நிந்தவூரில் மக்கள் ஆதரவை இழந்துவரும் பைசால் காசிம், கோலோச்ச தயாராகும் தாஹிர்…

  • June 27, 2020
  • 206
  • Aroos Samsudeen
நிந்தவூரில் மக்கள் ஆதரவை இழந்துவரும் பைசால் காசிம், கோலோச்ச தயாராகும் தாஹிர்…

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை)

” கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாகி விட முடியாது “. உண்மையான வேட்டைக்காரன் களத்துக்கு வந்தால், நடித்துக்கொண்டிருந்த வேட்டைக்காரர்கள் வெளியேறியாக வேண்டும். நிந்தவூரின் நிலைமை அப்படித் தான் உள்ளது. வேட்பாளர் தாஹிர் களத்துக்கு வந்ததும், நிந்தவூர் மக்கள் மு.இ.அமைச்சர் பைசால் காசிமை புறக்கணிப்பதை சாதாரணமாக பார்க்க கூடியதாக உள்ளது.

பிரதேச சபை தேர்தல்..?

மு.காவில் இருந்து வெளியேறிய பலருள்ளனர். அதில் அதிகமானவர்களால் மு.காவை எதிர்த்து வெற்றியீட்ட முடியவில்லை என்பது தான் வரலாறு. மு.காவை விட்டு வெளியேறியதும், மு.காவை எதிர்த்து வெற்றிகொண்ட ஒருவராக வேட்பாளர் தாஹிரை குறிப்பிடலாம். இவருக்கு மக்களை தன் பக்கம் ஈர்க்க, மு.காவில் நிந்தவூர் தவிசாளர் என்ற அதிகாரத்தை தவிர, வேறு பதவிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. இவரது ஊரான நிந்தவூரில் மு.காவானது பைசால் காசிமுக்கு இராஜாங்க அமைச்சு எனும் பலமிக்க அதிகாரத்தையே வழங்கி வைத்திருந்தது. இவ்விரு பதவிகளுக்குமிடையில் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வேறுபாடுகளுள்ளன என்பது யாவரும் ஏற்கக் கூடிய ஒரு விடயம்.

மு.இ.அமைச்சர் பைசால் காசிம் சாதாரண ஒருவருமல்ல. கடந்த முறை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மு.காவின் சார்பாக போட்டியிட்ட இவர், ஏனைய வேட்பாளர்களை விட கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இவ்வாறு பலமான ஒருவர் மு.கா சார்பாக நிந்தவூரில் இருந்த நிலையில், மு.காவிலிருந்து வெளியேறிய தவிசாளர் தாஹிர் மு.காவை எதிர்த்து போட்டியிட்டு சபையையும் கைப்பற்றியிருந்தார். தான் போட்டியிட்டிருந்த வட்டாரத்தை பெரும் எண்ணிக்கையான வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியுமிருந்தார். இது சாதாரண பலமல்ல..? இவ் விடயம் வேட்பாளர் தாஹிரின் மக்கள் செல்வாக்கை எடுத்துக்காட்ட போதுமான சான்றாகும். இத் தேர்தலில் நிந்தவூர் மக்களது தீர்மானம் எவ்வாறு அமையும் என்பதையும் இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

பிரதி தவிசாளர் சுலைமான்…?

கடந்த நிந்தவூர் பிரதேச சபை தேர்தலின் போது ஐ.தே.கவோடு இணைந்து போட்டியிட்ட மு.காவும், அ.இ.ம.காவும் சம அளவான ஆசனத்தையே பெற்றிருந்தன. ஆட்சியை தீர்மானிக்கும் ஆசனமாக சு.கவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுலைமானின் ஆசனமே இருந்தது. இவர் எப் பக்கம் செல்வார் என்பது பலத்த எதிர்பார்ப்பை பெற்றிருந்த நிலையில், சுலைமான் வேட்பாளர் தாஹிரையே ஆதரித்திருந்தார். அன்று சுலைமான் மு.காவினருக்கு ஒத்துழைத்திருந்தால் மு.காவானது தவிசாளரை கூட வழங்க தயாராக இருந்தது. தனக்கு வரவிருந்த பெரும் பதவியையும், பெரும் பொருளாதார பலத்தையும், அதிகாரத்தையும் தன்னகத்தை வைத்திருந்த மு.இ.அமைச்சர் பைசால் காசிமையும் புறந்தள்ளி, சுலைமான் வேட்பாளர் தாஹிரை ஆதரித்ததேன்..?
இதுவே வேட்பாளர் தாஹிரின் பலம். மக்கள் பலமுள்ளவரிடம் தானே அரசியல் பிரதிநிதிகள் சாய்வர். அதுவே அவர்களது எதிர்கால அரசியலுக்கு உகந்ததல்லவா?

