நான் கடைசியாக போட்டியிடும், தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் – பௌசி உருக்கம்

  • June 26, 2020
  • 120
  • Aroos Samsudeen
நான் கடைசியாக போட்டியிடும், தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் – பௌசி உருக்கம்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடாவிட்டால், கொழும்பு மாவட்டத்தில் மற்றொரு முஸ்லிமுக்கு  கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதாலே தேசியப்பட்டியல் ஊடாக போட்டியிடுமாறு கேட்கப்பட்ட போதும் நான் இத்தேர்தலில் போட்டியிட முன்வந்தேன் என  மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி மூலம் கொழும்பு மாவட்டத்திற்கு போட்டியிடுமாறு வருமான   ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.

ஏ.எச்.எம். பௌசி நவமணி எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு,

கேள்வி-  உங்களுடைய தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதா?

பதில்-  இன்னும்  ஆரம்பிக்கப்படவில்லை. என்னைப்பொறுத்தவரை கொழும்பு மாவட்டத்தில் எனக்கு பெரிய விளம்பரம் தேவைப்படாது. மூத்த  பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாவட்டத்தில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தவர் என்ற வகையில் மக்கள் என்னை பார்க்கின்றார்கள். எல்லா மக்களையும் சகோதரர்கள் போன்று நான் பார்த்து வருவதாலும் என்றும் துவேசம் இல்லாது செயற்படுகின்றமையால் மக்கள் ஆதரவு எனக்கு கிடைக்கின்றது.  எனது தேர்தல் பிரசார பணிகளை நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளேன். மருதானையில் இப்போதே அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மாலை நேரங்களில் தோட்டம் தோட்டமாக சென்று சிறிய மட்டத்தில் மக்களை சந்தித்து வருகின்றேன்.

கேள்வி- நீங்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன?

பதில்-  நான் 45 வருடங்களாக அக்கட்சியிலிருந்து சிரேஷ்ட பிரதித்தலைவராகவும் பதவி வகித்தேன். அக்கட்சியின் வளச்சிக்கு நான் பெரும் பங்களிப்பு செய்தேன். கட்சி கடைப்பிடித்த இனவாத துவேசப்போக்குக்காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டேன்.  தொடர்ந்து அக்கட்சியில் இருப்பதற்கு  மனச்சாட்சி இடமளிக்காத காரணத்தாலேயே நான்  வகித்த பெரும் பதவிகளையெல்லாம்  தியாகம் செய்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறினேன். அக்கட்சியில் நான் இருந்திருந்ததால் பெரும் அமைச்சுப்பதவிகள் வகித்திருக்கலாம்.  ஆனால் மனச்சாட்சி உள்ள ஒருவனுக்கு பதவிகளுக்காக அப்படி இருக்க முடியாதென்பதனாலே அதிலிருந்து விலகி ஐ.தே.க வில் இணைந்தேன்.

கேள்வி- உங்கள் அரசியல் வாழ்க்கை எப்போது ஆரம்பித்தது.

பதில்-  1960 ஜனவரி மாதம்  கொழும்பு மாநகர சபைக்கு தெரிவானது முதல்  நான் அரசியலில் ஈடுபட்டேன் கொழும்பு பிரதி மேயராக, மேயராக பணிபுரிந்து ஐக்கிய ே தசியக்கட்சியிலிருந்து வெளியேறியதன் பின்பு கூட ஒரு முறை  மேயராகவும்  பிரதி மேயராகவும் வெற்றி பெற்ற கணேசலிங்கம், ரத்னசிறி ராஜபக்ஷ, ஆகியோரை விட கூடுதலான வாக்குகளைப்பெற்ற போதும் எனக்கு மேயராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  மாகாணசபை ஏற்படுத்தப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட்டு  மாகாண அமைச்சராக தெரிவானேன்.  1994 இல்  நடைபெற்று பொதுத் தேர்ததலில் சந்திரிக்கா அம்மையாருடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றேன். போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர், சுகாதார அமைச்சர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், சுற்றாடல் அமைச்சர் உட்பட பல பதவிகளை வகித்து நாட்டுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை புரிந்துள்ளேன். எனக்கு பொறுப்பு தந்த சகல அமைச்சுகள் மூலமும் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றினேன் என்ற மனத் திருப்தி எனக்கிருக்கின்றது.  மக்களது அமோக ஆதரவு எனக்கு கிடைத்தது.

 கேள்வி- ஐக்கிய மக்கள் சக்தியில் உங்கள் பங்களிப்பு என்ன? 

பதில்-  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேறி ஐ.தே.கவில் இணைந்தேன். ஐ.தே.க.வுக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. ஐ.தே.க. செயற்குழு  எடுத்த தீர்மானத்தின் படியே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி என்பது நாட்டில் சிங்கள, தமிழ் , முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் இணைந்தே உருவாகி இருக்கின்றன.  அதன் தலைவரான சஜித் பிரேமதாசவின் கரத்தை பலப்படுத்துவதற்காக  நான் எனது முழுமையான ஆதரவை அவருக்கு  வழங்கி வருகின்றேன்.

