முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து

  • July 19, 2020
  • 171
  • Aroos Samsudeen
முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து

(எஸ்.எம்.அறூஸ்)

எமது கட்சியின் கொள்கைகளையும் எதிர்கால செயற்பாடுகளையும் மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் இப்பொதுத் தேர்தலில் ஓட்டகச் சின்னத்தில் சுயேட்சை அணியாக போட்டியிடுகின்றோம் என முதன்மை வேட்பாளர் எம்.வை.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 6 இல் போட்டியிடும் மக்கள் ஜனநாயக முன்னணியின் கொள்கைப் பிரகடனமும் ஊடகவியலாளர் மாநாடும் அக்கறைப்பற்றில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு பேசும்போதே முதன்மை வேட்பாளரும், சுயேட்சைக்குழு 6 இன் தலைவருமான எம்.வை.ஏ.அஸீஸ் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், பல்லின மக்கள் வாழும் இலங்கை நாட்டில் ஒவ்வொரு பிரஜையும் இனவாத, மதவாத பேதங்களுக்கு அப்பால் சகல உரிமைகளையும் பெற்று பாதுகாப்புடன் கௌரவமாக வாழ வழி செய்வது எமது கட்சியின் பிரதான இலக்காகும். எந்தவொரு தனிமனிதனோ அல்லது சமூகமோ,எக்காரணத்திற்காகவும் இம்சிக்கப்படக்கூடாது.

நமது முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி கட்சிகளும் தலைவர்களும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் அவர்கள் எவருமே சமூகத்தின் விடிவுக்காகவும், அபிலாசைகளுக்காகவும் காத்திரமான எந்தப் பங்களிப்பினையும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

அந்த வகையில் சமூக சிந்தனை கொண்ட நன்நோக்கத்திற்காகவும், விடிவுக்காகவும் தங்களாலான அனைத்தையும் செய்வதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம். ஆகவே,எங்களது இச்செயற்பாடுகளுக்கு புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூக ஆர்வளர்கள், உலமாக்கல், பொது நிறுவனங்களின் தலைவர்கள், இளைஞர்கள்,யுவதிகள், தாய்மார்கள் புரண ஆதரவினை வழங்க வேண்டும். அதற்காக வாக்கு எனும் அங்கீகாரத்தை கோரிநிற்கின்றோம்.

இலங்கையில் இருக்கின்ற மாவட்டங்ளில் அம்பாரை மாவட்டம் மாத்திரமே முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தை நாம் ஒரு போதும் தோற்கக்கூடாது. சுயநல அரசியலுக்காக முஸ்லிம் கட்சிகள் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கின்றது.

மாவட்டத்தை வெல்லவேண்டும் என்ற கருத்தில் நாமும் உடன்படுகின்றோம்.
டெலிபோன் என்றும், குதிரை என்றும், மயில் என்றும், மொட்டு என்றும், யானை என்றும் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தல் கேட்பதால் எவ்வாறு மாவட்டத்தை வென்று 4 பிரதிநிதித்துவங்களை வெற்றி கொள்ளவது இது நடக்காத காரியம்.

அரசியல் வன்முறைகளை களைந்து இளைஞர்களை நேரான பாதையில் வழிநடாத்தி அவர்களை சமூகத்தில் ஆளுமையுள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும் என்பதில் மக்கள் ஜனநாயக முன்னணி குறியாக உள்ளது.இலங்கையின் அரசியலமைப்பு சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக ஒரு தேசிய அரசியல் கட்சியாக மக்கள் ஜனநாயக முன்னணி செயற்பட்டுக் கொண்டு வருகின்றது. இக்கட்சியை எதிர்காலத்தில் ஓர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆக்குவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அக்கறைப்பற்றில் மாத்திரம் எங்களுக்கு சுமார் 5000 ஆயிரம் வாக்குகள் அளிக்கப்படலாம் என உறுதியாக நம்புகின்றோம். வெற்றி தோல்வி என்பதைவிட மக்களது அங்கீகாரம் என்பதுதான் முக்கியமாகும். மக்கள் ஜனநாயக முன்னணி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 வருங்களாக செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் வேட்பாளர்கள் ஏ.எம்.இர்சாத், அமீன் ஆகியோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Tags :
comments