இரண்டாவது ஒருநாள் போட்டியில் போராடி தோற்றது இலங்கை

  • October 3, 2019
  • 221
  • Aroos Samsudeen
இரண்டாவது ஒருநாள் போட்டியில் போராடி தோற்றது இலங்கை

கராச்சியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில், 297 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், இறுதி நேரத்தில் விட்ட தவறுகளால் தோல்வியை தழுவ நேரிட்டது.

இன்றைய தினம் களமிறங்கிய இலங்கை அணி, மூன்று மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. சதீர சமரவிக்ரம, ஓஷத பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு பதிலாக அஞ்செலோ பெரேரா, லக்ஷான் சந்தகன் மற்றும் அறிமுக வீரர் மினோத் பானுக ஆகியோர் இணைக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் அணியை பொருத்தவரை உபாதைக்குள்ளாகிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக் மற்றும் இமாட் வசீம் ஆகியோருக்கு பதிலாக ஆபிட் அலி மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை அணி

தனுஷ்க குணதிலக்க, மினோத் பானுக, அவிஷ்க பெர்னாண்டோ, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு திரிமான்ன (தலைவர்), ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், லஹிரு குமார, நுவன் பிரதீப்

பாகிஸ்தான் அணி

ஆபிட் அலி, பக்கார் சமான், பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், இப்திகார் அஹ்மட், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), மொஹமட் நவாஸ், வஹாப் ரியாஸ், சதாப் கான், மொஹட் அமீர், உஸ்மான் ஷின்வாரி

இவ்வாறான மாற்றங்களுக்கு மத்தியில் இரண்டு அணிகளும் களமிறங்க,  முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனுஷ்க குணதிலக்கவின் சதத்தின் உதவியுடன் 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க, அபாரமாக சதம் கடந்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

ஆரம்பம் முதல் ஓட்டங்களை குவித்த தனுஷ்க குணதிலக்க ஒரு சிக்ஸர் மற்றும் 16 பௌண்டரிகள் அடங்கலாக 133 ஓட்டங்களை குவித்து தன்னுடைய இரண்டாவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். பின்னர், அறிமுக வீரராக களமிறங்கி அணிக்கு தேவையான இன்னிங்ஸினை ஆடி மினோத் பானுக்க 36 ஓட்டங்களை பெற, அடுத்தபடியாக அணித் தலைவர் லஹிரு திரிமான்ன 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர்களின் ஆட்டமிழப்புக்கு பின்னர், இறுதியாக களமிறங்கிய தசுன் ஷானக வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இவர், 24 பந்துகளுக்கு அதிரடியாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 297  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் அமீர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து சற்று சவாலான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆபிட் அலியின் வேகமான ஓட்டக்குவிப்பு, பக்ஹர் ஷமான் மற்றும் ஹரிஸ் சொஹைலின் அரைச் சதங்களின் உதவியுடன் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஆபிட் அலி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக அரைச் சதத்தை கடக்க, மறுமுனையில் பக்ஹர் சமான் நிதானமாக ஓட்டங்களை பெற்றார்.  இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களை பகிர, 74 ஓட்டங்களை பெற்று, ஆபிட் அலி ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பக்ஹர் சமான் அரைச் சதம் கடக்க, பாபர் அசாம் ஓட்டக்குவிப்பை ஆரம்பித்தார். எனினும், நுவன் பிரதீப் தன்னுடைய அடுத்தடுத்த இரண்டு ஓவர்களில் பாபர் அசாம் (31) மற்றும் பக்ஹர் சமான் (76) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

தொடர்ச்சியாக இலங்கை அணி அடுத்தடுத்த ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை கொடுத்த போதும், 46 ஆவது ஓவரில் லஹிரு குமாரவால் விட்டுக்கொடுக்கப்பட்ட 18 ஓட்டங்கள் மற்றும் ஹரிஸ் சொஹைலின் அபார அரைச் சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் அணி, 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

ஹரிஸ் சொஹைல் மத்தியவரிசையில் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சர்பராஸ் அஹமட் 23 ஓட்டங்கள் மற்றும் இப்திகார் அஹமட் 28 ஓட்டங்களை பெற்று, அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில், நுவன் பிரதீப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதேநேரம், இந்த வெற்றியானது பாகிஸ்தான் அணி கடந்த ஐந்து வருடங்களில் விளையாடிய 25 போட்டிகளில், 275 ஓட்டங்களுக்கு அதிகமான வெற்றி இலக்கினை அடைந்த இரண்டாவது சந்தர்ப்பமாக அமைந்தது. அதுமாத்திரமின்றி கடந்த மூன்று வருடங்களில் பாகிஸ்தான் அணி அடைந்த அதிகூடிய வெற்றி இலக்காகவும் இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியிருந்தது.

இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I  தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி லாஹூரில் ஆரம்பமாகவுள்ளது.

 

Tags :
comments