மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள்

சுஐப் எம். காசிம்

ஜனாதிபதி வேட்பாளர்களை அறிந்து கொள்வதில் மக்களுக்கிருந்த ஆர்வம் படிப்படியாகத் தணிந்து வரும் நேரமிது.ஒரு தரப்பாருக்கு சஞ்சலத்தையும் மற்றுமொரு தரப்பினருக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்தி, எதிர்பார்ப்புகளின் உச்சத்திலிருந்த ஒரு கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களின் ஆர்வங்கள் தணியத்தொடங்கின. கடைசியாக நடந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றதும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்றதும் ஶ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவின் இமேஜை ஏனைய கட்சிகளை விட ஒரு படி உயர்த்தியுள்ளதுதான்.

எனினும் தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை, கட்சியின் வெற்றிக்கு எவ்வாறு இட்டுச் செல்லும். 2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளே இச்சிந்தனைகளைக் கிளறுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை,செல்வாக்கு, அவருக்கிருந்த புகழ் அனைத்தையும் ஐக்கிய தேசிய முன்னணி எப்படித் தோற்கடித்தது?.

தேர்தல் கூட்டணியை அமைப்பதில் ராஜபக்ஷ தரப்பு விட்ட தவறிலிருந்தே அத்தரப்பின் தோல்வியும் எழுதப்பட்டது. பலமான கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தியிருந்தால், 57 இலட்சம் வாக்குகளுடன் பங்காளிக் கட்சிகளின் பங்களிப்பும் வெற்றிக்குப் பங்களித்திருக்கும்.

இதே தவறுகளே இம்முறையும் இடம் பெறுமோ தெரியாது. தேசிய காங்கிரஸ், ஈபிடிபி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிர இன்னும் பத்துக் கட்சிகள் இந்த அணிக்கு எத்தனை வாக்குகளுக்கு பங்களிக்கும். உண்மையில் இதர கட்சிகளின் எதிர்பார்ப்பு, இணக்கப்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டிருந்தால் கோட்டாபாய வேட்பாளராகியிருக்க முடியாது. எனவே இம் முறையும் தனிநபர் ஆளுமையே களமிறங்குகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் இந்தக் களத்தை எதிர்த்துப் போரிடப்போவது யார்? யார் என்பது இதுவரை தெரியாவிட்டாலும் களமாடப் போவது ஐக்கிய தேசியக் கட்சி என்பது மட்டும் உண்மை. இக்கட்சி தனிநபர் ஆளுமையை விடவும் கூட்டுப்பலத்தையே அதிகம் நம்பியுள்ளது.இக் கூட்டுப்பலத்தை உருவாக்கும் முயற்சிகள் இது வரை வெற்றியளிக்கவில்லை.

பங்காளிக் கட்சிகள் காட்டும் தயக்கம்,ஶ்ரீகொத்தாவின் உட்பூசல்கள், எதிரணி வேட்பாளருக்குப் பின்னாலுள்ள சக்திகள் இவையெல்லாம் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பெரும் தலையிடியாகியுள்ளன.சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகளை வளைத்துப் பிடித்தாலும் அச்சமூக மக்களை வழி நடத்தும் ஆளுமை தமிழ்,முஸ்லிம் தலைமைகளுக்கு உள்ளதா? அல்லது 2015 இல் மந்தைகள் கட்டவிழ்ந்து போனதுபோல், இம் முறையும் முஸ்லிம் சமூகம் கட்டவிழ்ந்து செல்லுமா? இவ்வாறு கட்டவிழாமல் காப்பாற்றப்போவது எது.?

உண்மையில் இத்தலைமைகளின் முடிவுகளே சமூகம் கட்டவிழ்ந்து செல்வதைக் காப்பாற்றும். 2015 இல் 61 இலட்சம் மக்கள் தவறிழைத்தமைக்கு ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்திய வேட்பாளரே காரணம். இதுபோன்ற தவறுக்கும் தெரிவுக்கும் மக்கள் ஆளாகக் கூடாதென்பதே ஶ்ரீகொத்தாவின் உயர்மட்டத் தலைவர்களின் கவலை. இதனால்தான் இதுவரைக்கும் இழுபறி.

2015 ஆம் ஆண்டு விட்ட தவறினால் நாட்டின் நிர்வாகம் முற்றாகக் குலைந்து சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறைகள் முரண்பட்டமை ஜனநாயகத்துக்கு விழுந்த கீறல்களாகவே பார்க்கப்படுகிறது. ராஜபக்ஷக்களுக்கு நிகராக ஒரு தலைவரைப் பெறமுடியாவிட்டாலும் ஒரு கூட்டுப்பலத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் ரணில் காலம் கடத்துகிறார். காலம் பதிலளிக்கும் வரை பொறுமை காப்பதும் ரணிலுக்கு அத்துப்படியான ராஜதந்திரங்களில் ஒன்று.

தனக்கு வாய்ப்பை உருவாக்குவது, வராவிட்டால் யாரையாவது மாட்டிவிடுவது. இது வரைக்கும் இந்த வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. இம்முறை எப்படியாவது வாய்ப்புக்காக வாதாடுவதென்று விடாப்பிடியாய் உள்ளதால் ஆரூடமாகச் சொல்லப்படும் வேட்பாளர்கள் எவரையும் ரணில் பொருட்படுத்தவும் இல்லை.நாளை மறுதினம் தீர்க்கமான தீர்மானங்கள் வெளிவரவுள்ளன.

ஒருவாறு ரணிலன்றி வேறு வேட்பாளரின் பெயர் வெளியாக வேண்டுமென்பதே மொட்டு அணியினரின் விருப்பம்.வெளிநாடுகளின் தலையீடு,நெருக்குதல்கள் இல்லாதிருந்தால் 2015 இலும் வென்றிருப்போம் என்கிறார் மஹிந்த. வெளிநாடுகளுக்குத் தேவையற்றவர் என்ற விம்பம் சஜித் பிரேமதாசவுக்கு கிடைப்பதற்கு மஹிந்தவின் இந்த வாக்குமூலமே வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு சஜித்தால் களமாட முடியுமா? என்பதே ஸ்ரீகொத்தாவுக்குள்ள கவலை.முன்னாள் ஜனாதிபதிகளின் மகனும் சகோதரனும் களமிறங்கச் சாத்தியமான இந்தத் தேர்தல் நாட்டின் அதியுச்ச அதிகாரத்தை இருபது வருடங்களுக்கு கையகப்படுத்தும் போட்டியாகவே பரிணமிக்கப் போகிறது.

