ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதியானார்

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமனம் பெற்றார்.
இராணுவத் தளபதியாக பணியாற்றிய லெப்ரினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து ஷவேந்திரவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
முன்னதாக இந்த நியமனத்துக்கு பல எதிர்ப்புக்கள் வந்தபோதிலும் அவற்றை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியதாக சொல்லப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலை, எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் – ரணில்

ஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் 2019 ஆம் ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான நிகழ்வு இள்று  திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ,
 ஜனாதிபதித் தேர்தலை ஐக்கிய தேசிய கட்சியால் வெற்றி கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று எதிர்கால திட்டங்கள் மற்றும் இது வரையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்துகின்றோம்.
அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொண்டு ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் என தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை, சஜித் பிரேமதாஸவின் மடியில் அடகு வைப்பதற்கு ஒருசிலர் முயற்சி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சஜித் பிரேமதாஸவின் மடியில் அடகு வைப்பதற்கு ஒருசிலர் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
கண்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சஜித் பிரேமதாஸவின் மடியில் அடகு வைப்பதற்கு ஒருசிலர் முயற்சிக்கின்றனர். அவர்களால் அதனை ஒருபோதும் செய்ய முடியாது.
சுதந்திரக் கட்சி மற்றைய கட்சியொன்றின் நிழலில் இருக்க போவது இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க உள்ளோம் என்றார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு – அமைச்சர் ரிஷாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு (14) அமைச்சர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கௌரவ அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர். அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது, வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன அது மாத்திரமன்றி மக்களின் நலனுக்காக சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, மற்றும் இன்னோரன்ன துறைகளில் இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்கி அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கல்வி தேவைக்காக கட்டப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் பல விரைவில் திறப்பற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கின் சுகாதார துறையை மேம்படுத்துவதற்காக அமைச்சர் ராஜித, இந்த பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்கிறார். இதுவரை இருந்த சுகாதார அமைச்சர்களில் வடக்குக்கு ஆக கூடிய தடவை விஜயம் செய்த அமைச்சராக ராஜித விளங்குகிறார். வடக்கின் அபிவிருத்தியில் கரிசனை காட்டும் பிரதமருக்கும் அமைச்சர் ராஜிதவுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்

மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள்

சுஐப் எம். காசிம்

ஜனாதிபதி வேட்பாளர்களை அறிந்து கொள்வதில் மக்களுக்கிருந்த ஆர்வம் படிப்படியாகத் தணிந்து வரும் நேரமிது.ஒரு தரப்பாருக்கு சஞ்சலத்தையும் மற்றுமொரு தரப்பினருக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்தி, எதிர்பார்ப்புகளின் உச்சத்திலிருந்த ஒரு கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களின் ஆர்வங்கள் தணியத்தொடங்கின. கடைசியாக நடந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றதும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்றதும் ஶ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவின் இமேஜை ஏனைய கட்சிகளை விட ஒரு படி உயர்த்தியுள்ளதுதான்.

எனினும் தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை, கட்சியின் வெற்றிக்கு எவ்வாறு இட்டுச் செல்லும். 2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளே இச்சிந்தனைகளைக் கிளறுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை,செல்வாக்கு, அவருக்கிருந்த புகழ் அனைத்தையும் ஐக்கிய தேசிய முன்னணி எப்படித் தோற்கடித்தது?.

தேர்தல் கூட்டணியை அமைப்பதில் ராஜபக்ஷ தரப்பு விட்ட தவறிலிருந்தே அத்தரப்பின் தோல்வியும் எழுதப்பட்டது. பலமான கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தியிருந்தால், 57 இலட்சம் வாக்குகளுடன் பங்காளிக் கட்சிகளின் பங்களிப்பும் வெற்றிக்குப் பங்களித்திருக்கும்.

இதே தவறுகளே இம்முறையும் இடம் பெறுமோ தெரியாது. தேசிய காங்கிரஸ், ஈபிடிபி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிர இன்னும் பத்துக் கட்சிகள் இந்த அணிக்கு எத்தனை வாக்குகளுக்கு பங்களிக்கும். உண்மையில் இதர கட்சிகளின் எதிர்பார்ப்பு, இணக்கப்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டிருந்தால் கோட்டாபாய வேட்பாளராகியிருக்க முடியாது. எனவே இம் முறையும் தனிநபர் ஆளுமையே களமிறங்குகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் இந்தக் களத்தை எதிர்த்துப் போரிடப்போவது யார்? யார் என்பது இதுவரை தெரியாவிட்டாலும் களமாடப் போவது ஐக்கிய தேசியக் கட்சி என்பது மட்டும் உண்மை. இக்கட்சி தனிநபர் ஆளுமையை விடவும் கூட்டுப்பலத்தையே அதிகம் நம்பியுள்ளது.இக் கூட்டுப்பலத்தை உருவாக்கும் முயற்சிகள் இது வரை வெற்றியளிக்கவில்லை.

