ஐ.சி.சி இன் தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோஹர் இராஜினாமா

  • July 2, 2020
  • 67
  • Aroos Samsudeen
ஐ.சி.சி இன் தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோஹர் இராஜினாமா

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோஹர் இராஜினாமா செய்வதாக இன்று (01) அறிவித்துள்ளார். இந்நிலையில், புதிய தலைவரை தெரிவுசெய்யும் வரையில், இடைக்கால தலைவராக, இதுவரை உபதலைவராக செயற்பட்டுவந்த இம்ரான் கவாஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி கிரிக்கெட் சபை மற்றும் ஊழியர்கள் சார்பில், சஷாங் மனோஹர் ஐ.சி.சி இன் தலைவர் என்ற ரீதியில் கிரிக்கெட்டுக்காக செய்த அர்ப்பணிப்புக்காக நன்றிகளை தெரிவிப்பதாக ஐ.சி.சி இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மனு சவ்னி குறிப்பிட்டார்.

சஷாங் மனோஹர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒருமனதாக ஐ.சி.சி இன் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதுடன், 2018 ஆம் ஆண்டும் இரண்டாவது முறையாக ஒருமனதாக ஐ.சி.சி இன் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

இவரது தலைமைத்துவத்தின் கீழ், பலமான எதிர்ப்பு சக்தியாக இந்திய கிரிக்கெட் சபை இருந்த போதும், ஐ.சி.சி இன் நிர்வாக அமைப்பு மற்றும்  நிதி பங்கிட்டுமுறையும் மாற்றம் பெற்றது.

சஷாங் மனோஹர் தொடர்பில், இடைக்கால தலைவரான இம்ரான் கவாஜா குறிப்பிடுகையில், “சஷாங் மனோஹர் கிரிக்கெட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கு உள்ளார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். அவர் கிரிக்கெட்டுக்கு வழங்கியது மிகப்பெரிய பங்களிப்பு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை” என்றார்.

சஷாங் மனோஹரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரின் இடத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக செயற்பட்டு வரும், கொலின் க்ரேவ்ஸ் (Colin Graves) நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. காரணம், இவர் தனது இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் பதவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது ஐ.சி.சி இன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இம்ரான் கவாஜா, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவராக செயற்பட்ட க்ரிஸ் நென்ஷானி (Chris Nenzani) ஆகியோரும் ஐ.சி.சி இன் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.சி.சி இன் சட்டக்கோவையின் படி, ஐ.சி.சி இன் தற்போதைய இயக்குனர்களில் ஒருவர் அல்லது முன்னாள் இயக்குனர் (அவர் ஐ.சி.சி இன் தலைவர் பதவியை பெறாமல் ஆறு வருடங்கள் அல்லது அதற்கு மேல் செயற்பட்டிருக்க வேண்டும்) ஒருவரை தெரிவுசெய்ய முடியும். அத்துடன், குறித்த நபரை அந்நாட்டு கிரிக்கெட் சபையும் பரிந்துரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
comments