பிரேமதாசாவை நேசிப்பவர்கள் தன்னை ஆதரிக்க வேண்டுமென்று சிங்களத் தலைவர்களைக் கொன்று குவித்த புலிகளைத் தோற்கடித்த பெருமையை ஞாபகமூட்டவே மொட்டு முனையும். குடும்ப ஆதிக்கம், கொலைகாரர்களின் அதிகாரத் தொல்லையை இல்லொதொழிக்க தனக்கு வாக்களிக்கக் கோருவார் சஜித். இரு தரப்புக் கோரிக்கைகளும் நியாயமானதுதான்.வாக்களிக்கத் தூண்டுமா? விருப்பத்தை எற்படுத்துமா? எதுவாயிருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தேராண்மைவாதத்தை அங்கீகரித்து 2013 இல் காலியில் அலுவலகம் திறந்து அங்கீகாரம் வழங்கிய மொட்டு அணி வேட்பாளரின் மனநிலையை முஸ்லிம்கள் இன்னும் மறக்கவில்லை.

சிவப்புத் தொப்பியணிந்த ஒரு சில மௌலவியர் மொட்டை மோப்பம் பிடிப்பதற்காக, முழு முஸ்லிம்களும் சுகந்தம் நுகர மொட்டை நாடுவார்களா? இவ்வாறு நாடுவது முஸ்லிம்களை நடுத் தெருவில் நிர்க்கதியாக்குமா? சஜித்தைப் பொறுத்தவரை சிறுபான்மைச் சமூகங்களின் நாடி, நரம்புகளைப் பிடித்தறிந்து பணியாற்றும் பக்குவமும் பற்றாக்குறையாகவே உள்ளது.இவைகளே இன்று கள எதிரொலிகள்.

சுற்றாடல் அனுமதிப்பத்திரமின்றி செயற்படும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்?!

Lakwijaya Power Plant

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு செல்லுபடியாகும் சுற்றாடல் அனுமதிப்பத்திரமொன்று தற்போது இல்லை என்ற விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னர் அதனை நீடிக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமேல் மாகாண பணிப்பாளர் சமன் லெனதுவ குறிப்பிட்டார்.

மூன்று மின் பிறப்பாக்கிகள் ஊடாக நிலக்கரியைப் பயன்படுத்தி தேசிய கட்டமைப்புடன் 900 மெகாவாட்ஸ் மின்சாரத்தை இணைப்பதே நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயற்பாடாகும்.

இவ்வாறான மின்நிலையம் ஒன்றை செயற்படுத்துவதற்கு சுற்றாடல் அனுமதிப்பத்திரம் அத்தியாவசியம். அதனூடாகவே சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும். எனினும், அந்த அனுமதிப்பத்திரம் இன்றியே நுரைச்சோலை அனல்மின் நிலையம் தற்போது இயங்கி வருகின்றது.

இந்த அனல் மின் நிலையத்தினால் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. குறித்த பிரதேசத்தில் அதிகளவில் சாம்பல் படிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன், பயிர் நிலங்களும் பாதிப்பிற்குள்ளாகின்றன.

இந்த பிரச்சினைக்குத் தீர்வாக நுரைச்சோலை மின் நிலையத்தின் மின்காந்தத் தூண்டல் பகுதியை விரிவுபடுத்துவதற்கான யோசனை அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மின் நிலையத்தின் அனைத்து பொறியியலாளர்களின் கையொப்பத்துடன் கடந்த வருடம் ஜூன் மாதம் 26 ஆம் திகதி மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இதன் பாரதூரம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயற்படுத்தப்படும்போது நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் தொன் மென்மையான சாம்பல் வெளியாவதாக அதில் கூறப்பட்டிருந்தது.

நிலக்கரியை எரிப்பதால் வௌியாகும் சாம்பலின் தரத்திற்கேற்ப, அவை சீமெந்து உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டபோதிலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து வௌியேற்றப்படும் சாம்பல் அதற்கு தகுந்ததாக இல்லை என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் ஆசனிக் போன்ற விஷ இரசாயனம் அடங்கிய இந்த சாம்பல் அதிகளவில் மின் நிலைய வளாகத்தில் குவிக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் பாரியளவிலான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

தூசு மற்றும் சாம்பல் காரணமாக ஏற்படும் அசௌகரியத்தினைக் குறைப்பதற்காக நிபுணர்களின் ஒத்துழைப்புடன் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு முன்வைத்த யோசனை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சூழல் பிரச்சினைகளுக்கு அப்பால் இந்த மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழந்துள்ளது. இந்த மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நாற்பதுக்கும் அதிகத் தடவைகள் இந்த மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளது.

அனல் மின் நிலையங்களின் ஊடாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்ற இந்தத் தருணத்தில் மற்றுமொரு மின் நிலையத்தினை சம்பூர் பகுதியில் நிர்மாணிப்பதற்கான யோசனை அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

நியூஸ்பெஸ்ட் இது தொடர்பில் தொடர்ந்தும் செய்தி வௌியிட்டு வந்ததுடன், சுற்றாடல் அமைப்புக்கள் உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பிற்கு மத்தியல் அத்திட்டம் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் அனல் மின் நிலையத்திற்குப் பதிலாக இயற்கை வாயு அல்லது எல்.என்.ஜி போன்ற சுற்றாடலுக்கு குறைவான பாதிப்பினை ஏற்படுத்தும் மின் நிலையங்களை அறிமுகப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.

எனினும், அந்தக் கொள்கைக்குப் பதிலாக திருகோணமலை மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் இரண்டு அனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு மீண்டும் அமைச்சரவையில் பத்திரமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சரத் அமுனுகம முன்வைத்த பிரேரணை ஜனாதிபதியின் தலையீட்டினால் நிராகரிக்கப்பட்டபோதிலும் நிலக்கரியை பிரபல்யப்படுத்துவதற்கு சிலர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Clean Coal என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டபோதிலும், இந்த தொழில்நுட்ப முறை இன்னமும் பரீட்சார்த்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தற்போது நிலக்கரி பயன்பாட்டை கைவிட்ட வண்ணமுள்ள நிலையில், அவர்கள் கைவிட்ட மின் நிலையங்களை எம்மைப் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிப்பதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதியின் கீழே சுற்றாடல் அமைச்சு உள்ளது.

உலகின் காலநிலை மாற்றம் தொடர்பில் பாரிஸ் நகரில் கூடி கலந்துரையாடிய உலகத்தலைவர்கள் ஏற்படுத்திய கோப் – 21 என்ற இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் ஜனாதிபதி பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அரச தலைவரின் கொள்கையை மீறி பல்வேறு யோசனைகளைக் கொண்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நோக்கம் இலாபத்தை இலக்காகக் கொண்டதாக அமையலாம் அல்லவா?

சிவப்பு இராட்சதன் நிலையை அடையவுள்ள சூரியன்

Image title

ஐந்து பில்லியன் வருடங்களுக்குள் சூரியன் 100 மடங்கு பெரிதாகும் எனவும் இதனால் பூமியின் அழிவு நிச்சயம் நெருங்கி வருகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கைக்கு மாறாக பல வினோதங்கள் நடைபெற்று வரும் இவ்வுலகில் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதனால் இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன், ‘மஞ்சள் குள்ளன்’ என்ற தரத்தில் இருந்து தீவிரமடைந்து 100 மடங்கு பெரிதாகி ‘சிவப்பு இராட்சதன்’ என்ற நிலையை அடையவுள்ளது.

