புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும!

  • November 22, 2019
  • 267
  • Aroos Samsudeen
புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும!

நாட்டின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, முன்னாள் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இதன்பின்னர், நேற்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். இவ்வாறான நிலையில், அவரின் கீழான புதிய அமைச்சரவை நியமனங்கள் இன்றைய தினம் (22) வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, முன்னாள் அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட ஹரின் பெர்னாண்டோவுக்கு பதிலாக டலஸ் அழகப்பெரும புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டலஸ் அழகப்பெரும விளையாட்டுத்துறை அமைச்சராக மாத்திரமின்றி இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி, கல்வியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டலஸ் அழகப்பெரும, பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை குழாத்துக்கான அனுமதியை தனது முதல் பணியாக வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு  kalam1st -களம் பெஸ்ட் இணையத்தளம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

Tags :
comments