புலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை – மங்கள

  • May 16, 2020
  • 307
  • Aroos Samsudeen
புலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை – மங்கள
– நவமணி பத்திரிகை –
1990 ஆம் ஆண்டு புலிப் பயங்கரவாதிகளினால் துரத்தியடிக்கப்பட்டு 30 வருடங்களாக அகதி முகாம்களில்  வாழ்ந்த மக்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு நான் இந்த நிதியை வழங்கியிருப்பது தனக்கு பெருமை தருகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்கு நிதி வழங்கியது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று 5 மணி நேரத்திற்கு மேலாக இரகசியப் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
புத்தளத்திலிருந்து சிலாபத்துறைக்கு தேர்தல் தினத்தன்று இ.போ.ச. பஸ்களில் 12,500 க்கு மேற்பட்ட வாக்காளர்களை அழைத்துச் சென்றது தொடர்பாகவே முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர விசாரிக்கப்பட்டார். 5 மணி நேரமாக மங்கள சமரவீரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
தேர்தல் தினத்தன்று புத்தளத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அழைத்துச் செல்வதற்காக 85 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டது குறித்தே விசாரிக்கப்பட்டுள்ளது.
அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரிலேயே இந்த போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான நிதியும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
5 மணித்தியாலயமும்; 15 நிமிடமும் சாட்சியமளித்துவிட்டு, வெளியே வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, தனது விசாரணை பற்றித் தெரிவிக்கையில், அக்மீமன தயாரத்ன தேரர் செய்திருந்த ஒரு முறைப்பாட்டினை அடுத்தே தான் விசாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், 1990 ஆம் ஆண்டு எல்ரீரீஈ பயங்கரவாதிகளினால் துரத்தியடிக்கப்பட்டு 30
வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு நான் இந்த  நிதியை வழங்கியிருப்பது தனக்கு பெருமை தருகிறது. அதனையிட்டு நான் திருப்தி அடைகின்றேன். வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது. என்னை இரகசியப் பொலிஸார் மிகச் சிறப்பாகக் கவனித்தார்கள்.
இது தொடராக மீண்டும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசாரணை இருப்பதாகத் தெரிவித்தார்கள்.
ராஜபக்ஷ ஆட்சியாளர்களுடைய அரசியல் பழிவாங்கல் இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ராஜபக்ஷ அரசின் போது நான் மூன்று முறை இந்த இடத்துக்கு அழைக்க ப்பட்டேன்.
ராஜபக்ஷாக்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். என்னை அடித்து கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் இந்த ராஜபக்ஷ அரசுக்கு முடிவு கட்ட எல்லோரும் ஒன்றுபட்டு அணி திரள வேண்டும் என்றும் மங்கள சமரவீர ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
Tags :
comments