இதையடுத்து, பூமி பேரழிவை சந்திக்கும் ஆபத்து நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர்.

இத்தகைய நிகழ்வுகளால் சூரியன் உயிர்களை சுட்டெரிக்கும் அளவிற்கு வெப்பத்தை உமிழும் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சூரியனிற்கு மிக அருகில் உள்ள புதன், வெள்ளி போன்ற கிரகங்களை விழுங்கும் ஆபத்து உள்ளது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாம்புகளாகித் துரத்தும் சொற்கள்

Image title

(முகம்மது தம்பி மரைக்கார்)

"தவளை தன் வாயால் கெடும்" என்பார்கள். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும். அரசியல் அரங்கில் எத்தனை பழம் தின்று, எவ்வளவு கொட்டைகளைப் போட்டவர்களாக இருந்தாலும், சிலர், தங்கள் சொற்களாலேயே தமக்குச் சூனியம் வைத்துக் கொள்கின்றனர்.

எதிராளியைக் குறிவைப்பதாக நினைத்துக் கொண்டு, இவர்கள் வீசுகின்ற கற்கள், கடைசியில் இவர்களையே காயப்படுத்தி விடுகின்றன. அரசியலில் தலைவர் என்கிற கீரீடங்களைச் சுமப்பவர்கள் கூட, தமது தவளைப் பேச்சுக்களால் சிலவேளைகளில் கோமாளிகளாக மாறிவிடுகின்றனர்.

மு.காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடானது இன்னுமின்னும் சூடு பிடித்துக் கொண்டே போகிறது. அந்த நெருப்பு இப்போதைக்கு அடங்காது. தலைவர் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஹசன் அலிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடானது, இப்போது தலைவருக்கும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்துக்கும் இடையிலான போராக மாறியிருக்கிறது. பஷீர் மீது கடும் சொற்களை நேரடியாகவும் குத்துக்குறிப்பாலும் ஹக்கீம் வீசி வருகின்றார். ஆனால், இதுகுறித்து பஷீர் நிதானமிழந்ததாகத் தெரியவில்லை. ஹக்கீம் வீசிய சொற்களையே பொறுக்கியெடுத்து, அவற்றினை தனது மாயாஜாலத்தினால் பாம்புகளாக்கி, ஹக்கீமை நோக்கி பஷீர் வீசியிருக்கின்றார்.

தனது சொற்களே – பாம்புகளாகி, தன்னைத் துரத்தத் தொடங்கியதால், ஹக்கீம் இப்போது அச்சத்துள் உறைந்து போயுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் என்பது, ஒரு காலத்தில் மக்களுக்கான அரசியல் கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது அதன் திசை மாறிப்போயுள்ளதாக பரந்தளவில் குற்றச்சாட்டுகள் உள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாமர மக்களின் வியர்வையிலும், நம்பிக்கையிலும், பிரார்த்தனைகளிலும் உருவான இந்தக் கட்சியானது, இப்போது பணம் உழைக்கும் ஒரு நிறுவனமாக மாறி, மேட்டுக்குடி மனிதர்களின் கைகளுக்குள் சிக்கி விட்டதோ என்று அச்சப்படும் வகையில், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் மாறியுள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒவ்வொரு முறையும் வாக்களித்து வரும் பாமர மக்களின் நம்பிக்கைகளில் – அந்தக் கட்சியின் தலைமையானது, மண்ணை வாரி இறைத்து வருவதாக, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களே கோபப்பட்டுக் கொள்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் இணைந்தமை, திவிநெகும சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களித்தமை, கசினோ சட்ட மூலத்தை எதிர்க்காமல் வாக்களிப்பிலிருந்து நழுவியமை, மஹிந்த ராஜபக்ஷவை ஒரு சர்வதிகாரியாக மாற்றும் 18ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தமை என்று, கடந்த நான்கு, ஐந்து வருடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவுகள் – மக்கள் நலனற்றவை, சமூகம் குறித்துச் சிந்திக்காதவை, காசுக்கு விலை போனவை என்று விமர்சிக்கப்படுகின்றன.

ஆனால், இவை எல்லாமே தனக்கு விருப்பமின்றியும், தனது கட்டுப்பாடுகளையெல்லாம் மீறியும் நடந்த விவகாரங்கள் என்று மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், இற்றை வரை பேசி வருகின்றமைதான் புதினமான விடயமாகும். முஸ்லிம் காங்கிரஸில் பிரமுகர்களாக உள்ள சிலர், கட்சியைப் பலிகொடுக்க முயற்சித்த போதும், தன்னை பணயக்கைதியாக்கிய சந்தர்ப்பங்களிலும், மேற்படி விவகாரங்கள் நடந்தேறி விட்டன என்று, நடந்த தவறுகளுக்கு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் நியாயம் கற்பித்து வருகின்றார்.

இது வெட்கம் கெட்டதொரு கதையாகும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியானது கிட்டத்தட்ட, ஒரு சர்வதிகாரியின் பதவி நிலைக்கு ஒப்பானதாகும். தலைவர் நினைத்தவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க முடிகிறது. தலைவர் நினைத்த மாத்திரத்தில் – தலைவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட உயர்பீட அங்கத்தவர்களின் உறுப்புரிமைகள் இடைநிறுத்தப் படுகின்றன. தலைவர் நினைத்தபோது செயலாளரின் அதிகாரங்களைப் பிடிங்கிக் கொள்ள முடிகிறது. தலைவர் விரும்பிய வேளையில், தலைவருக்குத் தோதான உயர்பீட செயலாளர் என்கிற புதிய பதவியொன்றினை கட்சிக்குள் உருவாக்க முடிகிறது. இப்படி, சக்திமிக்க அதிகாரங்களைக் கொண்ட மு.கா தலைவரை, கட்சிக்குள் யாரோ பயணக்கைதியாக வைத்து காரியம் சாதித்ததாக, மு.கா தலைவரே கூறுவதானது ஆச்சரியமானதாகும்.

காத்தான்குடியில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூட, இந்தப் பணயக்கைதிக் கதையினை மு.கா தலைவர் கூறியிருக்கின்றார். "முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை பணயக்கைதியாக வைத்து, இனிமேலும் அரசியல் செய்ய இடமளிக்கப் போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை அவமானப்படுத்துவதற்கும், மானபங்கப்படுத்துவதற்கும், கடந்த காலங்களில் அதை அடிப்படையாக வைத்து – தங்களுடைய பதவிகளுக்காக பேரம் பேசியவர்கள், இனிமேலும் இந்தக் கட்சியின் தலைமையை பணயக்கைதியாக வைத்து அரசியல் செய்ய முடியாது" என்று, காத்தான்குடியில் மு.கா தலைவர் தெரிவித்திருந்தார்.

