உளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் – மோடி

  • November 29, 2019
  • 273
  • Aroos Samsudeen
உளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் – மோடி
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் வழங்கத் தயார் எனவும், பிரதமர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷயுடன் சற்றுமுன்னர் இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “இலங்கை ஜனாதிபதியான பின்னர், ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டு வந்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
“இந்தியா, இலங்கையின் மிகவும் நெருக்கமாக நண்பன். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், இலங்கையில் 14,000 வீடுகளை நிர்மாணித்துள்ளோம். இன்று, நாங்கள் இரு நாடுகளினதும் பாதுகாப்புக் குறித்து கலந்துரையாடினோம். இந்தியாவும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடியது. ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலை, நாங்கள் கண்டிக்கிறோம்.
“மேலும், இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள் கடன் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட, 50 மில்லியன் டொலர்கள் கடனை வழங்க, இந்தியா முடிவு செய்துள்ளது.
“இலங்கையில் நல்லிணக்கம் குறித்த எங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். ஜனாதிபதி ராஜபக்‌ஷ, இன நல்லிணக்கம் குறித்த தனது அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார். நல்லிணக்க நடைமுறையில், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதும் அடங்கும்.
“இலங்கையில், தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
“நாங்கள் அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பின்பற்றுகின்றோம். அந்தவகையில், ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும்” எனவும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தியப்
பிர​மரர் நரேந்திர மோடியை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்த பின்னர்,  ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இது தொடர்பில், டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர், தனது அழைப்பை ஏற்று, முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றியெனத் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியின் இந்திய விஜயமானது, இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான உறவுக்கு ஒரு சாட்சியென்றும் இலங்கை – இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும், அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும்இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ந்து, மேலும் பலப்படுத்தப்படும் என்றும், அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து , “இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து நடத்திய ஊடகச் சந்திப்பின் போது, நரேந்திர மோடியை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு, ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு விடுத்தார்.
Tags :
comments