மாகாண விளையாட்டு பணிப்பாளரினால் சாய்ந்தமருது வீரருக்கு அநீதி

  • October 7, 2019
  • 298
  • Aroos Samsudeen
மாகாண விளையாட்டு பணிப்பாளரினால் சாய்ந்தமருது வீரருக்கு அநீதி

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் அநீதியான நடவடிக்கையினால் சாய்ந்தமருதைச் சேர்ந்த MUA.சம்லி தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை இழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் அம்பாரை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த MUA.சம்லி இரண்டு நிகழ்ச்சிகளிலும் மூன்றாமிடங்களைப் பெற்று வெண்கலப்பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

இதன் மூலம் பதுளையில் இம்மாதம் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ள 45வது தேசிய விளையாட்டு விழாவிற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றும் 100M மற்றும் 200M போட்டிக்கான வீரா்களின் பெயர்ப்பட்டியலில் MUA.சம்லியின் நீக்கப்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் பல சிரமங்களுக்கு மத்தியில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற எனக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும், அதன் பணிப்பாளரும் அநீதி இழைத்திருப்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கட்டாயம் கிடைக்க வேண்டும். கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இது விடயத்தில் தலையிட்டு என்னைப் போன்று பாதிக்கப்பட்ட வீரா்களுக்கு நியாயம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அநீதி இழைக்கப்பட்ட MUA.சம்லி நம்மிடம் கருத்துத் தெரிவித்தார்.

MUA.சம்லி 2018ம் ஆண்டு மாத்தறை கொடவில மைதானத்தில் இடம்பெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 4X100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த வீரா் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

Tags :
comments