தடுமாற்றம் காண்பிக்கும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

  • July 20, 2019
  • 200
  • Aroos Samsudeen
தடுமாற்றம் காண்பிக்கும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெறும் முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நிறைவில், தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி அதன் சிறந்த பந்துவீச்சு காரணமாக வலுப்பெற்றுள்ளது.

தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட முக்கோண தொடரில் விளையாடிய பின்னர் தற்போது 2 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது.

அந்தவகையில் நான்கு நாட்கள் கொண்ட இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நேற்று (19) போச்சேப்ட்ஸ்ரூம் நகரில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, போட்டியின் முதல் நாள் நிறைவில் மெத்திவ் ப்ரிட்ஸ்கே (114) பெற்றுக்கொண்ட அபார சதத்தோடு முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டத்திற்காக அதன் தலைவர் றய்னாட் வான் டொன்டர் 67 ஓட்டங்களுடனும், சிபோனெலோ மக்கன்யா 7 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் நின்றனர்.

இதன் பின்னர் இன்று (19) போட்டியின் இரண்டாம் நாளில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

எனினும், தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி தமது துடுப்பாட்டத்தில் தொடர்ந்தும் தடுமாறியது. தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் மத்தியவரிசை வீரர்கள் தமது விக்கெட்டுக்களை குறைவான ஓட்டங்களுக்குள் பறிகொடுத்தனர்.

இதனால், தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி 99.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 382 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் றய்னாட் வன் டொன்டர் 117 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 69 ஓட்டங்களை குவித்துக் கொண்டார்.

இதேநேரம், இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சு சார்பில் இடதுகை சுழல் வீரரான லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாந்து, மொஹமட் சிராஸ் மற்றும் நிஷான் பீரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை வளர்ந்துவரும் அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றம் காண்பித்தது.

இலங்கை வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த மினோத் பானுக்க ஓட்டம் எதனையும் பெறாமல் ஏமாற்றினார். இதேநேரம் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பெதும் நிஸ்ஸ்ங்கவும் வெறும் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், ஹசித போயகொட மற்றும் அணித்தலைவர் சரித் அசலன்க ஆகியோர் பொறுப்பான ஆட்டம் மூலம் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு ஆறுதல் தந்தனர். இதில், ஹசித போயகொட 40 ஓட்டங்கள் பெற்றதோடு, சரித் அசலன்க அரைச்சதம் ஒன்றுடன் 56 ஓட்டங்களை குவித்திருந்தார்.

எனினும், இந்த இரு வீரர்களின் விக்கெட்டுக்களை அடுத்து இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மீண்டும் தடுமாற்றத்தை காண்பித்தது.

இதனால், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி  57 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

இலங்கை வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டத்தில் நிஷான் பீரிஸ் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று நம்பிக்கை தர, மொஹமட் சிராஸ் 7 ஓட்டங்களுடன் களத்தில் நிற்கின்றார்.

இலங்கை வளர்ந்துவரும் அணியினை நெருக்கடிக்கு உள்ளாக்கிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில், கைல் சிம்மோன்ட்ஸ் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, நன்ட்ரே பர்கர் மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

Tags :
comments