தேசிய விளையாட்டு விழா பதுளையில் நாளை ஆரம்பம்

  • October 23, 2019
  • 316
  • Aroos Samsudeen
தேசிய விளையாட்டு விழா பதுளையில் நாளை ஆரம்பம்

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 45ஆவது தேசிய விளையாட்டு பெருவிழா நாளை 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை பதுளை வின்சண்ட் டயஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

45ஆவது தேசிய விளையாட்டு பெருவிழா கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்கனவே உத்தியோகபுர்வமாக அறிவித்திருந்த போதிலும் அம்பாரை மைதானம் முழுமையாக நிறைவுபெறாத நிலையில் பதுளை வின்சண்ட் டயஸ் மைதானத்திற்கு விளையாட்டு பெருவிழா மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை 2020ம் ஆண்டுக்கான 46வது தேசிய விளையாட்டு விழா கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு பெரு விழாவின் 33 போட்டிகளுக்கான இறுதி கட்டப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகியதுடன், இதில் 27 போட்டி நிகழ்ச்சிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஜூடோ, கால்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஆணழகர் மற்றும் மெய்வல்லுனர் உள்ளிட்ட 7 போட்டிகள் மாத்திரம் பதுளையை அண்மித்த பகுதிகளில் குறித்த நான்கு நாட்களில் நடைபெறவுள்ளன.

இதேநேரம், 24ஆம் திகதி நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிறைவு நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஒன்பது மாகாண ஆளுநர்கள் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

அதுமாத்திரமின்றி, இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 2,706 வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன், போட்டி நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்வதற்கு சுமார் 750 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களைப் போல் அல்லாமல் வீரர்களுக்கான பரிசுகளை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், குழுநிலைப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அணியில் இடம்பிடித்த வீரருக்கு 6,000 ரூபாவும், 2ஆவது இடத்துக்கு 4,000 ஆயிரம் ரூபாவும், 3ஆவது இடத்துக்கு 2,000 ரூபாவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இம்முறை தேசிய விளையாட்டு பெரு விழாவில் தேசிய சாதனை முறியடிக்கப்பட்டால் ஒரு இலட்சம் ரூபாவும், போட்டிச் சாதனை முறியடிக்கப்பட்டால் 50 ஆயிரம் ரூபா பணமும் பரிசாக வழங்கப்படும்.

அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் முயற்சியினால் இம்முறை தேசிய விளையாட்டு பெரு விழாவில் அதிசிறந்த வீரர்களாக தெரிவாகின்றவர்களுக்கு அதிசொகுசு கார்கள் இரண்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த கார்களை வழங்க முன்வந்துள்ளது.

இது இவ்வாறிருக்க இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்ற அனைத்து வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான விசேடப் பரிசுப் பொதியொன்று வழங்கப்படவுள்ளது. அதில் டீ. சேர்ட், விளையாட்டு காற்சட்டை, உள்ளிட்ட பொருட்கள் இருக்கும்” என அவர் தெரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற குழுநிலைப் போட்டிகளின் முடிவில் 72 தங்கப் பதக்கங்களுடன் மேல் மாகாணம் முதலிடத்திலும், 22 தங்கங்களுடன் மத்திய மாகாணம் இரண்டாவது இடத்திலும், 20 தங்கங்களுடன் வடமேல் மாகாணம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதில் 4 தங்கப் பதக்கங்கள் 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்திலும், ஒரேயொரு தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்ற வடக்க மாகாணம் கடைசி இடத்திலும் உள்ளன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கான கடற்கரை கபடி, பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டம், ஆண்களுக்கான கராத்தே தோ மற்றும் ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டது.

வட மாகாணத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் மாத்திரம் ஒரேயொரூ தங்கப் பதக்கத்தினை இதுவரை வென்றுள்ளது.

Tags :
comments