பங்காளிக் கட்சிகள் காட்டும் தயக்கம்,ஶ்ரீகொத்தாவின் உட்பூசல்கள், எதிரணி வேட்பாளருக்குப் பின்னாலுள்ள சக்திகள் இவையெல்லாம் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பெரும் தலையிடியாகியுள்ளன.சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகளை வளைத்துப் பிடித்தாலும் அச்சமூக மக்களை வழி நடத்தும் ஆளுமை தமிழ்,முஸ்லிம் தலைமைகளுக்கு உள்ளதா? அல்லது 2015 இல் மந்தைகள் கட்டவிழ்ந்து போனதுபோல், இம் முறையும் முஸ்லிம் சமூகம் கட்டவிழ்ந்து செல்லுமா? இவ்வாறு கட்டவிழாமல் காப்பாற்றப்போவது எது.?

உண்மையில் இத்தலைமைகளின் முடிவுகளே சமூகம் கட்டவிழ்ந்து செல்வதைக் காப்பாற்றும். 2015 இல் 61 இலட்சம் மக்கள் தவறிழைத்தமைக்கு ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்திய வேட்பாளரே காரணம். இதுபோன்ற தவறுக்கும் தெரிவுக்கும் மக்கள் ஆளாகக் கூடாதென்பதே ஶ்ரீகொத்தாவின் உயர்மட்டத் தலைவர்களின் கவலை. இதனால்தான் இதுவரைக்கும் இழுபறி.

2015 ஆம் ஆண்டு விட்ட தவறினால் நாட்டின் நிர்வாகம் முற்றாகக் குலைந்து சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறைகள் முரண்பட்டமை ஜனநாயகத்துக்கு விழுந்த கீறல்களாகவே பார்க்கப்படுகிறது. ராஜபக்ஷக்களுக்கு நிகராக ஒரு தலைவரைப் பெறமுடியாவிட்டாலும் ஒரு கூட்டுப்பலத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் ரணில் காலம் கடத்துகிறார். காலம் பதிலளிக்கும் வரை பொறுமை காப்பதும் ரணிலுக்கு அத்துப்படியான ராஜதந்திரங்களில் ஒன்று.

தனக்கு வாய்ப்பை உருவாக்குவது, வராவிட்டால் யாரையாவது மாட்டிவிடுவது. இது வரைக்கும் இந்த வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. இம்முறை எப்படியாவது வாய்ப்புக்காக வாதாடுவதென்று விடாப்பிடியாய் உள்ளதால் ஆரூடமாகச் சொல்லப்படும் வேட்பாளர்கள் எவரையும் ரணில் பொருட்படுத்தவும் இல்லை.நாளை மறுதினம் தீர்க்கமான தீர்மானங்கள் வெளிவரவுள்ளன.

ஒருவாறு ரணிலன்றி வேறு வேட்பாளரின் பெயர் வெளியாக வேண்டுமென்பதே மொட்டு அணியினரின் விருப்பம்.வெளிநாடுகளின் தலையீடு,நெருக்குதல்கள் இல்லாதிருந்தால் 2015 இலும் வென்றிருப்போம் என்கிறார் மஹிந்த. வெளிநாடுகளுக்குத் தேவையற்றவர் என்ற விம்பம் சஜித் பிரேமதாசவுக்கு கிடைப்பதற்கு மஹிந்தவின் இந்த வாக்குமூலமே வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு சஜித்தால் களமாட முடியுமா? என்பதே ஸ்ரீகொத்தாவுக்குள்ள கவலை.முன்னாள் ஜனாதிபதிகளின் மகனும் சகோதரனும் களமிறங்கச் சாத்தியமான இந்தத் தேர்தல் நாட்டின் அதியுச்ச அதிகாரத்தை இருபது வருடங்களுக்கு கையகப்படுத்தும் போட்டியாகவே பரிணமிக்கப் போகிறது.