மு.கா தலைவரின் மேலேயுள்ள கூற்றுப்படி பார்த்தால், மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கடந்த காலங்களில் கட்சிக்குள் இருக்கின்ற யாரோ ஒருவர் அல்லது சிலர் – அச்சுறுத்தி, பணயக்கைதியாக வைத்திருந்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை பணயக்கைதியாக வைத்திருந்தவர்களிடம், மு.கா தலைவரை அவமானப்படுத்தக் கூடிய ரகசியங்கள் இருந்திருக்கின்றன. மு.கா தலைவரை பணயக்கைதியாக்கியவர்கள் – அவரை அச்சுறுத்தி, தங்களுக்குத் தேவையான பதவிகளையெல்லாம் மு.கா தலைவர் மூலம் பெற்றிருக்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை மானபங்கப்படுத்தும் வகையிலான இரகசியங்களைத் தம்வசம் வைத்திருந்தவர்கள், அவற்றினைக் காட்டி ஹக்கீமை அச்சுறுத்தி, அதன் மூலம் தமது அரசியலை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து நன்மைகளையும் ஹக்கீமிடமிருந்து பெற்றிருக்கின்றனர். என, பல விடயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

உண்மையில், முன்பு தன்னை பணயக்கைதியாக்கிய நபர்கள், மீண்டும் தன்னை அந்த நிலைக்குள்ளாக்கி விடுவார்களோ என்று, மு.கா தலைவர் ஹக்கீம் பயப்படுகிறார் போலவே தெரிகிறது. இருட்டில் தனியாக நடப்பவன் – தனது அச்சத்தை மறைப்பதற்காக, சத்தமாய் பாடிக்கொண்டு போவதைப் போலதான், மு.கா தலைவரின் காத்தான்குடி உரையை நோக்க முடிகிறது.

எது எவ்வாறாயினும், மு.காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தைக் குறித்தே, இந்தப் பணயக்கைதிக் கதையை மு.கா தலைவர் கூறியதாக – கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சுக்கள் உள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், மு.காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுடைய காத்தான்குடி உரை குறித்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் – தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையானது மிகவும் கவனத்துக்குரியது, வாதப் பிரதிவாதங்களைக் கொண்டது, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமை மோசமானதொரு பொறிக்குள் தள்ளிவிட்டுள்ளது.

தவிசாளர் பஷீர் சேகுதாவூத் விடுத்துள்ள அந்த அறிக்கையைப் படித்த பிறகுதான் – காத்தான்குடி உரையின் மூலம், தலைவர் தன் வாயால் கெட்டுப்போயுள்ளார் என்பதை, அநேகர் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். யாரோ ஒருவர் அல்லது சிலர் – தன்னைப் பணயக்கைதியாக வைத்திருந்தனர் என்று மு.காங்கிரஸ் தலைவர் பட்டும்படாமல், பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், "மு.காங்கிரஸ் தலைவரை எவரெவர் பணயக்கைதியாக வைத்திருந்தனர் என்பதையும் எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் மக்கள் புரியும்படியாக,- தெளிவாக வெளிக்கொணர்வது தலைவர் ரவூப் ஹக்கீமுடைய கடமையாகும்"

என்று தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், "ரவூப் ஹக்கீமுடைய 16 வருட தலைமைத்துவக் காலத்தினுள் இவ்வாறான பணய நாடகங்கள் எவ்வளவு காலம் நீடித்தன என்பதையும் தலைவர் வெளிப்படுத்த வேண்டும்" என்றும் பஷீர் கோரிக்கை விடுத்துள்ளார். மு.கா தவிசாளர் பஷீருடைய இந்த அறிக்கையானது தலைவர் ஹக்கீமுக்கு மெல்லவும் முடியாத, விழுங்கவும் முடியாத இரண்டுங்கெட்டான் நிலையினை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது அறிக்கைக்கு மு.கா தலைவரால் விளக்கமாகப் பதிலளிக்க முடியாது என்பதை, பஷீர் மிக நன்கு அறிவார். அதனால், மு.கா தலைவரை மேலும் சங்கடப்படுத்திப் பார்க்கும் வகையில், இன்னும் பல விடயங்கள் குறித்தும் தன்னுடைய அறிக்கையில் பஷீர் பேசுயுள்ளார். "ரவூப் ஹக்கீம் அகப்பட்டுக் கொண்ட எவ்விதமான விடயங்களில், எந்தத் தருணங்களில் தலைமையையும், கட்சியையும் யாரெல்லாம் பணயக்கைதியாக வைத்திருந்தனர் என்பதைத் தலைவர் ஹக்கீம் வெளிப்படுத்த வேண்டும்.

இவ்விடயங்களை அவர் தெரியப்படுத்தும் போது, கடந்த 16 வருடங்களாக அவருடைய தலைமையானது நிமிர்ந்து நின்று நிலைத்ததா? அல்லது, சரணடைந்து சரிந்ததா? என்கிற வரலாறு மக்களுக்குத் தெளிவாகும்" என்றும் பஷீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மு.கா தலைவருடைய ஏகப்பட்ட இரகசியங்கள் தவிசாளர் பஷீரிடம் உள்ளன என்றும் அவற்றினை வைத்துக் கொண்டு, ஹக்கீமை பஷீர்தான் பணயக்கைதியாக்கிக் காரியங்களைச் சாதித்து வந்தார் என்றும், அரசியல் அரங்கில் மிக நீண்டகாலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந்தக் கதையை பஷீரும் அறிவார். அதனால், இதற்கான பதிலினையும் தனது அறிக்கையில் பஷீர் உள்ளடக்கியுள்ளார்.

"எந்தவோர் அரசியல் தலைவரினதும் கண்ணுக்குப் புலப்படாத தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில், எவ்வித இரகசியங்களின் தடயங்களும் என்வசமில்லை என்பதை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பஷீர், "அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சபலங்கள், முஸ்லிம் அடையாள அரசியலைப் பலிகொண்டு விடக்கூடாது என்பதில் கடந்த 15 வருடங்களாக மிக்க கரிசனையுடன் இயங்கி வந்துள்ளேன்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

இங்கு, பஷீர் பொடிவைத்துப் பேசும் விடயம் என்ன என்பதை, புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு அப்பால் இந்த விடயம் குறித்து பஷீர் பேசுவது ஹக்கீமுக்கு ஆபத்தாகும். அந்த ஆபத்தினை ஹக்கீமுக்கு உணர்த்துவதற்காகவே, பஷீர் இங்கு பொடிவைத்துப் பேசியிருக்கின்றார் என்பதையும் உணரக் கூடியதாக உள்ளது.