சட்டத்தரணி றியாஸ் ஆதம்..?

கடந்த பிரதேச சபை தேர்தலில் நிந்தவூர் அரசியல் மிகவும் சூடு பிடித்திருந்தது. நிந்தவூரிலுள்ள வட்டாரங்களில் மிக முக்கியமானதொரு வட்டாரமே வன்னியார் வட்டாரமாகும். அவ்வட்டாரத்திலேயே மு.இ.அமைச்சர் பைசால் காசிம், மு.இ.அ ஹஸனலி, மு.பா.உ முஸ்தபா (மரணித்துவிட்டார் ), சு.க அமைப்பாளர் ஷஹீல் என பலமான அரசியல் வாதிகளையும், அவர்களது குடும்பங்களையும் கொண்ட வட்டாரம். இந்த வட்டாரத்தில் மு.கா சார்பாக சட்டத்தரணி றியாஸ் ஆதமும், அ.இ.ம.கா சார்பாக பொறியியலாளர் வாஹிர் ஹுஸைனும் களமிறங்கியிருந்தார்கள். வேட்பாளர்களை சொல்லும் போதே அந்த வட்டாரத்தின் பலத்தை விளங்க முடியுமானதாகவுள்ளதல்லவா?

இந்த வட்டாரத்தை மு.காவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிகொண்ட சட்டத்தரணி றியாஸ் ஆதம் இன்று தவிசாளர் தாஹிருடன் இணைந்துள்ளார். இவர் ஏன் மு.இ.அமைச்சரான பெரும் பொருளாதார பலமுள்ள பைசால் காசிமை விட்டு தவிசாளர் தாஹிரை ஆதரிக்க வேண்டும். இவர் தவிசாளர் தாஹிரை பகிரங்கமாக ஆதரிப்பதால், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும். இவர் ஏன் தன் பதவியை இழந்து தவிசாளர் தாஹிரை ஆதரிக்க வேண்டும். இதுவே தவிசாளர் தாஹிரின் பலம். யாராவது தோற்கும் குதிரைக்கு பந்தயம் கட்டுவார்களா? இவைகள் தவிசாளர் தாஹிரின் பலத்தை வெளிக்காட்ட பொருத்தமான சான்றுகள்.

05 விகிதாசார பட்டியல் உறுப்பினர்கள்..?

அண்மையில் அ.இ.ம.கா தலைவர் கலந்து கொண்டிருந்த நிந்தவூர் பிரச்சார கூட்டத்தில் வைத்து, கடந்த பிரதேச சபை தேர்தலில் மு.காவின் விகிதாசார பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த 06 நபர்கள் தவிசாளர் தாஹிருடன் இணைந்திருந்தனர். அவர்கள் :

1.தொழிலாளர் ஆதம் அலி
2. நஜிமுதீன் மாஸ்டர்
3. ராசாத்தம்பி
4. முஹம்மட் ரபீக்
5. ஆமினா உம்மா

விகிதாசார பட்டியலில் பெயரிடப்படுபவர்கள் ஒரு கட்சியின் ஊர்மட்ட அரசியல் பிரதிநிதிகளாக இருப்பர். இவர்களில் ஐவர் கட்சி மாறிவிட்டார்கள் என்ற செய்தியை விட நிந்தவூரில் பைசால் காசிமின் வீழ்ச்சியை அறியச்செய்ய வேறேதும் தேவையில்லை.

தவிசாளர் தாஹிருடன் இணைந்துள்ள இன்னும் சில நிந்தவூர் முக்கியஸ்தர்களை கோடிட்டு காட்ட முடியும்.

1. தொழிலாளர் எம்.சி.எம் றிபாய்
2. மான்குட்டி சாச்சா
3. எம். அன்வர் சதாத் டைலர்
4. முஹம்மட் ஜெமீல்
5. ஏ. அன்வர் சதாத் ரைவர் ( மு.கா வின்மீராநகர் வட்டார வேட்பாளர் மஃரூப் மெளலவி அவர்களின் தம்பி)

இவர்கள் தவிர்ந்து இன்னும் பல முக்கியமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னிலை அரசியல் செய்பாட்டாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, வேட்பாளர் அஷ்ரப் தாஹிரின் வெற்றிக்காக உழைக்க முன் வந்துள்ளனர்.

இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை வைத்து சிந்திக்கும் ஒருவரால் தவிசாளர் தாஹிர் பெரும் மக்கள் பலத்துடன் இருப்பதையும், பைசால் காசிம் பெரும் வீழ்ச்சியில் இருப்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Tags :
comments