கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள்

  • April 27, 2020
  • 252
  • Aroos Samsudeen
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உதவிக்கரம் நீட்டுபவர்களின் வரிசையில் இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கமும் கைகோர்த்துள்ளது. 

இதன்படி, கொரோனா தொற்றுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்ற பொலிஸ் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவில் பணிபுரிகின்ற அதிகாரிகளுக்கான பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றும் செனிடைஸர் உள்ளிட்ட பொருட்கள் குறித்த சங்கத்தினரால் வழங்கிவைக்கப்பட்டன.

கொரோனா என்ற தொற்று நோய், பரவிய சில மாதங்களில், கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரின் உயிரைப்பறித்துக் கொண்டது. பல இலட்சம் பேரை பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தையே உருக்குலைத்துவிட்டது.

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆகவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவால் தனது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நாளாந்த கூலித் தொழிலாளர்களுக்கு தனவந்தர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்ற பொலிஸ் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவில் பணிபுரிகின்ற அதிகாரிகளுக்கான பாதுகாப்பு உடைகள், முகக்கவசம், கையுறைகள் சவர்க்காரம் மற்றும் செனிடைஸர் உள்ளிட்ட பொருட்கள்  பொலிஸ் சிறப்பு அதிரடி படைப் பிரிவு அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்த்ரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரான கருப்பையா ராமகிருஷ்ணன், சங்கத்தின் செயலாளரான சத்துக்க திவாஷன மற்றும் இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சாரங்க பத்திரன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே¸ இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தின் அழைப்புக்கு அமைய இந்தப் பொருட்களை வழங்கிவைப்பதற்காக நிதி உதவி அளித்த வர்த்தகரான தேசமான்ய பேராசிரியர் எச்.டி.ஆர் ப்ரியன்தவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்களும் இவ்வாறான தருணத்தில் முன்வந்து சமூகத்தினதும், ஊடகவியலாளர்களினதும் தேவைகளை நிறைவேற்றுவதில் பொறுப்புடன் செயற்படுவது பாராட்டத்தக்க விடயமாகும் என விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் ஆரம்பித்த நாள் முதல் அதனை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் தனது பூரண பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி வருகின்ற பேராசிரியர் எச்.டி.ஆர் ப்ரியன்த கருத்து தெரிவிக்கையில்,

“ஒரு வர்த்தகராக இவ்வாறான இக்கட்டான தருணத்தில் என்னால் முடிந்தளவு உதவிகளை செய்ய கிடைத்தமையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், பாதுகாப்பு தரப்பினருக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிவைக்க என்னை அழைத்த இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்துக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்தினால் பாதுகாப்பு உடைகள், முகக்கவசம், கையுறைகள் மற்றும் செனிடைஸர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வைப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஓர் அங்கமாக தம்முடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை பொருட்படுத்தாமல் கொழும்பில் தங்கியிருந்து செய்திச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு இந்த பாதுகாப்பு உடைகளை வழங்கிவைப்பதற்கான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Tags :
comments