எது எவ்வாறாயினும், தன்னை அச்சுறுத்தி – பணயக்கைதியாக வைத்திருந்தவர்களிடம், தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியைத் தாரை வார்த்திருக்கின்றார் என்பதை, அவருடைய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முடிகிறது. அதுவும், ஹக்கீமுடைய தனிப்பட்ட விவகாரம் தொடர்பில்தான், இந்தப் பணய நாடகங்கள் அரங்கேறியிருக்கின்றன என்பதும் புலனாகிறது.

கிழக்கு மக்களின் ரத்தம், வியர்வை, நோன்பு மற்றும் பிராத்தனைகளால் கட்டி வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை வைத்து, ஒரு காலகட்டத்தில் மாபெரும் சூதாட்டமொன்று நடந்தேறியிருக்கிறது. இவை அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, "என்னைச் சிலர் பணயக்கைதியாக்கி, கட்சிக்குள் பதவிகளையும் அதிகாரங்களையும் பறித்தெடுத்துக் கொண்டனர்" என்று, மு.கா தலைவர் இப்போது வந்து, எதுவும் அறியாத பாலகன்போல் பேசுவது மற்றவர்களை முட்டாள்களாக்கும் முயற்சியாகும். மு.காங்கிரஸின் தலைவர் கூறுகின்றமைபோல், ஒரு காலகட்டத்தில் அவர் பணயக்கைதியாக்கப்பட்டிருந்தார் என்பது உண்மையாயின், அதை யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்பதை, தலைவர் ஹக்கீம் வெளிப்படையாகக் கூற வேண்டும். அதைத் தெரிவிப்பதற்கு ஹக்கீம் தயங்குவாராயின், முஸ்லிம் காங்கிரசை பிழையாக வழிநடத்திய குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக, ஹக்கீம் சொல்லுகின்ற ஒரு புனைகதையாகவே, மேற்படி பணயக்கைதி விவகாரத்தினைப் பார்க்க வேண்டியிருக்கும். மு.கா தலைவர் மௌனம் காத்தால், சொற்கள் பாம்புகளாகி இன்னும் துரத்தும்.

இலங்கையைக் கவிழ்க்கும் விடுமுறைகள்!

Image title

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு வழங்கப்படும் 25 பொது விடுமுறைகள் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற போரினால் பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை நிவர்த்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் நாட்டில் வழங்கப்படும் பொது விடுமுறைகள் பெரும் தடையாக அமைவதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13 நாட்களும் ஜப்பானில் 17 நாட்களும், இந்தோனேஷியாவில் 19 நாட்களும், தாய்லாந்தில் 20 நாட்களும் பொது விடுமுறைகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன், அமெரிக்காவில் 09 நாட்களும் அவுஸ்திரேலியாவில் 10 நாட்களும் பொது விடுமுறைகளாக உள்ளன. எனினும், இலங்கையில் பல்லின இனங்களை இலக்கு வைத்து இந்த விடுமுறைகள் ஒதுக்கப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்துக்கமைய 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் பௌத்தர்களாக உள்ளனர். தவிர இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனையவர்கள் என பல்லின மத, இன அடிப்படையில் விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. பௌத்தர்கள் புனித நாளாகக் கருதும் பௌர்ணமி தினங்கள் வழங்கப்படும் பொது விடுமுறைகளே, வருடத்தில் 12 நாட்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

"இஸ்லாமிய மார்க்கம் காதலை, எதிர்ப்பதாக கருதுவது தவறானது"

Image title

காதலர் தினத்தை கண்டித்து இஸ்லாமிய பிரச்சாரகர்களும் இயக்கங்களும் அதிகமாக ஓங்கியொலிப்பதால் இஸ்லாமிய மார்க்கம் காதலை எதிர்ப்பதாக கருதுவது தவறானது.

இஸ்லாம் காதலை ஆதரிக்கிறது, காதலை வலியுறுத்துகிறது. ஒரு ஆணும் பெண்ணும் தமக்கான வாழ்க்கையை துணையை தேடிக்கொள்வதற்கான, தெரிவுசெய்வதற்கான உரிமையை தாராளமாகவே இஸ்லாம் வழங்கியுள்ளது.

மேலும் கட்டாயத்திருமணத்தை இஸ்லாம் வன்மையாகவே கண்டிக்கிறது. தனக்குப்பிடித்த, தனக்கேற்ற வாழ்க்கைத்துணையோடுதான் ஒரு ஆணும் பெண்ணும் வாழவேண்டுமென்பது இஸ்லாத்தின் கண்டிப்பான கட்டளை.

ஆனாலும் காதல் என்னும் பெயரால் சமகாலத்தில் இடம்பெற்றுவருகின்ற சமுதாய, கலாச்சார சீர்கேடுகளை இஸ்லாம் வெறுக்கிறது. மேலைத்தேய கலாச்சார மோகத்தில் சிக்குண்டு காதல் என்ற போர்வைக்குள் இளம்பெண்களின் கற்பொழுக்கம் சூறையாடப்படுவதை தூய இஸ்லாமிய மார்க்கம் மிகவும் வன்மையாகக்கண்டிக்கிறது.

பெண்களை கௌரவப்படுத்துவதையும் அவர்களை பாதுகாப்பதையுமே இலட்சியமாகக்கொண்ட இஸ்லாமிய மார்க்கம் காதலர் தினம் என்ற கலாச்சார சீரழிவால் பெண்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு இறுதியில் அவர்களுடைய எதிர்காலம் இருட்டறையாவதை விரும்பவில்லை.

காதலர்தினங்களின்போது லொட்ஜ்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் றூம் போட்டு பெண்களை Use & Trough பண்டமாக பயன்படுத்துகின்ற இந்த படுகேவலமான சித்தாந்தத்தை இஸ்லாமிய மார்க்கம் ஒழித்துக்கட்ட முனைகிறது.

பூங்காக்களிலும் கடற்கரையோரங்களிலும் மரத்தடி மறைவுகளிலும் குடைகளுக்குள்ளும் அற்பநேர சுகத்திற்காக பெண்களின் விலை மதிப்பற்ற கற்புகளும் உயிர்களும் விரயமாக விலைபோவதை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்காது.

எதிர்கால சந்ததியை வழிநடாத்துகின்ற பொறுப்பையும் கடமையையும் தன்னகத்தே சுமந்து நிற்கின்ற சமகாலத்தலைமுறை விபச்சாரத்தின் மூலமாக மானம், மரியாதைகளை இழந்து தனது எதிர்காலத்தை ஹோட்டல் அறைகளிலும் கடற்கரையோரங்களிலும் தொலைத்துவிட்டு நடுச்சந்தியில் நாதியற்று நிற்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

எனவே மேலைத்தேய உலகம் முறைகேடாகப்பெற்றெடுத்த சட்டவிரோதக்குழந்தையான காதலர் தினத்தின் மூலம் சமகால இளம் தலைமுறையின் எதிர்கால இலட்சியங்களும் கனவுகளும் கலைந்துபோகும் பரிதாபத்தை இன, மத, மொழி வேறுபாடுகள் எதுவுமின்றி பொதுவாகவேதான் எதிர்க்கிறது தூய இஸ்லாம்.

