இலங்கை ஒருநாள் அணிக்கு திரும்பியிருக்கும் திசர பெரேரா

  • February 20, 2020
  • 387
  • Aroos Samsudeen
இலங்கை ஒருநாள் அணிக்கு திரும்பியிருக்கும் திசர பெரேரா

மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் நேற்று (19) இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி விளையாடிய கடைசி ஒருநாள் தொடராக, கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அமைந்தது. குறித்த சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்பு காரணங்கள் கருதி இலங்கை ஒருநாள்  அணியில் இடம்பெறாமல் இருந்த சிரேஷ்ட வீரர்கள் அனைவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

அந்தவகையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியானது அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் மூலம் பலப்படுத்தப்படுகின்றது.

இவர்கள் தவிர இலங்கை ஒருநாள் அணிக்கு நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் திசர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரும் திரும்பியிருக்கின்றனர். இதில், அதிரடி சகலதுறை வீரரான திசர பெரேரா இலங்கை அணிக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒருநாள் போட்டியொன்றில் கடைசியாக விளையாடியதோடு, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல இலங்கை அணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் பங்கேற்ற ஒருநாள் போட்டியிலேயே கடைசியாக விளையாடியிருந்தார்.

இதேநேரம், நிரோஷன் டிக்வெல்ல டெங்கு நோய் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நிரோஷன் டிக்வெல்ல இல்லாத நிலையில் குசல் பெரேரா அல்லது குசல் மெண்டிஸ் ஆகிய இருவரில் ஒருவருக்கே இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விக்கெட்காப்பாளராக செயற்பட வாய்ப்பு இருக்கின்றது.

இலங்கை உள்ளூர் போட்டிகளில் அண்மையில் சகலதுறைகளிலும் பிரகாசித்து வந்த ஷெஹான் ஜயசூரியவும் இலங்கை ஒருநாள் குழாத்தில் தனக்கென ஒரு இடத்தினைப் பெற்றிருக்கின்றார். எனினும், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்ட லஹிரு திரிமான்னவிற்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

அதேநேரம், காயம் காரணமாக முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணத்திலக்க, ஓஷத பெர்னாந்து ஆகியோரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இடம்பெறவில்லை.

ஆனால், காயத்தில் இருந்து மீண்டு பூரண உடற்தகுதியினைப் பெற்றிருக்கும் வேகப்பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் லஹிரு குமார, இசுரு உதான ஆகிய வீரர்களுடன் இணைந்து இலங்கை அணியின் பந்துவீச்சினை பலப்படுத்தவிருக்கின்றார்.

கடைசியாக 2015ஆம் ஆண்டில் ஒருநாள் தொடர் ஒன்றுக்காக இலங்கை வந்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட குறித்த தொடரினை 3-0 எனப் பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஒருநாள் குழாம் – திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, நிரோஷன் டிக்வெல்ல, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, ஷெஹான் ஜயசூரிய, வனிந்து ஹஸரங்க, தசுன் ஷானக்க, திசர பெரேரா, லக்ஷான் சந்தகன், நுவன் பிரதீப், இசுரு உதான, லஹிரு குமார  

ஒருநாள் தொடர் அட்டவணை

  • முதலாவது ஒருநாள் போட்டி – பெப்ரவரி 22 – SSC மைதானம்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – பெப்ரவரி 26 – ஹம்பாந்தோட்டை
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – மார்ச் 01 – பல்லேகல
Tags :
comments