பெரும் சிக்கலில் வேட்புமனுக்கள்! – ஜூன் 20 தேர்தல் நடக்காது

  • May 3, 2020
  • 856
  • Aroos Samsudeen
பெரும் சிக்கலில் வேட்புமனுக்கள்!  – ஜூன் 20 தேர்தல் நடக்காது

ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் சட்ட ரீதியான வலு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 20 ஆம் திகதி பெரும்பாலும் தேர்தல் நடக்காது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையில் தேர்தல்கள் செயலகத்தில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டாம் என்று இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான கட்சி ஆகியன மாத்திரமே தேர்தல் பிற்போடப்படுவதை எதிர்த்தன. திகதி அறிவிக்கப்படாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ஏனைய கட்சிகள் வலியுறுத்தின.

மேலும் நாளைமறுதினம் 4ஆம் திகதி வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அது வழங்கப்படாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

வேட்பு மனு விவகாரம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் மாதம் 12ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதி வரை தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனாத் தாக்கம் காரணமாக மார்ச் மாதம் 16ஆம் திகதி விடுமுறை என்று அரசு அறிவித்திருந்தது. அன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்திருந்தது. மார்ச் 17ஆம், 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்றது. இந்தத் திகதிகளிலேயே நாடு முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

ஆனால், இந்த மூன்று திகதிகளும் விசேட பொதுவிடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரால் மார்ச் 17ஆம் திகதியிடப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தற்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தெரியவந்துள்ளது எனத் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

விடுமுறை அறிவிக்கப்பட்ட நாள்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் வலுத் தொடர்பில் சட்டரீதியான சிக்கல் எழுந்துள்ளது. இந்த மூன்று நாள்களிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும், இதன் காரணமாக ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என்றும் தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

தேர்தலை நடத்துவதானால்
சட்டங்களில் திருத்தம் தேவை

“தற்போதுள்ள நிலைமை சீராகுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றார்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலை இனி நடத்துவதானால் தேர்தல் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தேர்தலை நடத்த முடியாது.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ‘சுடர் ஒளி’யிடம் தெரிவித்ததாவது:-

“தற்போதுள்ள நடைமுறையில் தேர்தலை நடத்த முடியாது. பல்வேறு நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதனைச் செய்வதற்கு தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஏற்கனவே அரசமைப்பு ரீதியான சிக்கல்கள் இருக்கின்றது. இப்போது நீங்கள் (மஹிந்த) புதுப் பிரச்சினைகளைச் சொல்லியுள்ளீர்கள். சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். அப்படியானால் அரசமைப்பின் 33 ஆவது பிரிவுக்கு அமைவாக உங்களுக்கு தரப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தல் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறுங்கள் என்று நான் தெரிவித்தேன்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நாங்கள் சொல்ல முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நீங்கள் சொல்ல முடியாதுதான். ஆனால், சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆலோசனையை ஜனாதிபதிக்கு முன்வைக்க அதிகாரம் உள்ளது. அதனைத்தான் சுட்டிக்காட்டுகின்றேன் என்று குறிப்பிட்டேன்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் ஆராய்வதாக தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்” – என்றார்.

– ‘சுடர் ஒளி’ மாலைப் பதிப்பு
(02.05.2020)

Tags :
comments