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதன் மூலம் முழுமையான சுதந்திரத்தை அடைந்துவிட்டோமா?

(அட்டாளைச்சேனை மன்சூர்)

இவ்வருடம்(2016) சுதந்திர தின நிகழ்வுகளில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கருத்துரைக்கையில் சுதந்திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைப்பதை ஒரு சில அமைச்சர்கள் விரும்பவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்கவும் செய்தார்கள்.

எனினும் நான் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரின் விடாப்பிடியான முயற்சி காரணமாக அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. எனவே எதிர்வரும் சுதந்திர தினத்தில் இலங்கை வரலாற்றில் முதன்முதலாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சுதந்திர கீதம் இசைக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

உண்மையில் தேசியக் கீதம் தமிழில் முதன்முதலாக 1949ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது தேசிய சுதந்திர தினத்தில் பாடப்பட்டதாக அண்மையில் பத்திரிகை ஒன்றில் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அப்படியானால் கடந்த 66ஆண்டுகளாக தேசியக் கீதம் தமிழில் பாடவில்லை. இவ்வாண்டு பாடப்படவிருக்கிறது. தேசிய கீதம் தமிழில் பாடினால் நாம் முழுமையான சுதந்திரத்தை அடைந்துவிட்டோமா? என்பதையும் சற்று நிதானித்து யோசிக்க வேண்டியும் உள்ளது.

இன்று சில அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற பேரினவாதிகள் தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்று கோரிக்கைவிட்டுக் கொண்டு வருகின்றனர். தேசியக்கீதம் பாடுவதன் ஊடாக அனைத்து சுதந்திரமும் கிடைத்துவிட்டது. இனிவழங்குவதற்கு எதுவுமே இல்லை என்பதுபோல இறுமாப்புக் கொள்கின்;ற அரசியல் வாதிகளால்தான் நாட்டில் இன ஒற்றுமை சீர் குலைக்கப்பட்டு இன்று பேரினவதாம் தலைதூக்க முற்படுகின்றது.

இன்று நாட்டிலுள்ள நல்லாட்சியாளர்கள் இன ஒன்றுமையின் பக்கம் தன் கவனத்தை செலுத்திக் கொண்டு வருகின்ற இன்றைய நாட்களில் மக்களின் மனங்களை வெல்வதற்கான முஸ்தீபுகளில் ஒன்று நாட்டில் பிரச்சினைக்குள்ளாகிய மொழிரீதியான சிந்தனையாகும். நாட்டில் இரு மொழிபேசுவோர் மாத்திமே உள்ள ஒருநாட்டில் அந்த மொழிக்குரிய அந்தஸ்த்தை வழங்குவதை உறுதிப்படுத்துகின்ற அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருந்த போதிலும் இன்று அதன் உறுதிப்பாட்டினை மேற்கொள்ள முயற்சிக்கின்றபோது இவ்வாறான பச்சோந்திகள் நாட்டை மீண்டும் குழப்ப முயற்சிக்கின்றனர். இந்த சுதந்திர தினத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.

நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்பு, சுதந்திரத்தன்மை பேணிபாதுகாக்கப்படுகின்றபோது நாடு அபிவிருத்தியை நோக்கிய நகர்வினை உருவாக்கும். அந்த அடிப்படையில் இன்று நடைபெறுகின்ற சுதந்திர தின வைபவத்தின்போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடுவதன் ஊடாக ஒற்றுமைமிக்கதான சமூதாயக் கட்டமைப்பை கட்டியெழுப்ப முடியும்.

இன்று நல்லிணக்கம், ஒற்றுமை என்பவை மீது முக்கியத்துவத்துடன் கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில், தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்கெனவே உள்ள ஏற்பாட்டின் மீது கைவைத்து மக்களை மேலும் அல்லல்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகள் ஒழிக்கப்படவேண்டும். சிலர் தமிழில் தேசிய கீதம் பாடுவது சட்டவிரோதமானது எனக் கூறுவதையும் நாம் கேட்கின்றோம். அந்தவகையில் உணர்வுபூர்வமான ஒரு விடயத்தை அந்த மொழியில் பற்றுக் கொண்டு தேசத்தின் பற்றினை உள்ளார்ந்தமான முறையில் அனுபவிப்பதற்கு வழிசெய்த நல்;லாட்சியாளர்களுக்கு நாட்டு மக்கள் குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் நன்றியுடையோராக இருப்பார்கள் என்பது திண்ணம்.

இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று(04.02.2016) கொண்டாடப்படுகின்றது. சுதந்திரத்தின் சுதந்திரமான காற்றை சுவாசித்திருந்த மக்களிடையே இனரீதியான பிளவுகளையும், பேரினவாதக் கருத்துக்களையும் ஊட்டி மீண்டும் நாட்டை குட்டிச்சுவராக்கி, கிடைத்த சுதந்திரத்தை தொடர்ந்தும் தக்கவைக்காது நாட்டையும், சமூகத்தையும் பலிக்கடாவாக்க நினைக்கும் ஒருசிலரின் வார்த்தைகள் மீண்டும் ஒரு சுதந்திரமற்ற நாட்டை உருவாக்க முனைவதிலிருந்து பாதுகாக்க வேண்டியது சுதந்திரத்தின் சுதந்திரமான காற்றை ஒற்றுமையுடன் சுவாசிக்க நினைக்கும் அத்தனைபேரினதும் கடமையாகும்.

மக்கள் அனைவரும் தத்தமது கடமைகளை ஜனநாயகப் பண்புகளுடன் விதைக்க வேண்டும் என்பதற்கான அத்திவாரங்கள் போடப்படுகின்றன. இதனை முறியடிக்க நினைக்கின்ற விரோதிகளையும், எதிர்ப்பாளர்களையும் மக்கள் நிராகரித்து ஒதுக்குவதன் மூலம் மீண்டும் சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.

உண்மையில் சுதந்திர இலங்கையின் வரலாற்றுப்பின்னணியினைப் பார்க்கின்றபோது காலத்திற்குக்காலம் இலங்கை பல்வேறுபட்ட ஆளுகைகளுக்குள் உட்பட்டு சுதந்திரத்திற்கான விடுதலைநோக்கிய பயணத்தின் கஷ்டங்களை அனுபவித்துள்ளமை வரலாறாகும். சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் சிறுபான்மையினர் தொடர்பான சுதந்திர வேட்கைக்கு பெரும்பான்மையின அரசுகள் கொண்டிருந்த மேலாதிக்கம் இன்றுவரையிலும் தொடர்வதாகவே உள்ளது. காரணம் இன்னும் நாட்டுப்பற்றாளர்களை சுதந்திரத்தின் வெளிப்பாடுகள் காண்பிக்கவில்லை.

