என்னை பயமுறுத்த முடியாது – ஜனாதிபதி கோட்டாப

  • August 2, 2020
  • 138
  • Aroos Samsudeen
என்னை பயமுறுத்த முடியாது – ஜனாதிபதி கோட்டாப
எவ்வித அடிப்படையுமின்றி துறைமுகத்தை அண்மித்து நெருக்கடியை உருவாக்குவதற்கு ஒரு தரப்பினர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
அவ்வாறானவர்களால் தம்மை பயமுறுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன ஊடாக பொதுத்தேர்தலில் போட்டியிடும் பதுளை மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்த பதுளைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, மஹியங்கனை மகாவலி மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றினார்.
எவ்விதத் தடைகள் வந்தாலும் வறுமையை ஒழிப்பதற்கான பயணத்தை நிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
நாட்டின் நன்மைகளை சிந்திக்கும் தலைவர் ஒருவர் அதிகாரத்திற்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு இடையூறு விளைவிப்பதே சூழ்ச்சி மற்றும் அடிப்படைவாத குழுக்களின் நோக்கம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
முன்னைய காலத்தில் பலருக்கு தொழில்வாய்ப்புக் கிடைத்தாலும் வறிய மக்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.
செழிப்பான நோக்கங்களின் கொள்கைப் பிரகடனத்தின் மூலம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அவ்வாறே நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேர்தல் நிறைவடைந்தவுடன் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பட்டதாரிகளுக்காக திட்டமிடப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தி எய்தியவர்களுக்கு பயிற்சிகளுடன் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான வேலைத் திட்டமொன்றை தயாரிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
காட்டு யானைகளின் அச்சுறுத்தல், போதைவஸ்து இடையூறு மற்றும் தெஹிகொலல மகா வித்தியாலயத்தின் குறைபாடுகள் தொடர்பாக கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
கைவிடப்பட்ட மொரன்எல நீர்ப்பாசனத் திட்டத்தை விரைவில் நிறைவு செய்து மஹியங்கனை பிரதேசத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதாக ஜனாதிபதி இதன்போது வாக்குறுதியளித்தார்.
Tags :
comments