தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார்

  • December 24, 2019
  • 295
  • Aroos Samsudeen
தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார்
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் ஹிஜாப் அணிந்திருந்த இஸ்லாமிய மாணவியை வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா இன்று ,23 /12/2019 பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ராம்நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
விழாவில் முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலைப் பட்டத்தில் தங்கம் வென்ற கேரள இஸ்லாமிய மாணவி ரபீஹாவின் தலையில் இருந்த ஹிஜாப்பை அகற்றும்படி பாதுகாப்பு அதிகாரிகள் வற்புறுத்தினர்.
ஆனால், அதை ஏற்க மறுத்த மாணவி ரபீஹா, “வேண்டுமானால் என்னை இன்னொரு முறை சோதனை செய்து கொள்ளுங்கள். நான் ஏன் அதைக் கழற்ற வேண்டும்” என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், அவர் கோஷம் போட்டுவிடுவார் என்று நினைத்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
விழா அரங்கின் வெளியே நிறுத்தப்பட்ட அவர், குடியரசுத் தலைவர் விழாவை முடித்துவிட்டுச் சென்ற பிறகே, உள்ளே அனுமதிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் சென்றதை அடுத்து பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ராஜீவ் ஜெயின் மற்ற மாணவர்களுக்குப் பட்டமும், மெடல்களையும் வழங்கினார்.
தொடர்ந்து மாணவி ரபீஹா அழைக்கப்பட்டதால் மேடையேறிய அவர் பட்டத்தை மட்டும் பெற்றுக்கொண்டார். தங்கப் பதக்கத்தை வாங்க அவர் மறுத்துவிட்டார். மேடையில் இருந்த அனைவரும் வாங்கிக்கொள்ளும்படி திரும்பத் திரும்பக் கூறியும் அதை வாங்க மறுத்த அவர், “குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் எனது சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதை நான் ஏற்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ரபீஹா, “கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த நான், 2018ம் ஆண்டு படிப்பு நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றிருந்தேன். விழா தொடங்கும் முன்பு என்னை அரங்கிலிருந்து வெளியேற்றி தனியே அமரவைத்தனர். நான் ஹிஜாப் அணிந்தது குற்றமா எனத் தெரியவில்லை. தலையில் அணிந்திருந்த ஹிஜாப்பை அகற்றும்படி கூறினார்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.
என்னை உடனே வெளியே அழைத்து வந்துவிட்டார்கள். எதற்காக என்னை வெளியேற்றினார்கள் என்று தெரியவில்லை. குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகப் போராட்டத்தில் மாணவர்கள் அமைதியாக நடத்தி வருகின்றனர். என்னை வெளியேற்றி தனியாக அமரவைத்தது அவமானப்படுத்தியதை மேடையில் தெரிவித்து, எனது தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்து விட்டேன். பட்டத்தை மட்டும் பெற்றேன். குடியரசுத் தலைவர் அங்கிருந்து சென்றபிறகே என்னை உள்ளே அனுமதித்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எனது சகோதர சகோதரிகளுக்காக அந்த மெடலை நான் வாங்கவில்லை” என்றார்.
மூலம்:விகடன்
Tags :
comments