அதாவது சுதந்திரமானது வகுப்பாளர்களையும், இனவாதிகளையும் வளர்த்துள்ளதே தவிர இலங்கையன் என்கிற கருத்தாளத்தைக் கொண்டுள்ள மக்களை வளர்க்கத் தவறிவிட்டன. இதனால்தான் இன்று சிங்கள இரத்தம் என்றும், பொதுபலசேனா என்றும், மக்கள் மத்தியில் இனரீதியான கண்ணோட்டத்துடன் தத்தமது இனத்தின் மீதான பற்றின் காரணமாக மற்ற இனத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டதன் விளைவு நாட்டில் பாரிய விளைவுகள் கடந்தகாலத்தில் ஏற்பட்டதை மறக்கத்தான் முடியுமா. அதனை மீண்டும் கொண்டுவரத் துடிக்கும் ஏகாதிபத்திகளுக்கு மக்கள் இன்றைய நல்லாட்சியின் ஊடாக சாவு மணி அடிக்கவைத்துள்ளனர்.

இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரக் காற்று வெறுமனே கேட்டவுடன் கிடைத்ததொன்றல்ல. நாட்டின் பற்றுமிக்க பல்லாயிரக்கணக்கான வீரர்களினது தியாகத்தின் பின்னணியில் விளைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது. எமது நாட்டு சுதேசிகளின் ஆட்சிகளைத் தொடர்ந்து இலங்கையின் அமைவிடத்தின் முக்கியத்துவத்தை கண்டுகொண்ட மேற்கத்தேய ஏகாதிபத்தியவாதிகள் 1505ஆம் ஆண்டில் தம்மை அடிமைப்படுத்த முற்பட்டனர்.

அன்றிலிருந்து வெளிநாட்டினரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த எமது நாட்டை ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் தத்தமது தேவைகருதி பயன்படுத்திக் கொண்டனர். நாட்டின் அபிவிருத்தியில் கவனம் கொள்ளாது அவர்களது நலனை முன்னிலைப்படுத்துவதிலேயே கருத்தாய் இருந்தனர். இதற்காகவேண்டியே ஒவ்வொரு திட்டத்தையும் ஆரம்பித்திருந்தனர். அப்பொழுதெல்லாம் உள்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. முடிவுகளுக்கான பாதையோ மிகவும் கரடுமுரடாகவே இருந்தது.

தோற்றுப்போன அடிமை சாசனத்தின் கீழ் எம்மக்கள்; வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டினுள் இருந்தபோது சுதந்திரத்தை அடைவதில், தாய் நாட்டுக்காக போராடிய வகையில் இந்நாட்டு மக்கள் இன, மத பேதமற்ற ஒரேதாய் பிள்ளைகள்போன்று ஒற்றுமையுடன் தமது எதிர்ப்பினைக் காட்டியமையினால் 1948.02.04ஆந்திகதி விடுதலை கிடைத்தது.

அதாவது எம்மை நாம் ஆளுகின்ற நிலைக்கு வந்தது. வளம் கொழித்த நாட்டை சீரழித்து, வெறுமையுடன் ஒப்புவித்திருந்தனர் அந்நிய ஆதிக்கவாதிகள். அதுமாத்திரமான என்ன எம்மிடையே பிரித்தாளும் தந்திரத்தை தந்திரோபாயமாக உள்ளீர்ப்புச் செய்து, அதனை சமயம்சார்ந்த விடயங்களுக்குள் ஒப்புவித்து குழப்பங்களுக்கும் தூபமிட்டுக் கொண்டனர். இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பதில் வெற்றியும் கண்டனர்.

ஏகாதிபத்தியவாதிகளோ ஒற்றுமைப்பட்டிருந்த மக்களிடையே குழப்பங்களை விளைவித்தனர். உதாரணமாக 1915ஆம் ஆண்டில் சிங்கள – முஸ்லீம் கலவரத்தைக் குறிப்பிடலாம். அன்றைய தலைவர்கள் மிகவும் நிதானமாக நடந்து கொண்டதால் இக்கலவரம்; பின்னர் அடங்கிப்போனமை வரலாறாகும்.

அன்று அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், அறிஞர் சித்தி லெவ்வை, வாபிச்சி மரைக்கார் போன்றோர் தங்களது சமரீதியான நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி, தத்தமது மார்க்கத்தை வளர்தெடுப்பதில் கங்கஙனம் கட்டிக்கொண்டு சமூகத்தின் கீர்த்திமிக்கத் தலைவர்கள், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாது ஒற்றுமையுடன் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்தனர்.

மத்தியதர வர்க்கத்தினரின் ஏகபோக உரிமையாக இருந்துவந்த அக்கால ஆங்கிலக்கல்வி முறையிலமைந்த நடவடிக்கைகள் இனரீதியான பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் வித்திட வழிவகுத்திருந்தமையினால், சமயப்பற்றுடன் தாம் கற்ற கல்வி மூலமாக ஒன்றுபட்ட ஒற்றுமைகொண்ட இலங்கையினைப் பெறுவதில் பெரும்பான்மையினருடன் இணைந்து சிறந்த வழிகாட்டலுடன் சிறுபாண்மைத் தலைமைகள் நல்லுறவு பூண்டிருந்ததை வரலாற்றின் படிகளில் காணலாம்.

அந்த அடிப்படையில் சமய ரீதியான கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிய நிலையில் அன்றைய தலைவர்கள் சமயரீதியான சித்தாந்தங்களை தம்மினத்தாரிடையே ஊட்ட முற்பட்டு அதில்; வெற்றியும் கண்டனர். அந்தவகையில் சமூதாய நலனில் அக்கரைகொண்ட தலைவர்களாக ஹென்ரி ஸ்டீல் ஒல்கொட், அநாகரிக தர்மபால, குணாநந்த தேரர், ஸ்ரீ ஆறுமுக நாவலர், சேர் பொன்னம்பலம் இராமநாதன், அறிஞர் சித்திலெவ்பை, கொடைவள்ளல் வாப்பிச்சி மரைக்கார், அப்துர் றகுமான், ஓராபிபாஷா, அப்துல் அஸீஸ், சேர் ராசிக் பரீத், டாக்டர்கலீல், எம்.எஸ் காரியப்பர், லத்தீப் சின்னலெவ்பை போன்றோர்கள் கல்வியின் மறுமலர்;ச்சிக்குரிய வழிவகைகளை ஏற்படுத்தி தான் சார்ந்த சமுதாயத்திற்கு உதவிசெய்திருந்தமை நினைவிற்கொள்ளத்தக்கதாகும்.

