இலங்கைக்காக 7 தங்கப் பதக்கங்களை வென்ற மெதிவ் அபேசிங்க

  • December 9, 2019
  • 289
  • Aroos Samsudeen
இலங்கைக்காக 7 தங்கப் பதக்கங்களை வென்ற மெதிவ் அபேசிங்க

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) நீச்சல் போட்டிகளுக்கான இறுதி நாளான இன்று இலங்கை அணி 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வெற்றிக்கொண்டது. 

இதன்படி, நீச்சல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 7 தங்கம், 11 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 36 பதக்கங்களை வென்றுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக தங்கப் பதக்கத்தை வெல்லத் தவறியிருந்த இலங்கை அணிக்கு, இன்றைய தினம் மெதிவ் அபேசிங்க மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஒட்டுமொத்தமாக இவர், 7 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை இலங்கைக்காக வென்றுக்கொடுத்திருந்தார்.

முதலாவதாக ஆண்களுக்கான 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்த இவர், போட்டி தூரத்தை 2.01.66 நிமிடங்களில் கடந்து இந்த பதக்கத்தை வென்றிருந்தார். இதற்கு முன்னர், 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் தேசிய சாதனையை மெதிவ் அபேசிங்க பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தப்படியாக ஆண்களுக்கான 100 மீற்றர்  சாதாரண நீச்சலில் போட்டியிட்ட மெதிவ் அபேசிங்க இன்றைய தினத்தின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். இவர், போட்டித் தூரத்தை 49.27 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதேநேரம், இன்றைய தினத்தின் மூன்றாவது தங்கப் பதக்கத்தை மெதிவ் அபேசிங்க ஆண்களுக்கான 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சு நீச்சல் போட்டியில் வெற்றிக்கொண்டார். போட்டித் தூரத்தை இவர் 24.00 செக்கன்களில் நிறைவுசெய்து தேசிய சாதனையையும் பதிவுசெய்தார்.

இன்றைய தினத்தில் இலங்கை அணி ஒரு வெள்ளிப் பதக்கத்தை வெற்றிக்கொண்டது. ஆண்களுக்கான 4X100 கலப்பு நீச்சலில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற போதும், குறித்த போட்டியில் இலங்கை அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தது. எனினும், பெண்களுக்கான 4X100 மீற்றர் கலப்பு நீச்சலில் இலங்கை வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

குறித்த போட்டியில் இலங்கை பெண்கள் அணி போட்டித் தூரத்தை 4.24.66 நிமிடங்களில் நிறைவுசெய்து தேசிய சாதனையை படைத்திருந்தது. இதற்கு முன்னர் போட்டி தூரத்தை 4.40.72 நிமிடங்களில் கடந்து இலங்கை பெண்கள் அணி தேசிய சாதனையை கைவசம் வைத்திருந்தது.

இதேவேளை, இலங்கை அணி இன்றைய தினம் மூன்று வெண்கலப் பதக்கங்களை வெற்றிக்கொண்டிருந்தது. ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் (50.5) மற்றும் ஆண்களுக்கான 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சு நீச்சல் போட்டிகளில் அகலங்க பீரிஸ் மற்றும் பெண்களுக்கான 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சு நீச்சலில் தேசிய சாதனையை முறியடித்த சந்து சாவிந்தி (28.93) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர்.

Tags :
comments