பிரேமதாசாவை நேசிப்பவர்கள் தன்னை ஆதரிக்க வேண்டுமென்று சிங்களத் தலைவர்களைக் கொன்று குவித்த புலிகளைத் தோற்கடித்த பெருமையை ஞாபகமூட்டவே மொட்டு முனையும். குடும்ப ஆதிக்கம், கொலைகாரர்களின் அதிகாரத் தொல்லையை இல்லொதொழிக்க தனக்கு வாக்களிக்கக் கோருவார் சஜித். இரு தரப்புக் கோரிக்கைகளும் நியாயமானதுதான்.வாக்களிக்கத் தூண்டுமா? விருப்பத்தை எற்படுத்துமா? எதுவாயிருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தேராண்மைவாதத்தை அங்கீகரித்து 2013 இல் காலியில் அலுவலகம் திறந்து அங்கீகாரம் வழங்கிய மொட்டு அணி வேட்பாளரின் மனநிலையை முஸ்லிம்கள் இன்னும் மறக்கவில்லை.

சிவப்புத் தொப்பியணிந்த ஒரு சில மௌலவியர் மொட்டை மோப்பம் பிடிப்பதற்காக, முழு முஸ்லிம்களும் சுகந்தம் நுகர மொட்டை நாடுவார்களா? இவ்வாறு நாடுவது முஸ்லிம்களை நடுத் தெருவில் நிர்க்கதியாக்குமா? சஜித்தைப் பொறுத்தவரை சிறுபான்மைச் சமூகங்களின் நாடி, நரம்புகளைப் பிடித்தறிந்து பணியாற்றும் பக்குவமும் பற்றாக்குறையாகவே உள்ளது.இவைகளே இன்று கள எதிரொலிகள்.

மஹிந்தவுடன் இணக்கப்பாடு என்பது பொய், சஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் நடுநிலைமை – மைத்­தி­ரி­

முன்னாள் ஜனா­தி­ப­தியும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணக்­கப்­பாடு எதுவும் காணப்­ப­ட­வில்லை.  அவ­ருடன் இணக்­கப்­பாடு காணப்­பட்­ட­தாக  வெளி­யான செய்தி  தவ­றா­ன­தாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.
ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்   அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது.   அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து  ஜனா­தி­ப­தியை  சந்­தித்த   ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைச்  சேர்ந்த  சிறு­பான்­மை­யின   அமைச்சர் ஒருவர்   ஜனா­தி­ப­தி­யிடம்  இந்த விடயம் தொடர்பில்  கேள்வி எழுப்­பி­ய­போதே   அவர்  இவ்­வாறு   தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன்  நீங்கள் நடத்­திய சந்­திப்­பின்­போது   பொது­ஜன பெர­மு­னவில்  ஜனா­தி­பதி  வேட்­பா­ள­ருக்கு  ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கான இணக்கம்  காணப்­பட்­ட­தா­கவும்  அதற்கு பிரதி உப­கா­ர­மாக உங்­க­ளுக்கு   உரிய பத­வியை   தரு­வ­தற்கு  தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்   ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.   இவ்­வா­றான இணக்கம் காணப்­பட்­டுள்­ளதா?  பொது­ஜன பெர­முன வேட்­பா­ளரை நீங்கள்  ஆத­ரிக்­கப்­போ­கின்­றீர்­களா என்று  அந்த அமைச்சர்   ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.
இதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி அவ்­வா­றான எந்த இணக்­கப்­பாடும்  ஏற்­ப­ட­வில்லை.  அவ்­வாறு  வெளி­யா­கிய செய்­திகள் தவ­றா­னவை..  அதனை நம்­ப­வேண்டாம் என்று  கோரி­யுள்ளார்.
இதன்­போது பொது­ஜன பெர­மு­ன­விற்கு நீங்கள் ஆத­ரவு  வழங்­காது  எமது  கூட்­ட­ணிக்கு ஆத­ரவை  வழங்­க­வேண்டும் என்றும் அந்த அமைச்சர்  கோரி­ய­போது  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்   ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால்   இந்த விடயத்தில்  நடுநிலைமை வகிப்பது குறித்து  பரிசீலிக்க முடியும் என்று    ஜனாதிபதி   சுட்டிக்காட்டியதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

