அரசியலுக்காக மாணவர்வாழ்வைப் பாழாக்காதீர். -வி.ஜனகன் வேண்டுகோள்….!

  • April 13, 2020
  • 185
  • Aroos Samsudeen
அரசியலுக்காக மாணவர்வாழ்வைப் பாழாக்காதீர். -வி.ஜனகன் வேண்டுகோள்….!
(ஊடகப் பிரிவு)
வெறும் அரசியல் சுயலாபங்களுக்காக மாணவர்களின் வாழ்வைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தாமல், இந்தச் சூழ்நிலையில் பரிசோதனைகளைத் துரிதப்படுத்தி, அதன் முடிவுகளை வெளிப்படையாக அறிவித்ததன் பின்னர், பாடசாலைகளை ஆரம்பிப்பதே சிறந்த முகாமைத்துவமாகுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மே 11ஆம் திகதி ஆரம்பிக்கும் அறிவித்தலை அரசாங்கம் விடுத்திருக்கும் இத்தருணத்தில், அதனைக் கேள்விக்குட்படுத்தி, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், மேலும் கூறியுள்ளவையாவன,
“அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாந்தவணையை மே 11ஆம் திகதி ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த அறிவுப்பானது முன்கூட்டிய திட்டமிடப்பட்ட முடிவா என்பது கேள்விக்குறியானதே. உண்மையிலேயே, முழுமையான பரிசோதனைகளை முடித்த பின்னர், இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடும் இடமான பாடசாலைகளை இயங்க அனுமதித்திருக்கலாம். ஆனால், இவை எதையுமே பின்பற்றாமல், தங்களின் அரசியல் சுயலாபங்களுக்காக இவ்வாறு பாடசாலைகளை ஆரம்பிக்கும் முடிவை அறிவித்திருக்கிறார்களா என்ற சந்தேகமும் எம்மத்தியில் எழத்தவறவில்லை.
“எங்களிடம் இருக்கின்ற வசதிகளை வைத்துக்கொண்டு வெறும் 350 பேர்களைத்தான் ஒருநாளைக்குப் பரிசோதிக்க முடியும். இவ்வாறு முடியாத காரணத்தினால்தானே சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆயிரம் கருவிகளை நன்கொடையாகப் பெற்றிருக்கிறீர்கள். இன்னும் 20 ஆயிரம் கருவிகள் வரவிருக்கின்றன. ஆகவே, பரிசோதனைகளை இன்னமும் முழுமையாக அமல்படுத்தாமல், திடுதிப்பென மாணவர்களை ஒன்றுகூட்ட நினைப்பது ஆரோக்கியமானதல்ல.
“இவ்வாறான முன்னேற்பாடற்ற செயற்பாடுகளால் மாணவர்கள் மத்தியில் மாத்திரமன்றி பெற்றோர்கள் மத்தியிலும் பயம் தொற்றியிருக்கிறது. ஒரு பக்கத்தில் பரிசோதனைகளுக்குக் கருவிகள் போதாதென்று சொல்லிக் கருவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமென எழுந்தமானமாக முடிவெடுத்திருக்கிறார்கள். எனவே, எதற்காக இந்த 40 ஆயிரம் பரிசோதனைக் கருவிகளைப் பெற்றுக்கொண்டீர்கள்? இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி, அனைத்து மாணவர்களையும் முழுமையாகப் பரிசோதனைக்குட்படுத்திய பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்கும் அறிவித்தலை விடுப்பதே, தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியமானதாக இருக்கும்.
“சீனாவில் பாடசாலைகளை ஆரம்பிக்கின்றார்கள், யப்பானில் ஆரம்பிக்கின்றார்கள் என்று சொல்பவர்கள் ஒரு விடயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள், முழுமையான பரிசோதனைகளை முடித்த பின்னர்தான் பாடசாலைகளை ஆரம்பிக்க அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், இலங்கையில் அப்படியான ஒரு சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை. ஆகையால்தான், இந்நடவடிக்கையை அரசியல் சுயலாபத்துக்கான நாடகமாகவே பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
“கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகள் பலவற்றிலும் கொரோனா முகாமைத்துவம் சீராகப் பேணப்படுகிறது. அதனடிப்படையில்தான் தம் இயல்பு வாழ்க்கையை அவர்களால் மீளக்கொண்டுவர முடிகிறது. ஆனால், எமது நாட்டில் அப்படியான முகாமைத்துவம் இல்லாமையால், சமூக இடைவெளியைக்கூட முழுமையாகப் பேணமுடிவதில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
“எனவே, நிலைமையின் பாரதுரத்தன்மையை உணர்ந்துகொண்டு, தங்களுக்குக் கிடைத்திருக்கும் 40 ஆயிரம் பரிசோதனைக் கருவிகள் மூலமாக நாட்டிலுள்ள சகல மாணவர்களையும் ஆசிரியர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்தப் பரிசோதனைகளின் முடிவுகளை வெளிப்படையாக அறிவிப்பதனூடாகவே மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் தோன்றியிருக்கும் கொரோனா பயத்தை இல்லாமலாக்க முடியும். அத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்திய பின்னர், பாடசாலைகளை உரிய பாதுகாப்போடு ஆரம்பிப்பதே சிறந்த முகாமைத்துவமாகக் கருதமுடியும்.
“அவ்வாறில்லையெனில் ஒரு குழுவினர் பாடசாலைகளை நடத்துவதாகச் சொல்வார்கள், இன்னுமொரு குழுவினர் பாடசாலைகளை மூடுவதாகச் சொல்வார்கள், இத்தகைய நிலையில் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பநிலையொன்றே தோன்றக்கூடும். ஆகவே, வெறும் அரசியல் சுயலாபங்களுக்காக மாணவர்களின் வாழ்வைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தாமல், இந்தச் சூழ்நிலையில் பரிசோதனைகளை துரிதப்படுத்தி, அதன் முடிவுகளை வெளிப்படையாக அறிவிப்பதனூடாகவே குழப்பங்களுக்கு முடிவுகட்ட முடியும். ஆகவே, அரசாங்கம் இதனைக் கவனத்திற்கொண்டு, நாடு பூராகவும் பரிசோதனை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென பொறுப்புள்ள கல்வி செயற்பாட்டாளர் என்ற ரீதியில் வேண்டிக்கொள்கிறேன்” என, கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார்.

Tags :
comments