அட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் – எம்.ஏ.அன்ஸில்

  • November 8, 2019
  • 579
  • Aroos Samsudeen
அட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம்  ஜனநாயக மீறலாகும் – எம்.ஏ.அன்ஸில்

நேற்று(06.11.2019) அக்கரைப்பற்றில் நடந்த அ.இ.ம.கா வின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், வழமைக்கு மாற்றமாக, எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் சுதந்திரமாக உரை நிகழ்த்த சந்தர்ப்பம் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

அவ்வுரையின்போது, நல்லாட்சியின் மீதிருக்கின்ற பரந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும், முன்னாள் அமைச்சர் அதாவுழ்ழாவின் தரப்பிற்கெதிராக அக்கரைப்பற்றில் சுதந்திரமாக பிரச்சாரம் செய்யக் கிடைத்ததே, நல்லாட்சியின் அடைவுதான் என சிலாகித்துப் பேசினேன்.

ஆனால் இன்று, அட்டாளைச்சேனையில் அதாவுழ்ழாவின் கூட்டத்திற்கெதிராக நடந்த தாக்குதல் அந்தக் கூற்றினை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்து விட்டது.

நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த தாக்குதல்கள் என்பது, சட்டத்தை காடையர் கூட்டம் கையில் எடுத்ததனாலும், அவ்வாறானவர்களுக்கெதிராக சட்டம் சமமாக பிரயோகிக்கப்படாமல் விட்டதனாலுமே ஏற்பட்டது என பிரச்சாரம் செய்கிற தரப்பே இவ்வாறு காடைத்தனமாக செயற்பட்டது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

சஜித் பிரேமதாசவின் வெற்றியை விரும்புகிற, ராஜபக்ஷகளின் தோல்வியை ஆதரிக்கிற யாரும், அக்கரைப்பற்றில் பிரதேசவாதத் தீயைப் பற்றவைத்து சமூக பிரக்ஞையுடன் கோட்டாவுக்கு எதிராக வாக்களிக்க இருக்கிற நன்மக்களையும் திருப்பிவிட வாய்ப்பிருக்கிற முட்டாள் தனத்தை செய்திருக்க மாட்டார்கள்.

முன்னாள் அமைச்சர் அதாவுழ்ழாஹ், அவர் விதைத்ததனைத்தான் இன்று அறுவடை செய்தாரே ஆகினும், அப்பாத்திரம் மீளக் கைமாறுதல் அதன் தொடர்ச்சிக்கே வழிவகுக்கும்.

இவ்வாறு நான் கூறுகையில், பாலமுனையில் நடந்த சில சம்பவங்களை என்னோடு சம்பந்தப்படுத்தி சிலர் சிந்திக்கலாம். ஒருபோதும் அவ்வாறான செயற்பாட்டுகளுக்கு நான் ஆதரவாக இருந்ததுமில்லை, அவற்றை களத்தில் இறங்கி எதிர்க்காமல் இருந்ததுமில்லை. அழ்ழாஹ் அறிந்தவன்.

சுதந்திரமாக கருத்து வெளியிட இடமளிப்போம். மக்களின் தெரிவுக்கு வழிவிடுவோம்.

Tags :
comments