பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இல்லை – ரணில்

இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளதால் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை முன்வைக்க வேண்டுமா என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எனினும் இது தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூறினார்.
அதேபோல் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை, பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“2020ஆம் ஆண்டுக்காக வரவு செலவு திட்டமொன்று அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுமா? அவ்வாறு இல்லையென்றால் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றாவது முன்வைக்கப்படுமா? அடுத்த ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு இடைக்கால கணக்கறிக்கை மூலமாக நிதி ஒதுக்கும் நிலையில் அரசாங்கதின் வரவு அதிகரிக்காது செலவு மட்டுமே அதிகரிக்கும்.
அதனை தொடர்ந்து மீண்டும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்லும் நிலையில் அதன் பின்னர் வரும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும் நெருக்கடிக்கு தள்ளப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாநயக்க எழுப்பிய பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஹக்கீமுடன் கோத்தா தொலைபேசியில் பேச்சு – வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும், இந்தப் பேச்சு தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது. ஐதேக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
கடைசியாக நடந்த மூன்று அதிகர் தேர்தல்களிலும் இந்தக் கட்சி ஐதேக தலைமையிலான கூட்டணி நிறுத்திய வேட்பாளரையே ஆதரித்து வந்தது.

கோத்தாபயவை தோற்கடிக்கும் சூத்திரம் தயார், வாக்குறுதிகளை மறந்துவிட்டார் மைத்திரி

ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான யாப்பை உரு­வாக்கும் பணிகள்    முழு­மை­ய­டைந்­துள்­ளன. ஜன­நா­யக தேசியக் கூட்­டணி கைச்­சாத்­தி­டப்­படும் போது ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டுவார்.
எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தனது குடும்ப உறுப்­பி­னரை கள­மி­றக்­கி­யதை போன்று குடும்ப உறுப்­பி­னரை கள­மி­றக்க வேண்­டிய தேவை எமக்கு  கிடை­யாது என்று  சுகா­தா­ரத்­துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
அல­ரி­மா­ளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜன­நா­யக தேசிய முன்­னணி
ஐக்­கிய தேசிய முன்­னணி தனது பங்­காளி கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து உரு­வாக்க தீர்­மா­னித்­தி­ருந்த ஜன­நா­யக தேசிய முன்­னணி கடந்த மாதம் 5ஆம் திகதி நிறைவு பெறும் நிலையில் இருந்­தது. உரு­வாக்­கப்­பட்ட கட்சி யாப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்ளவேண்­டிய தேவை காணப்­பட்­டதால்  கூட்­டணி விவ­காரம் பிற்­போ­டப்­பட்­டது.
கட்­சியின் யாப்பு உரு­வாக்கம் தொடர்பில் கடந்த இரண்டு வார கால­மாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில்  பேச்­சு­வார்த்தை இடம்பெற்­றது. பங்­காளி கட்­சி­களின் பரிந்­து­ரை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் கட்­சியின் தலை­மைத்­துவ சபை­யினால் பெயர் குறிப்­பி­டப்­பட்டு  கூட்­ட­ணியின் ஊடாக தெரிவு செய்­யப்­ப­டுவார். பொதுச்­செ­ய­லாளர் காரி­யா­லய  செயற்­பா­டுகள் சுயா­தீ­ன­மாக செயற்­படும். உள்­ளிட்ட விட­யங்கள் தற்­போது  நிறைவுப் பெற்­றுள்­ளன.  அடுத்த மாதத்தின் முதல் வாரத்­திற்குள் கூட்­டணி நிச்­சயம் ஸ்தாபிக்­கப்­படும்.
கொள்கை திட்டம்
ஜன­நா­யக தேசிய  முன்­ன­ணியின் கொள்கை திட்­டங்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டதை தொடர்ந்தே ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டுவார். புதிய அர­சியல் பய­ணத்தை நோக்­கிய  கொள்கை திட்டம் உரு­வாக்­கப்­படவேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.
