கூடைப்பந்து ஜாம்பவான் கோப் ப்ரையண்ட் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு

  • January 27, 2020
  • 341
  • Aroos Samsudeen
கூடைப்பந்து ஜாம்பவான் கோப் ப்ரையண்ட் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் ப்ரையண்ட் (KOBE BRYANT) லொஸ் ஏஞ்சல்ஸ் அருகில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார். 

இன்று (27) அதிகாலை கோபி ப்ரையண்ட் தனது 13 வயது மகள் ஜியானா உட்பட 8 பேருடன் தனியார் ஹெலிகொப்டர் ஒன்றில் தவுசண்ட் ஆக்ஸ் என்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

கடும் பனி மூட்டத்தின் நடுவே கலாபஸாஸ் என்னும் இடத்தில் உள்ள மலைப்பகுதியின் சென்றுகொண்டிருக்கும்போது ஹெலிகொப்டர் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த  தீயணைப்பு வீரர்கள மற்றும் மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் ஒருவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை.

இதில் கோபி ப்ரையண்ட், அவரது 13 வயது மகள் ஜியானா, கூடைப்பந்து பயிற்சியாளர் கிரிஸ்டினா மாஸர் உள்ளிட்ட 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முன்னாள் வீரர் ஜோ ப்ரையண்ட்டின் கடைசி மகனான கோபி ப்ரையன்ட் தனது மூன்று வயது முதல் கூடைப்பந்தில் ஆர்வம் காட்டி வந்தார்.

பாடசாலைக் காலத்திலிருந்து கூடைப்பந்தில் ஏராளமான சாதனைகளைப் படைத்த ப்ரையண்ட், இளம் வயதிலேயே பல்வேறு விருதுகளையும் குவித்தார்.

பாடசாலைக் கல்வியை அவர் முடிக்கும் போது 2,883 புள்ளிகளைப் பெற்று, அப்போதைய பிரபல கூடைப்பந்து வீரர்களான வில்ட் சேம்பர்லேன், லியொனல் சிமோன்ஸ் ஆகியோரது சாதனைகளையும் முறியடித்தார். இதனால் அமெரிக்காவின் சிறந்த இளம் கூடைப்பந்து வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த சாதனைகள் ப்ரையண்ட்டை நேரடியாக தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் உள்ளே நுழைய உதவி செய்தன.

தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பில் நுழைந்த ஒருசில நாட்களிலேயே லொஸ் ஏஞ்சல்ஸின்  ‘லேக்கர்ஸ்‘ கூடைப்பந்து அணியில் இணைந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதுவரை 2000, 2001, 2002, 2009, 2010 ஆகிய ஆண்டுகளுக்கான 5 என்பிஏ சம்பியன்ஷிப் பட்டங்களை ப்ரையன்ட் வென்றுள்ளார்.

2008ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் 2012ஆம் லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று அமெரிக்க அணிக்கு தங்கப் பதக்கங்களை வென்று கொடுக்க காரணமாகவும் இவர் இருந்தார்.

2006ஆம் ஆண்டு டொரண்டோ அணியுடன் நடைபெற்ற போட்டியொன்றில் 81 புள்ளிகளை எடுத்து சாதனை புரிந்தார். என்பிஏ வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் இரண்டாவது அதிக புள்ளிகளை எடுத்த வீரராக (வில்ட் சேம்பர்லேன்– 100 புள்ளிகள்) இடம்பிடித்தார்.

அத்துடன், 18 தடவைகள் என்பிஏ சகலதுறை வீரருக்கான விருதினை வென்ற  கோபி ப்ரையண்ட், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கடைசி ஆட்டத்தில் 60 புள்ளிகளை எடுத்து கூடைப்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதுஇவ்வாறிருக்க, ப்ரையண்ட் எழுதிய ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘டியர் பாஸ்கெட்போல்‘ என்ற திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதை வென்றது.

41 வயதான கோபி ப்ரையண்ட்டுக்கு வானெஸா என்ற மனைவியும் ஜியானா உட்பட 4 மகள்களும் உள்ளனர்.

இதேவேளை, கோபி ப்ரையண்ட்டின் திடீர் மரணம் உலக கூடைப்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரணத்துக்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பராக் ஒபாமா, கிரிக்கெட், கால்பந்து, சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

20 ஆண்டுகள் கூடைப்பந்து உலகை கட்டிப்போட்டிருந்த ஓர் ஆளுமையின் இந்த திடீர் மரணம் உலகம் முழுவதுமுள்ள கூடைப்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
comments