சஜித்தைக் களமிறக்க ரணில் கொள்கையளவில் இணக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டது என்று அறியமுடிகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாட்டின் பிரதான கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன தமது வேட்பாளர்களை இன்னமும் பெயரிடாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்னாள் பாதுகாப்புச் செயலரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 18ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மௌனமாக இருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்குள் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ என மூவரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளருக்காகப் பரிந்துரைக்கப்பட்டன. கட்சியால் பெயரிடப்படாத நிலையில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராகத் தானே களமிறங்குவேன் என்று தெரிவித்ததுடன், அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். இந்த முரண்பாடுகளால் ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டணியை அறிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சியும் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே களமிறக்கப்பட வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர். நேற்றுமுன்தினம் பதுளையில் சஜித் பிரேமதாஸவுக்கு வரவேற்பளிக்கும் மாநாடு ஒன்றை நடத்தியிருந்ததுடன், பெரும் எண்ணிக்கையான மக்களையும் மாநாட்டுக்குத் திரட்டியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்துக் களமிறங்கும் வல்லமை ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் பிரேமதாஸ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கே உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சரத் பொன்சேகா முன்னர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ச தரப்பு அதைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தக் கூடும் என்பதால் சஜித் பிரேமதாஸவைக் களமிறக்குவதே சிறந்த வழி என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் சஜித் பிரேமதாஸவுக்கு மக்கள் ஆதரவு இருப்பது பதுளையில் நடந்த கூட்டத்தின் மூலம் தெரிகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிங்க இந்த விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு அவர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின்படி ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மானிக்க முடியும். அதனால் மத்திய செயற்குழுவில் சஜித் பிரேமதாஸவின் பெயரைப் பிரேரித்து வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளரைத் தெரிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்தனர் என்று அறியமுடிந்தது.

கோட்டாபயவை களமிறக்கியது பயங்கரமானது, நாட்டை கட்டியெழுப்ப முடியாது – சந்திரிக்கா

ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்கியது பயங்கரமானது என, தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை  எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக பெசில் கூறியது பொய். ராஜபக்சர்கள் பேச்சை எவரும் நம்பப்போவதில்லை.” எனவும் தெரிவித்தார்.
மேலும், “கட்சியா? நாடா என்று வரும்போது ஸ்ரீ லாங்கா சுதந்திரக் கட்சியைவிட நாட்டுக்கே முன்னுரிமை கொடுப்பேன்.” எனவும் தெரிவித்துள்ள அவர், “கோட்டாவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ராஜபக்சர்கள் குடும்பத்திலிருந்து வேட்பாளரை தெரிவு செய்வதற்கு, அவர்களின் அதிகார பேராசையே காரணம்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் தமது உரிமைகளை பேணிப் பாதுகாத்துக் கொள்ள சகலரும் பிரார்த்திக்க வேண்டும். அஸாத் சாலிம்

நாட்டில் நிலையான சமாதானம் நீடிக்கவும், முஸ்லிம்கள் தமது உரிமைகளை பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்  இத்திருநாளில் சகலரும் பிரார்த்திக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
“நபி இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவுகூறும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் சகல முஸ்லிம்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தியாகத்தின் அடையாளமாக விளங்கும் இத்தினத்தில் நாங்கள் உழ்ஹிய்யாக் கடமை உள்ளிட்ட எமது பணிகளை மிகவும் கவனமாக முன்னெடுக்க வேண்டும். உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும் போது நாட்டின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மீறாமல் அதனை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தியாகம் என்பது அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களது வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கின்றது. இலங்கையில் கூட தொடர்ந்தும் நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல தியாகங்களை செய்துள்ளோம். பல கோடி சொத்துக்கள், பல உயிர்களையும் இழந்துள்ளோம்.
தற்போதும் முஸ்லிம்களின் உரிமைகளை இல்லாமலாக்க பேரினவாதிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். எதிர்காலத்திலும் நாங்கள் பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறான நிலையில் நாங்கள் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும், தியாக சிந்தையுடனும் செயலாற்ற வேண்டும்.

ஒற்றுமையே எமது சமூகத்தின் பலமாகும். எமக்கெதிராக வரும் சவால்களை முறியடிக்க வேண்டுமாயின் எம்மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். அந்த ஒற்றுமைக்காகவும் உலக முஸ்லிம்களின் நிம்மதிக்காகவும் இந்நாளில் பிரார்த்திப்போம்,” என்று அஸாத் சாலி வேண்டிக்கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள “ஈதுல் அழ்ஹா” ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாக சிந்தையையும், சகிப்புத் தன்மையையும் அதிகம்