 கொள்­கைத்­திட்டம் உரு­வாக்­கலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க,  மனோ கனேசன், ரிஷாத் பதி­யுதீன்,  அகில விராஜ் காரி­ய­வசம், ரவி கரு­ணா­நா­யக்க, கபீர் ஹசிம், மற்றும் திகாம்­பரம் ஆகியோர்  செயற்­ப­டு­வார்கள்.  தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்  அர­சி­யல்­வா­தி­களின் பரிந்­து­ரை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும்.
ஐ.தே.க. வின் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ரான ஒழுக்­காற்று நட­வ­டிக்கை
கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு அப்பால்  சென்று  செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். எவரும் விதி­வி­லக்கு கிடை­யாது.  வீதி­களில்  கோஷம் எழுப்பி  ஜனா­தி­பதி வேட்­பா­ளரை  தெரிவு செய்ய முடி­யாது. கடந்த நாட்­களில் ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்கள் முன்­னெ­டுத்த பேரணி கட்­சி­யினை அவ­ம­திப்­ப­தா­கவே  காணப்­பட்­டது.
கட்­சியின் தலை­மைத்­து­வத்­தி­னையும், கொள்­கை­க­ளையும் இழி­வுப்­ப­டுத்தி ஒரு­போதும் ஜனா­தி­பதி உள்­ளிட்ட முக்­கிய பத­வி­களை ஒரு­போதும் பெற்று விட முடி­யாது. கட்­சி­யினை பலப்­ப­டுத்­தியே சிறந்த அர­சி­யலை முன்­னெ­டுத்து செல்லவேண்டும்.
ஊடக  சுதந்­திரம்
நல்­லாட்சி அர­சாங்கம் ஊட­கங்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்த சுதந்­திரம் தற்­போது மறக்­கப்­பட்­டுள்­ளது. இன்று  சில ஊட­கங்கள்  ஊடக தர்­மத்­திற்கு அப்பாற் சென்று செயற்­ப­டு­வது வருத்­தத்­திற்­கு­ரி­யது.  இன்று  ஜனா­தி­பதி, பிர­தமர் உட்­பட அரச அதி­கா­ரிகள் ஊட­கங்­க­ளினால்  சரியோ, பிழையோ பகி­ரங்­க­மாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றார்கள். ஆனால் கடந்த நான்கு வருட கால­மாக எந்த ஊட­க­வி­ய­லா­ளரும் படு­கொலை செய்­யப்­ப­டவும், இல்லை தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கவும் இல்லை.
கடந்த அர­சாங்­கத்தில் ஊடக சுதந்­திரம் எவ்­வாறு  காணப்­பட்­டது என்­ப­தற்கு  லசந்த  விக்­ர­ம­துங்க உட்­பட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொலை  ஒரு எடுத்­துக்­காட்­டாகும்.  ஜன­நா­ய­கத்தை மீறி சர்­வா­தி­கா­ர­மாக செயற்­பட்­ட­வர்கள் இன்று  ஜன­நா­யகம் பற்றி கருத்­து­ரைப்­பது நகைப்­பிற்­கு­ரி­யது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் அப்­போது மதிக்­கப்­ப­ட­வில்லை.  இதன் தொடர்ச்­சியே  பொது­ஜன பெர­மு­னவின் இளைஞர் மாநாட்டில் இடம் பெற்­றது.
 படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க மற்றும் ரக்பி வீரர் தாஜீதின் ஆகி­யோ­ரது உற­வி­னர்­களை காணும் போது வெட்கி தலை­கு­னிய வேண்­டிய நிலை தற்­போது காணப்­ப­டு­கின்­றது.  சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ராக செயற்­பட்ட  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2015ஆம் ஆண்டு தேர்தல் பிரச்­சார மேடை­களில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் அனைத்­தையும் முழு­மை­யாக மறந்து விட்டார்.
தமிழ் மக்கள்
வடக்கு  உள்­ளிட்ட நாட்டில் வாழும்  தமிழ் மக்கள் இன்று உரி­மைக்­காக வீதியில் இறங்கி   சிங்­கள மக்­க­ளுக்கு  நிக­ராக அர­சாங்­கத்­தினை விமர்­சிக்­கின்­றார்கள். இந்த சுதந்­தி­ரமே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிர­தான வெற்­றி­யாகும். கடந்த அர­சாங்­கத்தில் தமிழ் மக்களின்  உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. எவரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கப்படவில்லை.  இனவாத அரசியலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள்  பாதுகாக்கப்படும்.
 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை தோல்வியடைய செய்யும் சூத்திரம் பலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தகுந்த பதிலடி வழங்கப்படும். தமிழ்  மக்களின் முழுமையான ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி நிரந்தர பலமான ஒரு தலைமைத்துவத்தினை முதலில் உருவாக்கி அதனூடாக ஜனநாய மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சம் தண்டனை  பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

