அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய, தேசியவாதமே காலத்தின் தேவையாகும்

  • January 18, 2020
  • 233
  • Aroos Samsudeen
அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய, தேசியவாதமே காலத்தின் தேவையாகும்
– ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி –
உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றங்கள் இடம் பெறும். அம்மாற்றங்களுக்கேற்ப நாமும் நடந்துகொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிவடையும் வரை ஐ.நா. சபை என்றொரு தாபனம் இருக்கவில்லை. சர்வதேச சட்டங்களும் காணப்படவில்லை. முன்பு அதிகாரம் யாரிடம் இருந்ததோ அவர்கள் நாடுகளைக் கைப்பற்றும் நிலையே காணப்பட்டது. சர்வதேச எல்லைகளும் அப்போது சரியாக வகுக்கப்பட்டிருக்கவில்லை. அவரவர் விரும்பியவற்றை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது கடைபிடிக்கப்பட்ட இஸ்லாமிய சட்டதிட்டங்களை இன்றைய காலத்திலும் அதேபோன்றே பின்பற்றுவது பிழையானது. அது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.
12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இஜ்திஹாதின் வாயில்கள் மூடப்பட்டு விட்டதாக எப்படிக் கூற முடியும்? உலகம் அழியும் வரை இஜ்திஹாத் செய்துகொண்டுதான் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. உலகில் இடம்பெற்று வருகின்ற விஞ்ஞான அறிவியல் ரீதியான அபிவிருத்திகளுக்கு உட்பட்டதான சூழ்நிலையில் நாம் முஸ்லிம்களாக இஸ்லாத்தை காப்பாற்றிக் கொண்டு கண்ணியத்துடன் வாழ்வது எப்படி என்கின்ற விடயம் மிக முக்கியமானது. உதாரணத்திற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு மரணித்த ஒருவரை தற்போது எழுப்பிவிட்டால் அவர் தற்காலத்தில் இடம்பெற்றிருக்கின்ற தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களைக் கண்டு வியப்படைவார். ஐம்பது வருட காலத்தில் உலகில் மிகப்பெரும் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும் என்றிருந்தால் 1440 வருடங்களுக்கிடையில் எவ்வளவு பாரிய மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும்?
நாம் இஜ்திஹாத் செய்து தற்போதைய நவீன சூழலுக்கேற்றவாறு ஆய்வு களை மேற்கொண்டு மார்க்கத்தை பின்பற்றுவது மிக முக்கியம். இஜ்திஹாத் மூடப்பட்ட காரணத்தைக் கொண்டே முஸ்லிம்கள் பின்தள்ளப்பட்டார்கள் என்பதே உண்மை.
இன்றைய உலகளாவிய போக்குகள் மிகவும் வித்தியாசமானவை. பத்து வருடங்களுக்கு முந்திய இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல் கையும் மசாட் என்கின்ற முஸ்லிம் பதவி வகித்தார். அப்போது இந்திய சனத் தொகையில் முஸ்லிம்கள் 14 வீதமே காணப்பட்டனர். பிரதமராக சீக்கிய இனத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் பதவி வகித்தார். அப்போது சீக்கியர்கள் இந்தியாவில் 1 வீதம். பல்கலாசாரம் (Multi culture) மிகவும் உச்சத்தில் இருந்த காலப்பகுதியே அது. அமெரிக்காவிலும் அப்போது ஒரு முஸ்லிமின் புதல்வரான கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார். ஆனால் இன்றைய நிலைமைகள் மிகவும் வித்தியாசமானவை. இன்று அமெரிக்காவில் வெள்ளை மேலாதிக்கவாதியான டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக உள்ளார். இந்தியாவிலும் தீவிர இந்துத்துவவாதியான மோடி பிரதமராக உள்ளார். இங்கிலாந்தில் வெள்ளை மேலாதிக்க வாதி மொரிஸ் ஜொன்சன் பிரதமராகத் தெரிவாகியுள்ளார். இலங்கையிலும் அதே போக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பான்மையின மக்கள் முன் வந்து அவர்களுக்கான தலைவரை தெரிவுசெய்துள்ளார்கள்.
தேசியவாதம் (நாட்டுப்பற்று) இன்று மிகப்பெரியளவில் மேலெழுந்தி ருக்கிறது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும், ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற தேசியவாத அலை இன்று உருப்பெற்றிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு டேவிட் கமரன் அலை, பராக் ஒபாமா அலை, மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் அலை என்பதாக பல்கலாசார அலை மேலோங்கிக் காணப்பட்டது. இன்று தேசியவாத சிந்தனை மேலெழுந்துள்ளது. இதை நாம் ஏற்றுக்கொண்டோமா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, இலங்கையில் தற்போது இந்த அலையே உருப்பெற்றிருக்கிறது. இவ்வலையில் நாமும் ஒரு பங்காளராவதா? அல்லது அதில் அடிபட்டுச் செல்வதா? என்கின்ற விடயமே எம் முன்னால் உள்ளது. இத்தேசியவாத அலையில் நாமும் பங்காளராவது எப்படி? இதற்கு நாம் ஒரு கருத்தியலை (Concept) அறி முகப்படுத்தியிருக்கிறோம். அதாவது அனைத்து தரப்புக்களையும் உள்ள டக்கிய தேசியவாதம் (Inclusive Nationalism) சிங்கள, பௌத்த, முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவம் ஆகிய எல்லோரும் சேர்ந்து இலங்கையர் என்னும் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு தேசியவாத அலையில் இணைந்து போக முடியும்.