 கேள்வி- இத்தேர்தலில் போட்டியிடும் நீங்கள் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன? 

பதில்- நான் கடைசியாக  போட்டியிடும் தேர்தல் இதுவாகவிருக்கும்  கடந்த காலங்களில் கொழும்பு மாவட்ட மக்களின்  நலன்களை மேம்படுத்த நான் பணிபுரிந்தது போன்று இம்முறையும் மக்களின்  குறைபாடுகளை  தீர்ப்பதற்கு இரவு பகலாக  பாடுபடுவேன் என்பதனை   உறுதியாகயாக  தெரிவிக்கின்றேன்.  வழமை போன்று எனது அலுவலகமும் எனது வீடும் மக்களுக்காக  24 மணி நேரமும் திறந்திருக்கும் என்னை சந்திக்க வரும் எவருக்கும் நான்  கட்சி, இனம், மதம் பார்த்து செயற்படுவதில்லை எல்லோரையும் எனது சகோதரர்களாகவே கருதுகின்றேன்.  இத்தேர்தலில் மக்கள் எனக்கு  இதற்கு முன் அளித்த ஆதரவைப்போன்று நான் நிறைவேற்ற ஆசைப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஆணையை தருவார்கள் என எதிர்ப்பார்க்கின்றேன்.

 கேள்வி-  கொழும்பு மாவட்ட முஸ்லிம்களது கல்வி மேம்பாட்டுக்கு நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

பதில் – கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி மட்டம் ஒரு காலத்தில் மிக மோசமாக இருந்தது.  இன்று  அந்த நிலைமை மாறி வருகின்றது. அரசாங்க உதவிகளை பெற்று மட்டுமன்றி எனக்கிருக்கின்ற தனிப்பட்ட செல்வாக்குகளை பயன்படுத்தி தனவந்தர்கள், பல்வேறு அமைப்புக்களின் உதவிகளைப்பெற்று  கொழும்பில் உள்ள கைரியா மகளிர் கல்லூரி ,பாத்திமா மகளிர் கல்லூரி , ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, தாருஸ்ஸலாம் கல்லூரி, கொழும்பு சாஹிரா கல்லூரி, அல்ஹிதாயா கல்லூரிகளுக்கு பல மாடிக்கட்டடடங்களை என்னால்  பெற்றுக்கொடுக்க முடிந்தது. எனது நண்பரும் பிரபல மாணிக்கக் கல்  வியாபாரியுமான சாம்  ரிபாய் ஹாஜியாரும் பல பாடசாலைகளுக்கும் உதவினார்கள். இலங்கை மேமன் சமூகமும் உதவியிருக்கின்றது. எனது சொந்தப்பணத்தால் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 3 மாடிக்கட்டடமும் அல்ஹிதாயா பாடசாலைக்கு பள்ளிவாசல் ஒன்றையும் நிர்மாணித்து கொடுத்துள்ளேன். கொழும்பு சாஹிராக்கல்லூரிக்கு  நீச்சல் தடாகம் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கினேன்.  இது தவிர கல்வி மேம்பாட்டுக்கு பல்வேறு வகையில் உதவியிருக்கின்றேன். எதிர்காலத்திலும் நான் இருக்கும் வரை இந்த சமூகத்தை கைதூக்கிவிடுவதற்கு  உதவுவேன்.

கேள்வி- முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் ஐ.மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கும்  உங்களுக்கும்  இடையிலாள உறவு எப்படியுள்ளது. 

பதில்-  என்மீது அவர் பெரும் நம்பிக்கையையும் கௌரவத்தையும் வைத்திருக்கிறார். அவருடைய தந்தையுடன்  நான்  மோதியது பற்றியும்  அவருக்கு பாடம் புகட்டியது பற்றியும் அவருக்கு தெரியும். அதனால் அவர் என் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். இனவாத போக்கு இல்லாத  ஓர் எளிமையான அரசியல்வாதி சஜித் நாட்டின் இன்றை சவால்களை  எதிர்கொள்ள அவர் போன்ற இளைஞர் தலைவர்களே  தேவைப்படுகின்றனர்.  இனவாத போக்கு இல்லாத எல்லா மக்கள் பிரச்சினைகளையும் உணர்ந்தவராக அவர் இருக்கின்றார் முதன் முறையாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தம் சகாக்கள் குத்து வெட்டுகளுக்கு மத்தியில் 56 இலட்சம் வாக்குகளை பெற்றார் என்பது ஒரு சிறிய விடயமல்ல. மக்களது ஆதரவு  அவருக்கு நிறைய இருக்கின்றது.  எனவே இத்தேர்தலில் அனைவரும் இணைந்து அவரது கரங்களை பலப்படுத்த வேண்டும் என வேண்டு கோள் விடுக்கின்றேன். தேர்தலில் எனது இலக்கம் 04 . கட்சியின் சின்னம் தொலைபேசியாகும். கட்சிக்கு வாக்களித்து எனக்கும் விருப்பு வாக்குகளை அளித்து எனது கட்சியை ஆட்சிபீடம் ஏற்ற முன்வருமாறு சகலரையும் கேட்கின்றேன்.

நேர்காணல்- நஸ்மின்

Tags :
comments