மெதிவ்ஸின் இரட்டைச்சதத்தோடு வலுவடைந்துள்ள இலங்கை அணி

  • January 23, 2020
  • 269
  • Aroos Samsudeen
மெதிவ்ஸின் இரட்டைச்சதத்தோடு வலுவடைந்துள்ள இலங்கை அணி

சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம்  நிறைவுக்கு வந்தது. நான்காம் நாளில் இலங்கை கிரிக்கெட் அஞ்செலோ மெதிவ்ஸின் அபார இரட்டைச் சதத்தோடு மிகவும் உறுதியான நிலையை அடைந்துள்ளது. 

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வரும் போது, ஜிம்பாப்வே அணியின் முதல் இன்னிங்ஸை (358) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 295 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் மெதிவ்ஸ் 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, தனன்ஞய டி சில்வா 42 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதனையடுத்து போட்டியின் இன்றைய நான்காவது நாளில் ஜிம்பாப்வே வீரர்களை விட 63 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இலங்கை அணி தமது துடுப்பாட்டத்தை தொடர்ந்தது. நான்காம் நாளுக்கான போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற நான்காவது சதத்தினை பதிவு செய்ய, தனன்ஞய டி சில்வா அவரின் ஆறாவது டெஸ்ட் அரைச்சதத்தினைக் கடந்தார்.

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்டத்தோடு இலங்கை அணி ஜிம்பாப்வே அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை நோக்கி (358) முன்னேறிய நிலையில் நான்காம் நாளின் முதல் விக்கெட்டாக தனன்ஞய டி சில்வா விக்டர் நியோச்சியின் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்கும் போது தனன்ஞய டி சில்வா 7 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனன்ஞ டி சில்வாவைத் தொடர்ந்து, களத்தில் இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் புதிய துடுப்பாட்ட வீரராக வந்த நிரோஷன் டிக்வெல்லவுடன் இலங்கை அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். பொறுமையாக துடுப்பாடிய நிரோஷன் டிக்வெல்ல தன்னுடைய 15 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு இலங்கைத் தரப்பிற்கு பெறுமதி சேர்த்தார். தொடர்ந்து, மெதிவ்ஸ் உடன் இணைந்து இலங்கை அணியின் ஆறாவது விக்கெட்டுக்காக 136 ஓட்டங்கள் பகிர்ந்த டிக்வெல்ல 63 ஓட்டங்களைப் பெற்றவாறு மைதானத்தை விட்டு வெளியேறினார்.

டிக்வெல்லவின் விக்கெட்டினை அடுத்து இலங்கை கிரிக்கெட் சிறிது சரிவினை எதிர்கொண்டது. எனினும், தனித்துப் போராடிய அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது கன்னி இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார். மெதிவ்ஸின் இரட்டைச் சதத்தோடு இலங்கை அணி 515 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது.

இப்போட்டியின் மூலம் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன போன்ற முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரட்டைச்சதம் கடந்த இலங்கையராக மாறிய அஞ்செலோ மெதிவ்ஸ், 600 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் மற்றும் 16 பௌண்டரிகள் அடங்கலாக 200 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு சார்பில் சிக்கந்தர் ராஸா மற்றும் விக்டர் நியோச்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பிரமாண்டமான முதல் இன்னிங்ஸை அடுத்து 157 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் ஜிம்பாப்வே அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 30 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி காணப்படுகின்றது.

ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த பிரின்ஸ் மெஸ்வோர் 15 ஓட்டங்களுடனும், ப்ரையன் முட்சின்கன்யமா 14 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இந்த வீரர்களில் ப்ரையன் முட்சின்கன்யமா இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸில் தலை உபாதைக்கு ஆளான கெவின் கசூஸாவின் பிரதியீட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
comments