இதுவல்லாமல் ‘நாம் முஸ்லிம்கள், நாம் வித்தியாசமானவர்கள்’ என் கின்ற தோரணையில் செல்லும் போது எவ்வாறு இணைந்த தேசியவாதத்தை உருவாக்குவது? இப்படியிருக்கின்ற போது நாம் சிங்களத் தேசியவாதத்தையே மேலெழுப்பிவிடுகிறோம். இந்தத் தெரிவு யாரிடம் உள்ளது? சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு தமக்கானதொரு தலைமையை உருவாக்கும் தேவையுள்ளது. ஆனால் ஒரு நாட்டின் தலைவர் அல்லது அரசாங்கம் பெரும்பான்மையினுடைய அரசாங்கமாக இருக்க வேண்டுமா? அல்லது தாமும் பங்குகொள்ளும் அரசாங்கமாக இருக்க வேண்டுமா? என்பதைப் பற்றி சிறுபான்மையினரே தீர்மானிக்க வேண்டும். பெரும்பான்மையின மக்களோடு நாமும் சேர்ந்து எமக்கான அரசாங்கத்தைத் தெரிவுசெய்து கொண்டால் எமக்கும் எமது சிந்தனைகளைப் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
ஆனால் நாம் ஒருபுறமிருக்க ஒரு கூட்டம் மாத்திரம் ஒரு நாட்டின் ஆட்சிபீடத்தை தெரிவுசெய்து கொண்டால் அவர்கள் எவ்வளவு தூரம் அவ்வாட்சியை தெரிவுசெய்யக் காரணமாக இருந்தார்களோ நாங்களும் அவர்களுடைய தெரிவுக்கு காரணமாக இருந்துவிடுகிறோம். எனவே இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் நாம் அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய தேசியவாத சிந்தனையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எமது சமய விடயங்களை விட்டுக் கொடுக்காமல் இந்நாட்டிற்கு உரியவாறு மற்றவர்களோடு இணைந்து பயணிப்பதில் எவ்விதக் குறைகளும் ஏற்படப்போவதில்லை. உலகில் பலவகையான நாடுகள் காணப்படுகின்றன. உலகில் 51 நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாகும். அவர்கள் ஒன்றிணைந்து OIC ஐ உருவாக்கியுள்ளனர். அந்நாடுகளில் வாழும் முஸ்லிம்களது வாழ்க்கை முறை வித்தியாசமானது. இன்னும் சில நாடுகள் பல்கலாசார வாழ்வு முறைகளை கொண்டுள்ளன. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இன்னும் சில நாடுகள் தாராளவாத  சிந்தனையுடையவை. இதற்குக் கனடாவை குறிப்பிடலாம்.
இன்னும் சில நாடுகள் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும். உதாரணமாக நோர்வே, பெல்ஜியம், ஜேர்மனி. இன்னும் சில நாடுகளில் நாத்திகர்களே அதிகம் உள்ளனர். இங்கிலாந்தில் 50 வீதம் நாத்திகர்கள். யப்பானில் 70 வீதம் நாத்திகர்கள். தென்கொரியாவில் 70 வீதம். சீனாவில் 90 வீதமானவர்கள். எனவே யாராவது இங்கு வாழ்வது போன்று இன்னுமொரு இடத்தில் வாழ முடியும் என்றாலோ அல்லது நான் எங்கு வாழ்ந்தாலும் ஒரே மாதிரிதான் வாழ்வேன் என்றாலோ அதில் ஒரு கேள்வி தொக்கி நிற்பதைக் காணலாம். இதனால் நாம் ஏதாவதொரு நாட்டில் வாழ்வது போன்று இங்கு வாழ முடியாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நாம் வாழ்வது இலங்கையில். எனவே நாம் இலங்கையை அறிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையின் சனத்தொகை, சூழமைவு, கலாசாரம், கல்வி மற்றும் வரையறைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே சர்வதேச ரீதியான போக்கில் அவதானம் செலுத்தி, சிந்தித்து இலங்கையின் சூழமை வையும் நன்றாக ஆராய்ந்து நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே முக்கியம். இதில் கல்வி, மொழி, கீழ்ப்படிவு ஆகிய விடயங்கள் மிக முக்கியமானவை. இவ்விடயத்தில் சிந்தித்து நடந்துகொள்ள வேண்டும்.
மீள்பார்வை
Tags :
comments