மாலைதீவு போய் வந்தபிறகு, வேட்பாளரை அறிவிப்பேன் – இராஜதந்திரிகளிடம் ரணில் உறுதி

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இராப்போசன விருந்துடன் சந்தித்துப் பேசியுள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, நோர்வே உள்ளிட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளின் தூதுவர்கள் பலரும், இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின், அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போதே, மாலைதீவுக்கு வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளவுள்ள பயணத்தின் பின்னர், புதிய கூட்டணி மற்றும் அதன் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இராஜதந்திரிகளிடம் எடுத்துக் கூறினார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்து கொண்டிருந்தார்.
அதேவேளை, ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு வரையும் பணிகள் நேற்று நிறைவடைந்துள்ளன. இதன்படி கூட்டணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

சஜித்துக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள், குழப்பம் ஏற்படுத்துவோரை விலக்குங்கள் – பொன்சேகா

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தையும், கட்சியின் கொள்கையையும் மீறியே செயற்பட்டு வருகின்றார்.கட்சியின் கொள்கையை மீறி செயற்படும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.
அதேபோல் இன்று சஜித் பிரேமாதாசவுடன் ஒரு அணி உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களை தவிர பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரதமருடன் இணைந்து கட்சிக்காக செயற்பட  தயாராக உள்ளனர். ஆகவே கட்சிக்குள் இருந்து குழப்பங்களை ஏற்படுத்தும்  நபர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதே நல்லதென நான் நினைக்கிறேன். அவர்கள் வெளியேறினால் எம்மால் கட்சியை பலப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் உள்ள இழுத்தடிப்புகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

(ஆர்.யசி)

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் எஸ்.பி.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், எஸ்.பி.திஸாநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்ரியை சந்தித்தார் கோட்டா – முக்கியமான தீர்மானங்கள் எட்டப்பட்டன !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்தது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் மனம்விட்டு பேசி பல முக்கியமான தீர்மானங்களை எட்டியுள்ளதாக தகவல். அந்த தீர்மானங்களை இப்போதைக்கு பகிரங்கப்படுத்தாதிருக்கவும் இருவரும் உடன்பட்டுள்ளனர் .

குறிப்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் அரசியல் கூட்டணி அமைக்க நடந்துவரும் பேச்சுக் குழுவின் உறுப்பினர்களை மாற்றியமைக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி மஹிந்த தரப்பில் பேச்சுக் குழுவுக்கு பசில் ராஜபக்ச தலைமை வகிப்பாரென தெரிகிறது. சுதந்திரக் கட்சியில் தமக்கு நெருக்கமான சிலரை மைத்ரி பெயரிடவுள்ளதாக அறியமுடிந்தது.

இந்த சந்திப்பின்பின்னரே- கோட்டாபய வழங்கிய விருந்துபசாரத்தில் சுதந்திரக் கட்சி எம் பிக்கள் கலந்து கொள்ள மைத்ரி அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மைத்திரிக்கு உரிய அந்தஸ்தை வழங்க கோட்டா இதன்போது உத்தரவாதம் அளித்தாரெனவும் மேலும் அறியமுடிந்தது.

