உயிரியல் பயங்கரவாத தாக்குதல் நடத்த, வழிகாட்டியுள்ள கொரோனா – ஐ.நா. எச்சரிக்கை

  • April 12, 2020
  • 261
  • Aroos Samsudeen
உயிரியல் பயங்கரவாத தாக்குதல் நடத்த, வழிகாட்டியுள்ள கொரோனா – ஐ.நா. எச்சரிக்கை
உலகமெங்கும் எப்படி உயிரி பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என்பதற்கு கொரோனா வைரஸ் தொற்று வழிகாட்டி உள்ளதாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளையெல்லாம் கொரோனா வைரஸ் பரவல், கதி கலங்க வைத்து வருகிறது.
‘பயோ வார்’ என்று அழைக்கப்படக்கூடிய உயிரி பயங்கரவாத தாக்குதல் போன்ற இந்த வைரசின் கொடிய தாக்குதலில் இருந்து எப்படி மீளப்போகிறோம் என ஒரு வழி தெரியாமல் வல்லரசு நாடுகள் தொடங்கி சிறிய நாடுகள் வரை திணறி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா வைரசால் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபையின் தலைமையகத்தில், அதிக அதிகாரம் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் முதல்முறையாக நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) விவாதம் நடந்தது.
கொரோனா வைரஸ்
இந்த விவாதத்தில் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரசுக்கு எதிராக நடத்தப்படுகிற இந்தப் போர், ஒரு தலைமுறையின் போராக அமைந்துள்ளது.
கொரோனா வைரஸ்நோய், முதலில் ஒரு தொற்று நோய் ஆகும். இது பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் தாக்கங்கள் மிகவும் தொலைநோக்கு உடைய வையாக இருக்கின்றன.
இந்த தொற்று நோய், சர்வதேச அளவில் அமைதியையும், பாதுகாப்பையும் பராமரிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
சமூக அமைதியின்மைக்கும், வன்முறைக்கும் இது வழி நடத்தும். இதெல்லாம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து போரிடுவதில் நமது திறனைப் பலவீனப்படுத்தி விடும்.
பலவீனங்களும், தயார் நிலை இன்மையும், இந்த தொற்றுநோய் ஒரு உயிரி பயங்கரவாத தாக்குதல் எவ்வாறு நடத்தப்படலாம் என்பதற்கான பாதையை காட்டுகிறது. இது ஆபத்துகளை அதிகரிக்கவும் கூடும்.
அரசு சாராக்குழுக்கள் (பயங்கரவாத குழுக்கள்), கொரோனா வைரஸ் போன்ற பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கடுமையான தாக்குதலை நடத்துவதற்கு வழியை பெறும். இது உலகமெங்கும் உள்ள சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்த முடியும்.
உலக நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வருகிறபோது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான வழியை பெறலாம்.
இது வன்முறைகள் அதிகரிப்பதற்கும், அழிவுகரமான தவறான கணக்கீடுகளுக்கும் வழிவகுக்கும். இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிற போர்களை மேலும் சிக்கலாக்கும். கொரோனா வைரசை எதிர்த்து நடத்துகிற போரையும் சிக்கலாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
comments