திகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது…?

  • March 18, 2020
  • 334
  • Aroos Samsudeen
திகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது…?

ஒரு விடயம் எல்லா சந்தர்ப்பங்களிலும் நன்மை பயக்கும் என நம்ப முடியாது. காலத்துக்கு காலம் வியூகங்கள் மாறுபடும். மாற்றியேயாக வேண்டும். வெளியில் நல்லதாக தெரியும் பழங்களனைத்தும் சுவையை உறுதி செய்யாது. இன்று இரசாயன சேர்க்கைகளால் பழ வகைகள் கண் கவர் நிறங்களிளுள்ளமை நாமறிந்ததே.

அது போன்றே அண்மைக்காலமாக முஸ்லிம் கட்சிகளின் கூட்டு ( மு.கா, அ.இ.ம.கா) அவசியம் என்ற கருத்தாடல்களை நோக்க முடிகிறது. ஒரு விடயம் முஸ்லிம் சமூகத்திற்கு தீமை பயக்குமாக இருந்தால், அது பற்றி நாம் சிந்தித்தேயாக வேண்டும். இதில் முஸ்லிம் சமூகத்திற்கு தீமை பயக்கும் விடயமாக முஸ்லிம் பிரதிநிதித்துவ சவாலை குறிப்பிடலாம். திகாமடுல்ல மாவட்டத்தில் இரு கட்சிகளும் ஒன்றிணைவது தான் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்தானது என்றால் ஏற்பீர்களா?

2020ம் ஆண்டு பதியப்பட்ட வாக்கெண்ணிக்கை 520,000 ஆகும். இதில் 70 வீதம் வாக்களிக்கப்படுகிறது எனக் கொள்வோம். 364,000 வாக்குகள் அளிக்கப்படும். இதிலும் 10,000 வாக்கை செல்லுபடியற்ற வாக்கு மற்றும் 5 வீத வெட்டுப்புள்ளியை எட்டாத வாக்குகளுக்காக நீக்கினால் 354,000 வாக்குகள் கிடைக்கும். இதனை 6 ஆசனங்களால் பிரித்தால், ஒரு ஆசனத்திற்கு 59,000 வாக்குகள் தேவைப்படும்.

மு.கா, அ.இ.ம.கா ஆகிய கட்சிகள் முறையே 70 000, 45 000 அளவான வாக்கை பெறும் என்பது எனது கணிப்பீடு. மு.காவினர், தாங்கள் 75 000 அளவான வாக்கை பெறுவோம் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதன் படி பார்த்தால் ஆரம்பத்திலேயே மு.கா ஒரு ஆசனத்தை உறுதி செய்து கொள்ளும். அ.இ.ம.கா 40 000 அளவான வாக்கை பெற்றாலே எஞ்சிய ஆசனத்தில் ஒன்றை இலகுவாக பெறும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அ.இ.ம.கா சாய்ந்தமருதில் போட்டியிடாது அம்பாறை மாவட்டத்தில் 43 000 வாக்கை பெற்றிருந்தது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.இ.ம.கா சாய்ந்தமருதில் 2700 அளவான வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம் முறை ரணில், சஜித் அணியினர் பிரிந்து தேர்தல் கேட்டால் இவ்விரு அணியினர் பெறும் வாக்கை விட அதிகமான வாக்கை அ.இ.ம.கா பெறும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச அம்பாறை தேர்தல் தொகுதியில் மொத்தமாக 42,000 வாக்கையே பெற்றிருந்தார். இவ் வாக்குகள் இரு கூறாகவும் பிரிந்தால், இம் முறை அ.இ.ம.கா எவ்வித சந்தேகமுமின்றி ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளும் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியும்.

இவ் விரு கட்சிகளும் ஒன்றிணைந்தால் 70000 ( SLMC ) + 40000 ( ACMC ) சேர்ந்து 110,000 வாக்கையே பெறும். இதற்கு ஆரம்பத்தில் ஒரு ஆசனமும், எஞ்சியதில் ஒரு ஆசனமும் கிடைக்கும். மூன்று ஆசனம் கிடைக்கும் என்பது கற்பனை அரசியல் கதையாடல்கள். இரு அணியினரும் ஒன்றிணையும் போது இரு அணியினர் சார்பாக களமிறக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடையும்.

இதில் பத்தாயிரமளவான வாக்குகள் சிதறவும் வாய்ப்புள்ளது. இவ்விரு அணியினரும் சேராமல் விட்டால் மு.கா ஒரு ஆசனத்திற்கு தேவையானதை விட அதிகமான வாக்கை பெறும் வாய்ப்புள்ளதால் அது பெறும் ஒவ்வொரு மேலதிக வாக்கும், அதனை இரண்டு ஆசனங்கள் பெறுவதை நோக்கி நகர்த்தும். இவ் வாய்ப்பு இரு அணியினரும் ஒன்றிணையும் போது இல்லையென்பதே யதார்த்தம்.

திகாமடுல்லவில் மு.கா, அ.இ.ம.கா கூட்டு அவசியமற்றது, எவ்வித பயனுமற்றது என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். திகமடுல்லவில் பயனற்ற தேர்தல் கூட்டு தேவையில்லை. சமூக விடயங்களெனும் போது அதனை இரு கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்கொள்வது அவசியமானது.

வட, கிழக்கு தவிர்ந்து ஏனைய சில மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டிய தேவையுள்ளது. அங்கு எவ்வாறு உறுதி செய்ய முடியும் என சிந்திப்பதை விட்டு, இங்கு அரசியல் தந்திர காய் நகர்த்தலை மேற்கொள்வதில் அர்த்தமில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Tags :
comments