ரவிந்து, சமாஸ், டில்ஷானின் அதிரடியுடன் இலங்கை இளையோருக்கு வெற்றி

  • January 28, 2020
  • 379
  • Aroos Samsudeen
ரவிந்து, சமாஸ், டில்ஷானின் அதிரடியுடன் இலங்கை இளையோருக்கு வெற்றி

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (27) நடைபெற்ற அணிகளை தரவரிசைப்படுத்தும் கோப்பை பிரிவுக்கான (Plate Cup) முதலாவது காலிறுதிப் போட்டியில் நைஜீரியா அணியை 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை இளையோர் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

குழு நிலைப் போட்டிகளில் விளையாடாத கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவன் மொஹமட் சமாஸ் இன்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி அரைச்சதம் அடித்து அசத்த, கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியின் ரவிந்து ரசன்த சதமடித்து இலங்கை அணிக்கு வலுச்சேர்த்தார்.

இதேநேரம், இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் மிரட்டிய மாத்தறை புனித செர்வேஷியஸ் கல்லூரி மாணவனும், இடதுகை மித வேகப் பந்துவீச்சாளருமான டில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் A பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை இளையோர் அணி தங்களுடைய முதல் இரண்டு குழுநிலை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தோல்வியைத் தழுவி காலிறுதிக்கான வாய்ப்பை இழந்ததுடன், கடைசி லீக் போட்டியில் ஜப்பான் அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது.

இந்த நிலையில், 9 ஆம் இடத்திலிருந்து 16 ஆம் இடம் வரையான தரவரிசைப்படுத்தலுக்கான கோப்பை பிரிவுக்கான போட்டிகள் இன்று ஆரம்பமாகியதுடன், இதன் முதலாவது காலிறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி, நைஜீரியாவை பொச்சேவ்ஸ்ட்ரூமில் (Potchefstroom) எதிர்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நைஜீரியா இளையோர் அணியின் தலைவர் சில்வெஸ்டர் ஒக்பே முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை இளையோர் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 16 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நவோத் பரணவிதான (4) ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து மொஹமட் சமாஸுடன் ஜோடி சேர்ந்த ரவிந்து ரசன்த 2 ஆவது விக்கெட்டுக்காக 89 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச்சதம் கடந்த மொஹமட் சமாஸ் 56 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

இந்த நிலையில், அரைச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் நிபுன் தனஞ்சய 37 ஓட்டங்களுடன் அப்துர்ரஹ்மான் ஜிமோஹ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த அஹான் விக்ரமசிங்க 17 ஓட்டங்களை எடுத்து பீட்டர் அஹோவின் பந்துவீச்சில் LBW முறையில் வெளியேறினார்.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரவிந்து ரசன்த மற்றும் சொனால் தினூஷ ஆகியோர் நைஜீரியா அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.

நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, சொனால் தினூஷ 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், முன்வரிசையில் களமிறங்கி இலங்கை அணிக்காக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிந்து ரசன்த ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட சதத்தின் உதவியுடன் இலங்கை இளையோர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை எடுத்தது.

துடுப்பாட்டத்தில் அசத்திய ரவிந்து ரசன்த, 111 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 102 ஓட்டங்களைக் குவிக்க, மொஹமட் சமாஸ் 56 ஓட்டங்களையும், சொனால் தினூஷ 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.

நைஜீரியா இளையோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில், ரஷித் அபொலரின் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் 307 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைஜீரிய இளையோர் கிரிக்கெட் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சாமுவேல் எம்பிஏ மற்றும் ஒலயின்கா ஒலலியே களமிறங்கினர்.

இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நைஜீரிய இளையோர் அணி 17.3 ஓவர்களில் 73 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

நைஜீரிய அணிக்காக அப்துர்ரஹ்மான் ஜிமோஹ் மாத்திரம் 15 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை எடுத்து வெளியேறினர்.

இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய டில்ஷான் மதுஷங்க 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, கவிந்து நதீஷன் 3 விக்கெட்டுக்களையும், சமிந்து விஜேசிங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதன்படி, 233 ஓட்டங்களால் இலங்கை இளையோர் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இலங்கை இளையோர் அணிக்காக சதமடித்து அசத்திய ரவிந்து ரசன்த போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

இதேநேரம், கோப்பை பிரிவுக்கான இரண்டாவது காலிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை 9 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து இளையோர் அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்பான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளையோர் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி 94 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

Tags :
comments