முஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் – வேட்பாளர் இர்சாத் கருத்து

  • July 21, 2020
  • 206
  • Aroos Samsudeen
முஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் – வேட்பாளர் இர்சாத் கருத்து

(எஸ்.எம்.அறூஸ்)

முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றபோதிலும் அதற்கான நிரந்தரமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான எந்த முயற்சிகளையும் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் எடுக்கவில்லை என்று மக்கள் ஜனநாயக முன்னணி சார்பில் சுயேட்சைக்குழு 6 இல் ஓட்டகச்சின்னத்தில் போட்டியிடும் ஏ.எம்.இர்சாத் தெரிவித்தார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 6 இல் போட்டியிடும் மக்கள் ஜனநாயக முன்னணியின் கொள்கைப் பிரகடனமும் ஊடகவியலாளர் மாநாடும் அக்கறைப்பற்றில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு பேசும்போதே முதலாம் இலக்க வேட்பாளர் ஏ.எம்.இர்சாத் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் இருபது இலட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தமது உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என்று முஸ்லிம் கட்சிகளுக்கு தொடர்ச்சியாக நமது மக்கள் வாக்களித்து வருகின்ற போதிலும் இதுவரைக்கும் நிரந்தரமான ஒரு தீர்வை அந்தக்கட்சிகளால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

தாமும், தமது குடும்பமும் சுகபோகமாக வாழ வேண்டும் என்பதற்காக உரிமைகளைப் பற்றிப்பேசாமல் தங்களை வளர்த்துக்கொள்வதற்கான முதலீடுகளில் ஈடுபடுகின்றனர். தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து உணர்ச்சி அரசியலை மக்கள் மத்தியில் விதைக்க முற்படுகின்றனர். அது மட்டுமல்ல மரணிக்கும் வரைக்கும் ஒரு கூட்டம்தான் அரசியல் அதிகாரத்திற்குள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர்.

நமது சமூகத்திற்குள் தலைமை தாங்கக்கூடிய ஆளுமைமிக்க எத்தனையோ இளைஞர்கள் இருக்கின்ற போதிலும் அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்க அரசியல் தலைமைகள் மறுக்கின்றனர். சுயநலமாக செயற்படும் இவ்வாறான அரசியல் தலைமைகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை காப்பாற்ற வேண்டிய தேவை நமக்குள்ளது.

வன்முறை அரசியலை நமக்குள் இருந்து இல்லாமல் செய்து சகல அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களை சொல்வதற்கான நிலைமையைத் தோற்றுவிக்க வேண்டும். மக்கள் ஜனநாயக முன்னணி கடந்த 15 வருடங்களாக அம்பாரை மாவட்டத்தை தளமாகக் கொண்டு தேசிய ரீதியாக அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அம்பாரை மாவட்டம் என்பது முஸ்லிம்களின் தாயகமாகும். அந்த மாவட்டத்தை வெற்றி கொள்வதற்காக முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டிய காலத்தில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தல் கேட்கின்றனர். இது எதனைக் காட்டுகின்றது. சுயநல அரசியலுக்கான அஜந்தாவை வைத்துவிட்டு சமூகத்திற்கான பிரதிநிதித்தவத்திற்கு ஒன்றுபடமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது. இன்று வந்து மேடைகளில் ஒருவரையொருவர் வசைபாடுகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சிறுபான்மையினராக வாழும் நாங்கள் ஒன்றுபட்டு செயற்படாமல் போனால் உரிமைகளை இழந்து அடிமைச்சமூகமாக வாழுகின்ற நிலை ஏற்படலாம்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பதைவிட முஸ்லிம் சமூகம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதே எங்களது கட்சியின் நிலைப்பாடாகும். நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் நமது சமூகத்தை படுகுழியில் தள்ளுவதற்கான சூழ்நிலைக்கு இட்டுச்செல்லுமாயின் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பணத்திற்காகவும், பதவிக்காகவும், பட்டத்திற்காகவும் மக்கள் ஜனநாய முன்னணி சமூகத்தை எந்த சந்தர்ப்பத்திலும் காட்டிக்கொடுக்காது என்பதையும் உறுதியாகக் கூறுகின்றேன் என்றார்.

Tags :
comments