மட்டுமன்றி தேசிய விடுதலை நோக்கிய பயணத்தில் பல்வேறு இயக்கங்கள் ஊடாக தலைவர்கள் பலர் தங்களது பங்களிப்பினை நல்கியிருந்தனர். மத்தியதர வர்க்கத்தினரிடம் காணப்பட்ட செல்வச் செழிப்பு மற்றும் கல்வியறிவு போன்றவற்றை பயன்படுத்தி அரசியல் பலத்தைக் தம்பக்கம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கினர்.

அந்தவகையில் தொழிலாளர்களின் நலனில் அக்கரைகொண்டு உழைத்தன் காரணமாக 1893ஆம் ஆண்டில் அச்சகத் தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது போராட்ட வடிவத்திற்கு மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவும் கிடைத்தது. இதன் பின்னணியில் இடதுசாரி தலைவர்கள் பாரியளவிலான பங்களிப்பினையும் நல்கியிருந்தனர்.

தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு சமயரீதியான விழிப்புணர்வுகள் மேம்படலாயின. பௌத்தம் இந்து, இஸ்லாம் போன்ற சமயரீதியான மறுமலர்;ச்சிக்கு மத்தியதர வர்க்கத்தினரின் கல்வியும் செல்வமும் பக்கபலமாயின. மேலும், தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தினரால் கலாசார மறுமலர்;ச்சிக்கும் அப்பால் அரசியல் சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களும் தொடங்கப்பட்டன.

தேசிய மது ஒழி;ப்பு இயக்கத்தின் ஊடாக தேசிய தலைவர்களான டி. எஸ் சேனநாயக்க, எப்ஆர். சேனநாயக்க, அநாகரிக தர்மபால, எட்மன் ஹேவாவிதாரண, சேர் டிபி. ஜயதிலக, டபிள்யு ஏ.சில்வா, பியதாஸ சிரசேன, ஆத்தர்.வி. தியெஸ் போன்றோர்கள் மதுபாவனைக்கு எதிரான பிரசங்கிகளாக தமது போராட்ட வடிவத்தை முன்கொண்டனர். பிரித்தானிய ஆட்சியாளர்கள் கதிகலங்கும் அளவுக்கு இவ்வியக்கத் தலைவர்கள் தேச விடுதலைக்கும் வெளிப்படையான ஆதரவைக் கொடுத்திருந்தனர்.

அக்காலகட்டத்தில் தெளிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி சிங்கள முஸ்லீம் கலவரத்தை சாதகமாக திசைதிருப்ப முயன்று இறுதியில் நாட்டுப்பற்றுக்காகவும், விடுதலை நோக்கிய போராட்டத்தின் விளைவாக முறியடிக்கப்பட்ட இனவாதத்தையும் இன்றைய நாளில் நினைவுகூறல் முக்கியமாகும். பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரசியல் பின்னணியில் பல முஸ்லீம் தலைவர்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

“ஆங்கிலக் கல்வியானது சமயத்திற்கு முரணானது” என்கிற வாதம் அக்கால முஸ்லீம்கள் மத்தியில் வலுப்பெற்றபோது கல்வியின் மூலமாக சமுதாயம் உயர்வடைவதன் அவசியத்தை பல முஸ்லீம் தலைவர்களுடன் இணைந்து சட்டசபையிலும் வெளியிலும் கலாநிதி ரீபி. ஜாயா அவர்கள் 1914ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “சிலோன் ரிவீவ்” என்கிற சஞ்சிகை வாயிலாக எழுதிய கடிதம் முஸ்லீம்களின் கல்விக்கு அவர்கொடுத்த ஒத்தடமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. கொழும்பு சாஹிறாவின் அதிபராக இருந்து செய்த சேவைகளை முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி ஏனைய சமூகத்தினருக்கும் பயன்தரும் விடயமாகவே அன்று பார்க்கப்பட்டது.

1921ஆம் ஆண்டின் “மனிங் யாப்பு சீர்திருத்தத்தம், 1931ஆம் ஆண்டில் டொனமூர் சீர்திருத்தத்தங்களின் விளைவாக சர்வஜன வாக்களிப்பு உரிமை வழங்கப்படலாயிற்று. இதன்பயன் இலங்கையின் சுதந்திரத்திற்;கான வழி மிக இலகுவாகத் திறக்கப்பட்டதுடன், தொடர்ந்து ஏற்பட்ட அரச நிருவாகச் சிக்கல்கள்கள், அதிகாரத் தன்மை, அமைச்சு நியமனம், வாக்குரிமை போன்ற விடயங்கள் காரணமாக தேசியத் தலைவர்கள் ஒன்றினைந்து போரட்டங்களை முன்னெடுக்க ஏதுவாகின.

இதன் பின்னணியில் சோல்பரி பிரபுவின் தலைமையில் உருவாக்கப்பட்ட “சோல்பரி யாப்பு – 1947” இல் உருவாக்கப்பட்ட கையுடன், நாட்டின் சுதந்திரத்திற்கான கதவும் திறக்கப்படலாயிற்று. 1947ஆகஸ்டில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து முதலாவது பிரதமராக கௌரவ டி.எஸ். சேனநாயக்க அவர்களும், ஆளுநராக சேர் ஒலிவர் குணதிலகவும் தெரிவாகினர்.

இவ்வாறாக பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைந்து பெற்ற சுதந்திரமானது முழுமையான வகையில் எம்மை வந்தடையவில்லை என்றுதான் கூறவேண்டும். காலத்திற்குக்காலம் அரசுகள் மாறினாலும் ஆளுகின்ற தலைமைகள், அரசியல்வாதிகள் தங்களது நலன்கருதி மக்களை பிரித்தாள முற்பட்டனர் என்பதுதான் யதார்த்தமாகும்.

மூவினமும் ஓரினமாய் பெற்ற சுதந்திரத்தை சரியான முறையில் கொண்டாட முடியாமல் போனமை துரதிஷ்டமே. காட்டிக் கொடுக்கின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்படும். அன்று இவ்வாறான ஒற்றுமையற்ற தன்மைகள் காரணமாக ஒவ்வொரு இனமும் மற்ற இனத்தின் மீது சந்தேகத்துடன் பார்க்க முற்பட்ட காலத்தை மறைக்க இன்றைய தலைவர்கள் இந்த சுதந்திர நாளில் திடசங்கற்பம் பூணவேண்டும்.

இது நடைமுறைச்சாத்தியமான விடயம் என்பதை முதலில் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். தமிழில் தேசியக் கீதம் பாடுவதன் ஊடாக எதிர்காலத்தில் நமக்குரிய நியாயமான பங்கு நல்லாட்சியில் கிடைக்கும் அதற்கான முயற்சியாக புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்துவதற்கு அரசு முயன்று வருகின்றது. அதன் அடிப்படையில் நாம் இன்றைய சுதந்திர தினத்தை இதயபூர்வமாக கொண்டாடுவோம்.

நன்றி – சுடர் ஒளி – 04.02.2016

(அட்டாளைச்சேனை மன்சூர்)