நன்றி -தமிழன்

இணை அமைப்பாளர்கள் நியமித்து சஜித் ஆதரவு எம் பிக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் – ரணில் அதிரடி !

சஜித் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வகிக்கும் அமைப்பாளர்கள் பதவிகளுக்கு இணையாக புதிய இணை அமைப்பாளர்களை நியமித்து அதிரடி காட்டியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.

இதன்படி மாத்தறை , பண்டாரகம உட்பட்ட பல தொகுதிகளுக்கு இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளராக யாரும் கட்சிக்குள் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த அமைப்பாளர்கள் பலர் முயன்று வருவதன் காரணமாகவே ரணில் அதிரடியாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ரணிலின் இந்த முடிவால் கலக்கமடைந்துள்ள எம் பிக்கள் , இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை ரணிலிடம் எப்படிப் பெறுவது என்பது குறித்து யோசனை செய்து வருவதாக தெரிகிறது.

தலைவருக்கு எதிராக யாராவது, செயற்பட்டால் கடும் நடவடிக்கை – ஐதேக எச்சரிக்கை

கட்சி தலைவரின் செயற்பாட்டிற்கு எதிராக யாராவது செயற்படுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்குத் தேவையான தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு வெற்றிபெறுவதற்கான தீர்மானம் கட்சியினால் முன்னெடுக்கப்படும். இதுவரையில் எந்தவொருவரும் பெரஹரவில் செல்லவில்லை.
இந்நிலையில், பலர் குறித்தும் பிரச்சினைகள் உள்ளன. பொருத்தமான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

மங்களவின் வீட்டில், சஜித் – சம்பந்தன் சந்திப்பு, ஜனாதிபதி தேர்தல் பற்றி நீண்டநேரம் கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அந்த சந்திப்பில் பங்கேற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை, எளிதில் வெற்றிக்கொள்ள முடியும் – ரணில்

ஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் 2019 ஆம் ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான நிகழ்வு இள்று  திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ,
 ஜனாதிபதித் தேர்தலை ஐக்கிய தேசிய கட்சியால் வெற்றி கொள்ள முடியும். மக்கள் மத்தியில் சென்று எதிர்கால திட்டங்கள் மற்றும் இது வரையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்துகின்றோம்.
அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொண்டு ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் என தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு – அமைச்சர் ரிஷாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு (14) அமைச்சர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கௌரவ அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர். அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது, வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன அது மாத்திரமன்றி மக்களின் நலனுக்காக சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, மற்றும் இன்னோரன்ன துறைகளில் இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்கி அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கல்வி தேவைக்காக கட்டப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் பல விரைவில் திறப்பற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கின் சுகாதார துறையை மேம்படுத்துவதற்காக அமைச்சர் ராஜித, இந்த பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்கிறார். இதுவரை இருந்த சுகாதார அமைச்சர்களில் வடக்குக்கு ஆக கூடிய தடவை விஜயம் செய்த அமைச்சராக ராஜித விளங்குகிறார். வடக்கின் அபிவிருத்தியில் கரிசனை காட்டும் பிரதமருக்கும் அமைச்சர் ராஜிதவுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்

மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள்

சுஐப் எம். காசிம்

ஜனாதிபதி வேட்பாளர்களை அறிந்து கொள்வதில் மக்களுக்கிருந்த ஆர்வம் படிப்படியாகத் தணிந்து வரும் நேரமிது.ஒரு தரப்பாருக்கு சஞ்சலத்தையும் மற்றுமொரு தரப்பினருக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்தி, எதிர்பார்ப்புகளின் உச்சத்திலிருந்த ஒரு கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களின் ஆர்வங்கள் தணியத்தொடங்கின. கடைசியாக நடந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றதும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்றதும் ஶ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவின் இமேஜை ஏனைய கட்சிகளை விட ஒரு படி உயர்த்தியுள்ளதுதான்.