வலியுறுத்தும் “ஈதுல் அழ்ஹா” எனப்படும் தியாகத் திருநாளில் நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையையும், நெருக்கடியான காலகட்டத்தையும் கருத்தில் கொண்டு இனங்களுக்கிடையிலான நல்லெண்ணமும், நல்லுறவும் நீடித்து நிலவ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் உச்ச கட்டத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் இன்னுமொரு பெருநாளை நாங்கள் சந்திக்கின்றோம். வெறுப்புப் பேச்சினதும், இனவாத வன் செயல்களினதும் பின்னணியில் அச்சத்திற்கும் நம்பிக்கையீனத்திற்கும் மத்தியில் வாழ நேர்ந்திருப்பதையிட்டு நிம்மதியையும் அமைதியையும் வேண்டி நிற்கும் முஸ்லிம்கள் கவலையடைகிறார்கள்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்களும் அன்னாரின் அருமைப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களும், ஹாஜரா அம்மையாரும் அன்றைய அரேபிய தீபகற்பகத்தில் முகங்கொடுத்த இன்னல்களுக்கு அவர்களது அளப்பரிய தியாகம் வரலாற்றில் சான்று பகன்று கொண்டிருக்கின்றது.
அதன் வெளிப்பாடாகத்தான் ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்காவிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் ஒன்று திரண்டு தங்களது ஈமானிய உணர்வை பிரகடனப்படுத்துகின்றனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை ஒவ்வோராண்டும் உலகம் கண்டு வியக்கின்றது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் வறுமையிலும் செல்வத்திலும், நோயிலும் சுகத்திலும் தியாகத்தின் வலிமையையும் சகிப்புத் தன்மையின் சிறப்பையும் ஹஜ்ஜுப் பெருநாள் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது.
இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில் அவர்களது வாழ்வில் மலர்ச்சியும், புத்தெழுச்சியும் ஏற்பட வேண்டுமென மீண்டும் உளப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்” அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி

தியாகம் பொறுமையின் பெறுமானங்களாகக் கிடைத்த புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவத்தை
உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத்பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது…
:
மிகச் சோதனைமிக்க காலத்தில் முஸ்லிம்களாகிய நாம் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் முன்னுதாரணங்கள் யாவும் இறைவனைத் திருப்திப்படுத்துவதாகவே இருந்தது.அல்லாஹ்வின் கட்டளைக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்றாஹிம் நபியின் இறை விசுவாசம் உலகமுள்ள வரை ஞாபக மூட்டப்படும்.இவ்வாறான தியாகங்களை சிறுபான்மையினரான முஸ்லிம்களும் கடைப்பிடிப்பதே எமது எதிரிகளைத் தோற்கடிக்க உதவும்.ஏகத்துவ மார்க்கங்களைப் பின்பற்றும் யூத, கிறிஸ்தவ மதங்களும் இப்றாஹீம் நபியை தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன.

இவ்வாறான ஏகத்துவ ஒற்றுமையுள்ள யூத,கிறிஸ்தவ,இஸ்லாமிய சமூகங்களைப் பிளவுபடுத்த சில கைக்கூலிகள் களமிறக்கப்பட்டுள்ளதே எமக்கு ஏற்பட்டுள்ள சவால்களாகும்.ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய சில கயவர்களையும் ஏகத்துவ மார்க்கங்களின் எதிரிகளே கைக்கூலிகளாகக் களமிறக்கியுள்ளனர்.

கிறிஸ்தவர்களின் இயேசுநாதரையும் (ஈஷா நபி) இறைதூதரென முஸ்லிம்கள் நம்புகின்றனர். எனவே எமது உறவுகளைப் பிரிக்க எந்த சக்திகளாலும் இயலப் போவதில்லை.எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட ஈஸ்டர் தினத் தாக்குதலை வைத்து எமது சமூகத்தை தனிமைப்படுத்த சில இனவாத சக்திகள் முயன்று தோற்றுவிட்டன.

இச்சோதனை காலங்களில் முஸ்லிம்கள் மிகப் பொறுமையாக நடந்து கொண்டமை சகோதர சமூகங்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ சமூகத்தினரும் கைக்கூலிகளின் சதித்திட்டங்களுக்கு இரையாகமல் ஏகத்துவ மார்க்கங்களின் எதிரிகளை அடையாளம் காணப் பொறுமையாக நடந்து கொண்டமை தீர்க்கதிரிசி ஆப்ரஹாம் (இப்றாஹீம்) நபியின் பொறுமையையே ஞாபகமூட்டுகிறது.

