்கோலஸ் பூரணை வீழ்த்த காரணம் என்கிறார் மெதிவ்ஸ்

  • July 2, 2019
  • 81
  • Aroos Samsudeen
தனது அனுபவமே நிக்கோலஸ் பூரணை வீழ்த்த காரணம் என்கிறார் மெதிவ்ஸ்

எட்டு மாதங்களாக எந்தவொரு வலைப் பயிற்சியிலும் பந்து வீசாமல் முதல் தடவையாக மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் பந்து வீசி இலங்கை அணிக்குத் தேவையாக இருந்த நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை வீழ்த்த முடிந்தமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ சதம் கடந்து கைகொடுக்க இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் 48ஆவது ஓவருக்காக பந்துவீசிய அஞ்செலோ மெதிவ்ஸ், முதல் பந்திலேயே இலங்கை அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த நிக்கோலஸ் பூரணை ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். இது இலங்கை அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதில் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்தடவையாக சர்வதேசப் போட்டியொன்றில் மெதிவ்ஸ் பந்துவீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அஞ்செலோ மெதிவ்ஸ் தான் பந்துவீச அழைக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடுகையில்,

“இந்தப் போட்டியின் இறுதிவரை நிக்கோலஸ் பூரன் மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்திருந்தார். இதனால் நானும், திமுத்தும் இரண்டு ஓவர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என கலந்துரையாடினோம். அதிலும் 40 ஓவர்களுக்குப் பிறகு சுழல் பந்துவீச்சளர் ஒருவரைப் பயன்படுத்துவதற்கு எமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏனெனில் நிக்கொலஸ் பூரண் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். அவருடைய விக்கெட் தான் போட்டியின் திருப்புமுனை என்பதை அறிந்தோம். எனவே, அந்த நேரத்தில் யாரையாவது பந்துவீச அழைப்பதற்கு திமுத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த 2 ஓவர்களையும் நான் பந்துவீசுகிறேன் என திமுத்திடம் கூறினேன்.

உண்மையில் கடந்த 8 மாதங்களாக நான் பந்து வீசவில்லை. குறிப்பாக பந்தை கையில் எடுத்து பயிற்சிகள் எடுக்கவில்லை. ஆனால், எனக்கு அனுபவம் உள்ளதால் நான் பந்துவீசுகிறேன் என அவரிடம் தெரிவித்தேன். நாங்கள் முடியுமான வரை லசித் மாலிங்க அல்லது இசுரு உதானவைக் கொண்டு அவருடைய (நிக்கொலஸ் பூரண்) விக்கெட்டை எடுப்பதற்கு முயற்சி செய்வோம். அவ்வாறு முடியாது போனால் 48ஆவது மற்றும் 50ஆவது ஓவர்களில் நான் பந்து வீசுகிறேன் என தெரிவித்தேன்.

எனவே, நான் பந்துவீசியது திமுத்துக்கும் மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது. ஆனாலும், நானும் சற்று பயத்துடன் பந்து வீசினேன். ஏனெனில் கடந்த எட்டு மாதங்களாக ஒரு பந்துகூட வீசியது கிடையாது. குறிப்பாக வலைப் பயிற்சிகளிலும் பந்தை கையால்கூட தொட்டு பந்து வீசவில்லை. எனினும், எனது அனுபவம் அந்த இடத்தில் கைகொடுத்தது. எனக்கு எந்த இடத்தில் பந்துவீசினால் பூரணின் விக்கெட்டை வீழ்த்த முடியும் என்ற திட்டம் இருந்தது. இறுதியில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினேன்” என தெரிவித்தார்.

உபாதை காரணமாக கடந்த ஒன்றை வருடங்களாக எந்தவொரு போட்டியிலும் பந்துவீசாத மெதிவ்ஸ், இறுதியாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பந்து வீசியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது உபாதை குறித்து மெதிவ்ஸ் இதன்போது கருத்து வெளியிடுகையில்,

”துரதிஷ்டவசமாக, உபாதைக்குப் பிறகு பந்து வீசுவதற்கான உடல் தகுதி எனக்கு இருக்கவில்லை. அதாவது, பந்துவீச்சைத் தொடங்குவதற்கும் அதைக் கட்டியெழுப்புவதற்கும் எனக்கு சிறிது நேரம் தேவை. ஏனெனில் உடலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும், எனவே இதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.

அதேபோல, ஓரிரண்டு ஓவர்கள் பந்துவீசி அணிக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனால் முடிந்தவரை விரைவாக பந்துவீச்சைத் தொடங்க நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்” என குறிப்பிட்டார்.

இதேநேரம், இலங்கை அணி தென்னாபிரிக்காவுடனான தீர்மானமிக்க போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில் அரையிறுதிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.

எனவே, இந்தப் போட்டியில் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் விளையாடிய காரணத்தால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடிந்ததா எனவும், அவிஷ்க பெர்னாண்டோவின் துடுப்பாட்டம் குறித்தும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மெதிவ்ஸ் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் எமக்குத் தேவையான நேரத்தில் துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் இருந்தது. கடந்த போட்டியில் சற்று மந்தமான ஆடுகளமாக இருந்தது. உறுதியான எந்தவொரு பிரயோகங்களையும் அந்த ஆடுகளத்தில் மேற்கொள்ள முடியாமல் போனது.

ஆனால், இந்தப் போட்டியில் மிகவும் நன்றாக பந்து துடுப்பு மட்டைக்கு வந்தது. அதேபோல, நாங்கள் பெற்றுக்கொண்ட ஆரம்பமும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதிலும் அவிஷ்க பெர்னாண்டோ மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் விரல் விட்டு எண்னுகின்ற ஓருசில போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தாலும், அனுபவமிக்க ஒரு சிரேஷ்ட வீரர் ஒருவரைப் போல துடுப்பெடுத்தாடியிருந்தார். அவரைச் சுற்றி குசல் ஜனித், குசல் மெண்டிஸ் மற்றும் திரிமான்ன ஆகியோருக்கு ஓட்டங்களைக் குவிக்க முடிந்தது.

அதேபோல, கடந்த இரண்டு போட்டிகளில் அவரால் 30 அல்லது 40 ஓட்டங்களைத் தான் குவிக்க முடிந்தது. ஆனால் இன்று அவர் விளையாடிய விதம் பாராட்டத்தக்கது.

எனவே இந்தப் போட்டியில் 330 ஓட்டங்களுக்கு மேல் குவித்தால் நிச்சயம் எமது பந்து வீச்சாளர்கள் போட்டியை வென்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. எமது பந்து வீச்சாளர்கள் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியிருந்தனர்” என குறிப்பிட்டார்.

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்த மெதிவ்ஸ், எஞ்சியுள்ள போட்டிகளை வெற்றியுடன் முடிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

”உண்மையில் இம்முறை உலகக் கிண்ணத்தில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனததையிட்டு நாங்கள் ஏமாற்றமடைகிறோம். இந்தத் தொடர் முழுவதும் எமக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டாலும் மத்திய வரிசையில் நாங்கள மோசமாக விளையாடினோம்.

அதேபோல, தென்னாபிரிக்காவுடனான போட்டியில் நாங்கள் சிறப்பாக துடுப்பாடவில்லை. இதனால் அரையிறுதிக்கான வாய்ப்பையும் தவறவிட்டோம். எனினும், எஞ்சியுள்ள போட்டியை வெற்றியுடன் முடிப்பது நல்ல விடயம்” என தெரிவித்தார்.

Tags :
comments