எனினும் தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை, கட்சியின் வெற்றிக்கு எவ்வாறு இட்டுச் செல்லும். 2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளே இச்சிந்தனைகளைக் கிளறுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை,செல்வாக்கு, அவருக்கிருந்த புகழ் அனைத்தையும் ஐக்கிய தேசிய முன்னணி எப்படித் தோற்கடித்தது?.

தேர்தல் கூட்டணியை அமைப்பதில் ராஜபக்ஷ தரப்பு விட்ட தவறிலிருந்தே அத்தரப்பின் தோல்வியும் எழுதப்பட்டது. பலமான கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தியிருந்தால், 57 இலட்சம் வாக்குகளுடன் பங்காளிக் கட்சிகளின் பங்களிப்பும் வெற்றிக்குப் பங்களித்திருக்கும்.

இதே தவறுகளே இம்முறையும் இடம் பெறுமோ தெரியாது. தேசிய காங்கிரஸ், ஈபிடிபி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிர இன்னும் பத்துக் கட்சிகள் இந்த அணிக்கு எத்தனை வாக்குகளுக்கு பங்களிக்கும். உண்மையில் இதர கட்சிகளின் எதிர்பார்ப்பு, இணக்கப்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டிருந்தால் கோட்டாபாய வேட்பாளராகியிருக்க முடியாது. எனவே இம் முறையும் தனிநபர் ஆளுமையே களமிறங்குகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் இந்தக் களத்தை எதிர்த்துப் போரிடப்போவது யார்? யார் என்பது இதுவரை தெரியாவிட்டாலும் களமாடப் போவது ஐக்கிய தேசியக் கட்சி என்பது மட்டும் உண்மை. இக்கட்சி தனிநபர் ஆளுமையை விடவும் கூட்டுப்பலத்தையே அதிகம் நம்பியுள்ளது.இக் கூட்டுப்பலத்தை உருவாக்கும் முயற்சிகள் இது வரை வெற்றியளிக்கவில்லை.

பங்காளிக் கட்சிகள் காட்டும் தயக்கம்,ஶ்ரீகொத்தாவின் உட்பூசல்கள், எதிரணி வேட்பாளருக்குப் பின்னாலுள்ள சக்திகள் இவையெல்லாம் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பெரும் தலையிடியாகியுள்ளன.சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகளை வளைத்துப் பிடித்தாலும் அச்சமூக மக்களை வழி நடத்தும் ஆளுமை தமிழ்,முஸ்லிம் தலைமைகளுக்கு உள்ளதா? அல்லது 2015 இல் மந்தைகள் கட்டவிழ்ந்து போனதுபோல், இம் முறையும் முஸ்லிம் சமூகம் கட்டவிழ்ந்து செல்லுமா? இவ்வாறு கட்டவிழாமல் காப்பாற்றப்போவது எது.?

உண்மையில் இத்தலைமைகளின் முடிவுகளே சமூகம் கட்டவிழ்ந்து செல்வதைக் காப்பாற்றும். 2015 இல் 61 இலட்சம் மக்கள் தவறிழைத்தமைக்கு ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்திய வேட்பாளரே காரணம். இதுபோன்ற தவறுக்கும் தெரிவுக்கும் மக்கள் ஆளாகக் கூடாதென்பதே ஶ்ரீகொத்தாவின் உயர்மட்டத் தலைவர்களின் கவலை. இதனால்தான் இதுவரைக்கும் இழுபறி.

2015 ஆம் ஆண்டு விட்ட தவறினால் நாட்டின் நிர்வாகம் முற்றாகக் குலைந்து சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறைகள் முரண்பட்டமை ஜனநாயகத்துக்கு விழுந்த கீறல்களாகவே பார்க்கப்படுகிறது. ராஜபக்ஷக்களுக்கு நிகராக ஒரு தலைவரைப் பெறமுடியாவிட்டாலும் ஒரு கூட்டுப்பலத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் ரணில் காலம் கடத்துகிறார். காலம் பதிலளிக்கும் வரை பொறுமை காப்பதும் ரணிலுக்கு அத்துப்படியான ராஜதந்திரங்களில் ஒன்று.

