ரணில் அணி திடீர் ‘பல்டி’ – மஹிந்தவின் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு

  • May 4, 2020
  • 321
  • Aroos Samsudeen
ரணில் அணி திடீர் ‘பல்டி’  – மஹிந்தவின் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தைப் புறக்கணிப்பதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில்கூட கட்சி அரசியலை முன்னெடுப்பதற்கு ராஜபக்ச தரப்பு முயற்சிப்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஐ.தே.க. விடுத்துள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரமானது தேசிய பிரச்சினையாகும். இதன்காரணமாகவே கட்சி அரசியலை விடுத்து, பிரதமரின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுத்திருந்தது. ஆனால், இந்தக் கலந்துரையாடலுக்கு கலைக்கப்பட்ட எட்டாவது நாடாளுமன்றத்தின் முன்னாள் எம்.பிக்கள் மட்டுமன்றி அனைத்து முன்னாள் எம்.பிக்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கலந்துரையாடல் பயனுள்ளதாக அமையாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தேசியப் பிரச்சினையின்போது கட்சி அரசியலை நடத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தைப் புறக்கணித்தாலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அரசமைப்பை மீறாத வகையிலேயே பணிகள் இடம்பெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

(‘உதயன்’ – ‘சுடர் ஒளி’)

Tags :
comments