இஸ்லாத்தின் கடமைகளை ஏனைய சமூகத்தினரின்,நம்பிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையாமல் பொறுமை,நிதானமாக மேற்கொள்வது இன்றைய கால கட்டத்தின் கட்டாயத் தேவையாகும். எனவே உழ்ஹியாக் கடமைகளை நிறைவேற்றும் முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தாதும் இஸ்லாம் போதிக்கும் ஜீவகாருண்யத்தையும் பின்பற்றுவதே சிறந்தது.

எதிரே வரும் நாட்கள் தேர்தல்களை எதிர் கொள்ளவுள்ளதால் எமது செயற்பாடுகள் அனைத்தையும் இனவாதிகள் அரசியல் மூலதனமாக்குவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் மறந்து விட முடியாது. சிறுபான்மைச் சமூகத்தினரை பெரும்பான்மையினருக்கு எதிரானோராகக் காட்டும் கடும்போக்கர்களின்,
தந்திர நகர்வுக்குள் முஸ்லிம்கள் விழுந்து விடாமல் பக்குவமான முறையில் எமது மார்க்கக் கடமைகளைச் செய்ய வேண்டும்.

கடும்போக்கர்களுக்கு அடிபணியாத, தலைமையை அடையாளம் காணும் வரை, பொறுமையாக இருப்பதே சமுகத்துக்குப் பாதுகாப்பாக அமையுமென்றும் அமைச்சர் ரிஷாத் ஈகைத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

கோத்தபாயவை தோற்கடிப்பது எப்படியென்பது எமக்குத் தெரியும்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அல்ல அவரது தந்தையை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கினாலும் எவ்வாறு தோற்கடிப்பது என்பது தமக்கு தெரியும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்களை இரண்டாம் சுற்றிலும் தோற்கடிப்பது எப்படி என்பதனை நாம் காண்பிப்போம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் மாகாணத்தில் நடைபெற்ற சில மக்கள் சந்திப்புக்களில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
எமது கட்சியில் பிரச்சினை இல்லை, பிரச்சினைகளை நாம் உள்ளேயே தீர்த்து கொள்வோம். வெற்றியீட்டும் வேட்பாளரை நாம் உங்களுக்கு வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையினர் சஜித் பிரேமதாஸவுடன்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எப்படியாவது அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவது கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் தீர்மானம் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த முடிவை கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் ஊடாக அறிந்துக்கொள்வது உசிதமானது என அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித்தான் – மங்கள

ஐனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாச என்று தான் உண்மையில் நாங்கள்நினைக்கின்றோம். அவ்வாறு வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரையே நாங்கள் விரைவில் பெயரிடுவோம் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயம் செய்த அமைச்சர் மங்கள சமரவீர வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற
நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த பொது ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய
கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
அடுத்த ஐனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். ஆவ்வாறு வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்ஒருவரை நாங்கள் விரைவில் பெயரிடுவோம். ஆனால் உண்மையில் எங்களுக்கு பல தரப்பட்ட கருத்துக்கள் எண்ணங்கள்
இருக்கலாம். ஆனால் அவ்வாறு பெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாசா தான் என்று நாங்கள் உண்மையில்நினைக்கின்றோம்.
ஆயினும் அப்படியாக ஒரு தீர்மானத்தை இதுவரையில் எடுக்கவில்லை. ஏனெனில் அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியதுபாராளுமன்றக் குழுவும் செயற்குழுவுமே தான். அதனடிப்படையில் பாராளுமன்றக் குழுவும் மற்றும் செயற்குழுவும் கூடி அங்கு பெரும்பான்மையானவர்கள் என்னத்தைச் சொல்கின்றனரோ அதனைத் தான் கட்சி செய்யும் – என்றார் மங்கள

எமது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒரு கலவரம்தான் நடந்தது, இவ்வாட்சியில் பல கலவரங்கள் நடந்துவிட்டன – பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்
பொதுஜன பெரமுனவின்  முஸ்லிம் பிரிவினருடன் நடந்த. சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பேருவளை கலவரம் மாத்திரம்தான் நடைபெற்றது. ஆனால் தற்போதைய ஆட்சியில்முஸ்லிம்களுக்கு எதிராக பல கலவரங்கள் நடந்து முடிந்துவிட்டன.
முஸ்லிம்கள் குர்பானை நிறைவேற்றுவதில்கூட சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்தநிலையில் முஸ்லிம்கள் சகலரும் ஒன்றுபட்டு எமக்கு ஆதரவளிக்க வேண்டும். அதற்காக பொதுஜன பெரமுனவின்  முஸ்லிம்  பிரமுகர்கள் அரும்பாடு பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.