தனக்கு வாய்ப்பை உருவாக்குவது, வராவிட்டால் யாரையாவது மாட்டிவிடுவது. இது வரைக்கும் இந்த வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. இம்முறை எப்படியாவது வாய்ப்புக்காக வாதாடுவதென்று விடாப்பிடியாய் உள்ளதால் ஆரூடமாகச் சொல்லப்படும் வேட்பாளர்கள் எவரையும் ரணில் பொருட்படுத்தவும் இல்லை.நாளை மறுதினம் தீர்க்கமான தீர்மானங்கள் வெளிவரவுள்ளன.

ஒருவாறு ரணிலன்றி வேறு வேட்பாளரின் பெயர் வெளியாக வேண்டுமென்பதே மொட்டு அணியினரின் விருப்பம்.வெளிநாடுகளின் தலையீடு,நெருக்குதல்கள் இல்லாதிருந்தால் 2015 இலும் வென்றிருப்போம் என்கிறார் மஹிந்த. வெளிநாடுகளுக்குத் தேவையற்றவர் என்ற விம்பம் சஜித் பிரேமதாசவுக்கு கிடைப்பதற்கு மஹிந்தவின் இந்த வாக்குமூலமே வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு சஜித்தால் களமாட முடியுமா? என்பதே ஸ்ரீகொத்தாவுக்குள்ள கவலை.முன்னாள் ஜனாதிபதிகளின் மகனும் சகோதரனும் களமிறங்கச் சாத்தியமான இந்தத் தேர்தல் நாட்டின் அதியுச்ச அதிகாரத்தை இருபது வருடங்களுக்கு கையகப்படுத்தும் போட்டியாகவே பரிணமிக்கப் போகிறது.

பிரேமதாசாவை நேசிப்பவர்கள் தன்னை ஆதரிக்க வேண்டுமென்று சிங்களத் தலைவர்களைக் கொன்று குவித்த புலிகளைத் தோற்கடித்த பெருமையை ஞாபகமூட்டவே மொட்டு முனையும். குடும்ப ஆதிக்கம், கொலைகாரர்களின் அதிகாரத் தொல்லையை இல்லொதொழிக்க தனக்கு வாக்களிக்கக் கோருவார் சஜித். இரு தரப்புக் கோரிக்கைகளும் நியாயமானதுதான்.வாக்களிக்கத் தூண்டுமா? விருப்பத்தை எற்படுத்துமா? எதுவாயிருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தேராண்மைவாதத்தை அங்கீகரித்து 2013 இல் காலியில் அலுவலகம் திறந்து அங்கீகாரம் வழங்கிய மொட்டு அணி வேட்பாளரின் மனநிலையை முஸ்லிம்கள் இன்னும் மறக்கவில்லை.

சிவப்புத் தொப்பியணிந்த ஒரு சில மௌலவியர் மொட்டை மோப்பம் பிடிப்பதற்காக, முழு முஸ்லிம்களும் சுகந்தம் நுகர மொட்டை நாடுவார்களா? இவ்வாறு நாடுவது முஸ்லிம்களை நடுத் தெருவில் நிர்க்கதியாக்குமா? சஜித்தைப் பொறுத்தவரை சிறுபான்மைச் சமூகங்களின் நாடி, நரம்புகளைப் பிடித்தறிந்து பணியாற்றும் பக்குவமும் பற்றாக்குறையாகவே உள்ளது.இவைகளே இன்று கள எதிரொலிகள்.

