மாலைதீவு போய் வந்தபிறகு, வேட்பாளரை அறிவிப்பேன் – இராஜதந்திரிகளிடம் ரணில் உறுதி

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இராப்போசன விருந்துடன் சந்தித்துப் பேசியுள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, நோர்வே உள்ளிட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளின் தூதுவர்கள் பலரும், இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின், அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போதே, மாலைதீவுக்கு வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளவுள்ள பயணத்தின் பின்னர், புதிய கூட்டணி மற்றும் அதன் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இராஜதந்திரிகளிடம் எடுத்துக் கூறினார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்து கொண்டிருந்தார்.
அதேவேளை, ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு வரையும் பணிகள் நேற்று நிறைவடைந்துள்ளன. இதன்படி கூட்டணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.