பிளேட் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி

  • January 31, 2020
  • 409
  • Aroos Samsudeen
பிளேட் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி

தென்னாபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில், 9 ஆம் இடத்தினைப் பெறும் அணியை தீர்மானிக்கும் பிளேட் சுற்றின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி, ஸ்கொட்லாந்து இளையோர் அணியை டக்வத் லூயிஸ் முறையில் 97 ஓட்டங்களால் தோற்கடித்து 9 ஆம் இடத்திற்கான பிளேட் சுற்றின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. 

தென்னாபிரிக்காவின் போச்சேப்ட்ஸ்ரூம் நகரில் இன்று (30) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 277 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

இலங்கை இளையோர் அணியின் துடுப்பாட்டம் சார்பில், அணித்தலைவர் நிபுன் தனன்ஞய அரைச்சதம் பூர்த்தி செய்து 69 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களைப் பெற்றார். இதேநேரம், அரைச்சதம் பூர்த்தி செய்த ஏனைய வீரர்களான அஹான் விக்கிரமசிங்க 59 ஓட்டங்களையும், நவோத் பரணவிதான 54 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக சார்ளி பீட், ஜாஸ்பர் டேவிட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 288 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய ஸ்காட்லாந்து இளையோர் அணி பதிலுக்கு துடுப்பாடியது.

போட்டியின் வெற்றி இலக்கிற்கான பயணத்தில் இலங்கை பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவிச்சு காரணமாக ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய ஸ்கொட்லாந்து அணியினர் 149 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில், போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டது.

தொடர்ந்து, காலநிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் ஆட்டம் கைவிடப்பட்டு இலங்கை இளையோர் அணி டக்வத் லூயிஸ் முறையில் 97 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் அங்கஸ் கய் 31 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார். அதேவேளை, இலங்கை இளையோர் அணியின் பந்துவீச்சு சார்பில் சமிந்து விஜேசிங்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், டில்சான் மதுசங்க மற்றும் கவிந்து நதீஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இலங்கை இளையோர் அணியின் தலைவர் நிபுன் தனன்ஞயவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

Tags :
comments