மஹிந்தவுடன் இணக்கப்பாடு என்பது பொய், சஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் நடுநிலைமை – மைத்­தி­ரி­

முன்னாள் ஜனா­தி­ப­தியும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணக்­கப்­பாடு எதுவும் காணப்­ப­ட­வில்லை.  அவ­ருடன் இணக்­கப்­பாடு காணப்­பட்­ட­தாக  வெளி­யான செய்தி  தவ­றா­ன­தாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.
ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்   அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது.   அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து  ஜனா­தி­ப­தியை  சந்­தித்த   ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைச்  சேர்ந்த  சிறு­பான்­மை­யின   அமைச்சர் ஒருவர்   ஜனா­தி­ப­தி­யிடம்  இந்த விடயம் தொடர்பில்  கேள்வி எழுப்­பி­ய­போதே   அவர்  இவ்­வாறு   தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன்  நீங்கள் நடத்­திய சந்­திப்­பின்­போது   பொது­ஜன பெர­மு­னவில்  ஜனா­தி­பதி  வேட்­பா­ள­ருக்கு  ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கான இணக்கம்  காணப்­பட்­ட­தா­கவும்  அதற்கு பிரதி உப­கா­ர­மாக உங்­க­ளுக்கு   உரிய பத­வியை   தரு­வ­தற்கு  தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்   ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.   இவ்­வா­றான இணக்கம் காணப்­பட்­டுள்­ளதா?  பொது­ஜன பெர­முன வேட்­பா­ளரை நீங்கள்  ஆத­ரிக்­கப்­போ­கின்­றீர்­களா என்று  அந்த அமைச்சர்   ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.
இதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி அவ்­வா­றான எந்த இணக்­கப்­பாடும்  ஏற்­ப­ட­வில்லை.  அவ்­வாறு  வெளி­யா­கிய செய்­திகள் தவ­றா­னவை..  அதனை நம்­ப­வேண்டாம் என்று  கோரி­யுள்ளார்.
இதன்­போது பொது­ஜன பெர­மு­ன­விற்கு நீங்கள் ஆத­ரவு  வழங்­காது  எமது  கூட்­ட­ணிக்கு ஆத­ரவை  வழங்­க­வேண்டும் என்றும் அந்த அமைச்சர்  கோரி­ய­போது  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்   ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால்   இந்த விடயத்தில்  நடுநிலைமை வகிப்பது குறித்து  பரிசீலிக்க முடியும் என்று    ஜனாதிபதி   சுட்டிக்காட்டியதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

சஜித்தைக் களமிறக்க ரணில் கொள்கையளவில் இணக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டது என்று அறியமுடிகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாட்டின் பிரதான கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன தமது வேட்பாளர்களை இன்னமும் பெயரிடாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்னாள் பாதுகாப்புச் செயலரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 18ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மௌனமாக இருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்குள் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ என மூவரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளருக்காகப் பரிந்துரைக்கப்பட்டன. கட்சியால் பெயரிடப்படாத நிலையில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராகத் தானே களமிறங்குவேன் என்று தெரிவித்ததுடன், அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். இந்த முரண்பாடுகளால் ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டணியை அறிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சியும் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே களமிறக்கப்பட வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர். நேற்றுமுன்தினம் பதுளையில் சஜித் பிரேமதாஸவுக்கு வரவேற்பளிக்கும் மாநாடு ஒன்றை நடத்தியிருந்ததுடன், பெரும் எண்ணிக்கையான மக்களையும் மாநாட்டுக்குத் திரட்டியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்துக் களமிறங்கும் வல்லமை ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் பிரேமதாஸ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கே உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சரத் பொன்சேகா முன்னர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ச தரப்பு அதைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தக் கூடும் என்பதால் சஜித் பிரேமதாஸவைக் களமிறக்குவதே சிறந்த வழி என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் சஜித் பிரேமதாஸவுக்கு மக்கள் ஆதரவு இருப்பது பதுளையில் நடந்த கூட்டத்தின் மூலம் தெரிகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிங்க இந்த விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு அவர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின்படி ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மானிக்க முடியும். அதனால் மத்திய செயற்குழுவில் சஜித் பிரேமதாஸவின் பெயரைப் பிரேரித்து வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளரைத் தெரிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்தனர் என்று அறியமுடிந்தது.