இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

  • July 11, 2019
  • 84
  • Aroos Samsudeen
இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மென்செஸ்டர் – ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் இன்று (10) நிறைவுபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற  நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதி மோதலுக்கு முன்னேறியுள்ளது.

நேற்று (09) ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய அந்த அணி நேற்றைய தினம் 211 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இந்த நிலையில், இன்று தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 50 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 239/8  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த சற்று சவாலான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திரசிங் டோனி ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்தின் ஊடாக வெற்றியிலக்கை நெருங்கியது. எனினும், இறுதியில் அபாரமான பந்துவீச்சு மற்றும் மார்ட்டின் கப்டிலினால் மேற்கொள்ளப்பட்ட மகேந்திர சிங் டோனியின் ரன்-அவுட் மூலமான ஆட்டமிழப்பின் ஊடாக இந்திய அணி 221 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை இந்த தொடர் முழுவதும் ஏமாற்றத்தை வழங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட் ஒரு ஓட்டத்துக்கு வீழ்ந்தது. இதன் பின்னர் நிதானமான இணைப்பாட்டமொன்றை அணித் தலைவர் கேன் வில்லியம்சனுடன் இணைந்து கட்டியெழுப்பிய ஹென்ரி நிக்கோல்ஸ் 28 ஓட்டங்களுடன் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும், நியூசிலாந்து அணியின் அரையிறுதி பயணத்துக்கு முக்கிய காரணமாக இருந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் மீண்டும் ஒரு நிதானமானதும், வலுவானதுமான இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். ஓட்ட வேகம் குறைவாக இருந்த போதும், விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் இருவரும் துடுப்பெடுத்தாடினர்.

நிதான துடுப்பாட்டத்துக்கு ஏற்ப கேன் வில்லியம்சன் தனது 39 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை கடந்தார் ஆனால், ஓட்ட வேகத்தை அதிகரிக்க முற்பட்ட இவர் 67 ஓட்டங்களுடன் யுஷ்வேந்திர சஹாலின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜிம்மி நீஷம் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னரும், அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய ரொஸ் டெய்லர் தனது 50 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, போட்டியில் மழை குறுக்கிட்டது. போட்டியை மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், தொடர்ந்து மழை குறுக்கிட்டு வந்ததால் போட்டி இடைநிறுத்தப்படுவதாகவும், இன்றைய (10) தினம் போட்டியின் தொடர்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் மீதமிருந்த 23 பந்துகளுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக ரொஸ் டெய்லர் 74 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்த போதும், மகேந்திரசிங் டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் 116 என்ற சிறந்த இணைப்பாட்டத்தின் ஊடாக வெற்றியிலக்கினை நெருங்கியது. எனினும், துரதிஷ்டவசமாக கடைசி நேரங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி தங்களுடைய முன்னணி துடுப்பாட்ட வீரர்களை வெறும் 6 ஓட்டங்களுக்கு இழந்தது. ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி மற்றும் கே.எல். ராஹுல் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றை பொருத்தவரை முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாக மாறியது.

இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமான இணைப்பாட்டத்தை வழங்கினர். எனினும் 47 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றவேளை, பந்துவீச வருகைத்தந்த மிச்சல் சென்ட்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டுகளை குறுகிய நேரத்தில் கைப்பற்றி நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

ஆனால், இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த மகேந்திர சிங் டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல தொடங்கினர். ஒருபக்கம் நிதானமான முறையில் டோனி துடுப்பெடுத்தாட, மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா வேகமாக ஓட்டங்களை குவித்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் (116) ஒன்றை பகிர்ந்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முற்பட்டனர். இந்த உலகக் கிண்ணத்தில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய ஜடேஜா அபாரமாக துடுப்பெடுத்தாடி 77 ஓட்டங்களை பெற்ற போதும், முக்கியமான தருணத்தில் அவரின் (ஜடேஜா) விக்கெட்டினை ட்ரென்ட் போல்ட் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து டோனி இந்திய அணியை வெற்றியை நோக்கி தனியாளாக அழைத்துச் செல்வார் என்ற நிலை இருந்த போதும், மார்ட்டின் கப்டிலின் அபாரமான களத்தடுப்பின் மூலமாக டோனி 50 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது. டோனியின் ஆட்டமிழப்பின் பின்னர், அடுத்த இரண்டு விக்கெட்டுகளும் தொடர்ச்சியான ஓவர்களில் வீழ்த்தப்பட இந்திய அணி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
இதன்படி, இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 2015ம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற போதும், அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
comments