கிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார்.

  • November 18, 2019
  • 340
  • Aroos Samsudeen
கிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார்.

(எஸ்.எம்.அறூஸ் – அட்டாளைச்சேனை)

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மூத்த உதைபந்தாட்ட வீரருமான அக்கறைப்பற்றைச் சேர்ந்த என்.டி பாறூக் இன்று காலமானார்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.)

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம் என்.டி பாறூக் இப்பிராந்தியத்தில் மிகச்சிறந்த உதைபந்தாட்ட கோல் கீப்பராக விளங்கியவர். இன்றுகூட கீப்பர் பாறூக் என்றுதான் எல்லோராலும் அழைக்கப்பட்டு வருகின்றார்.

அக்கறைப்பற்று மண்ணின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட வீரரான மர்ஹூம் என்.டி பாறூக் மைதானத்தில் சிறப்பான, எடுப்பான கோல்காப்பு திறன் ரசிகர்களினது பலத்த வரவேற்றைப் பெற்றிருந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கின்றறோம்.

தொழில் முறையாக வங்கி உத்தியோகத்தரான மர்ஹூம் என்.டி பாறூக் மட்டக்களப்பிற்கு இடமாற்றம்பெற்றுச் சென்றதனால் காத்தான்குடியில் தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டதுடன் காத்தான்குடி உதைபந்தாட்டத்துறையுடன் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

உதைபந்தாட்ட வீரராக, நடுவராக,பயிற்றுவிப்பாளராக, நிர்வாகியாக பல மட்டத்திலும் பணியாற்றி கிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடியாக திகழ்ந்தவர்.

அக்கறைப்பற்று ஏஸ் விளையாட்டுக் கழகம், புளட்ஸ் விளையாட்டுக் கழகம், யுத் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றில் இணைந்து கொண்டு விளையாடிய மர்ஹூம் என்.டி.பாறூக் இக்கழகங்களின் வெற்றிக்காக பெரும் பங்களிப்பினை செய்துள்ளார்.

தனது இருப்பிடத்தை காத்தான்குடிக்கு மாற்றியதிலிருந்து காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து கொண்டு விளையாடினார். பின்னர் அக்கழகத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு மிகச்சிறந்த முறையில் அக்கழகத்தை வழிநடாத்தி மட்டக்களப்பு மாவட்ட சம்பியனாகவும் வருவதற்கு வழியமைத்த பெருமையும் அவரையே சாரும்.

பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மர்ஹூம் என். டி.பாறூக் மாவட்டத்தின் உதைபந்தாட்டத்துறையின் வளர்ச்சிக்கு தேசிய ரீதியில் பல்வேறு வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தார். பின்னர் காத்தான்குடி உதைபந்தாட்ட லீக்கின் தலைவராகவும் தெரிவானார்.

நடுவர் துறையிலும் சிறப்புற்று விளங்கிய இவர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடுவராகக் கடமையாற்றி நாட்டுக்கும், தனது பிராந்தியத்திற்கும் பெருமையை தேடிக்கொடுத்தவர்.

அக்கறைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் செயலாளராகவும் குறிப்பிட்ட காலம் செயற்பட்ட மர்ஹூம் என்.டி.பாறூக் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்தடவையாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உயர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது.

ஆங்கிலத்திலும் புலமை கொண்ட மர்ஹூம் என்.டி.பாறூக் ஆங்கில அறிவிப்புத்துறையிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இவர் அறிவிப்புச் செய்யும் முறை பலரையும் கவர்ந்திருக்கின்றமை விசேட அம்சமாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவிலும் பிரதான அறிவிப்பாளராக மர்ஹூம் என்.டி.பாறூக் அவர்கள் கடமையாற்றினார்.

அக்கறைப்பற்றைச்சேர்ந்த மர்ஹூம்களான நாஹூர்தம்பி தம்பதிகளின் புல்வரான மர்ஹூம் என்.டி.பாறூக்கிற்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர்.

மர்ஹூம் பாறூக் அவர்களின் மரணச் செய்தி கேட்டதும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்ததது. என்னுடன் அன்பாகப் பழகும் பாறூக் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் உதைபந்தாட்ட விதி முறைகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

சிறந்த உதைபந்தாட்ட வீரான எனது ஊடகத்துறை நண்பர் ஏ.எல்.றமீஸ் அவர்கள் எப்போதும் பாறூக் காக்காவை சிலாகித்துப் பேசுவதையும் இச்சந்தர்ப்பத்தில் மீட்டுக்கொள்கின்றேன்.

திடிர் மாரடைப்புக் காரணமாக இன்று காலமான மர்ஹூம் என்.டி.பாறூக்கின் ஜனாசா நல்லடக்கம் நாளை காலை 6.00 மணிக்கு அக்கறைப்பற்றில் இடம்பெறவுள்ளது.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்.

,

Tags :
comments